அதன் பிறகான நாட்களில் ‘அத்தானையும் உன்னையும் பார்க்காமல் இருக்க முடியவில்லை அக்கா. வித்தி வேறு அக்கா வீட்டுக்கு போவோம் வா என்று தொனதொனக்கிறாள். நான் அத்தானிடம் எதுவும் கேட்கமாட்டேன். வரட்டுமா?’ என்று அவளிடம் அவன் கேட்கும் போதெல்லாம், மனதை கல்லாக்கிக்கொண்டு மறுத்தாள் மித்ரா.
அப்போதெல்லாம், அக்கா சொன்னதுபோல அது சின்னச் சண்டையல்ல என்னவோ கொஞ்சம் பெரிது போலும் என்று நினைத்திருக்கிறான். அதையே தமக்கையிடம் வாய்விட்டுக் கேட்டு, அவள் மழுப்பும் போதெல்லாம் என்னவாக இருக்கும் என்று மண்டையை பிய்த்தும் இருக்கிறான்.
ஆனால் குழந்தை பிறந்தும் அத்தான் வரவில்லை என்பது, சண்டை ஏதோ மிகப் பெரியது தான் என்பதை உணர்த்தினாலும், “என்னதான் கோபம் என்றாலும் பிள்ளை பிறக்கும் போதுமா அதை இழுத்துப் பிடிப்பார்கள்.” என்று கேட்டான்.
மித்ராவும், அதுநாள் வரை அவனிடம் மறைத்தது போதும் என்று எண்ணினாளா அல்லது அவளுக்குமே தன் வேதனைகளை யாரிடமாவது கொட்டவேண்டும் என்று தோன்றியதா.. நடந்தவை அனைத்தையும் கண்ணீரோடு சொன்னாள்.
கேட்டவனோ கொதித்துப் போனான்! கீர்த்தனனின் சட்டையை பிடித்து நியாயம் கேட்கிறேன் என்று கொதித்து எழுந்தவனை அடக்குவதற்குள் அவளுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.
அதன்பிறகு வந்த ஒரு வாரத்தை மித்ரா வைத்தியசாலையில் கழித்த போதிலும் கீர்த்தனன் எட்டியும் பார்க்கவில்லை. என்னதான் அழைப்பை ஏற்காவிட்டாலும், மெசேஜ்ஜை படிக்காமல் இருக்க முடியாதே!
ஆக, பிள்ளை பிறந்துவிட்டான் என்று தெரிந்தும் அவன் வரவில்லை! அப்போ அவன் கேட்ட விவாக ரத்தும் நிஜமானது! மகனை பற்றிய எண்ணமும் நிஜமானது! கசப்பான நிதர்சனம் கசந்து வழிந்தபடி நெஞ்சுக் குழிக்குள் விசமாக இறங்கியது!
சத்யனின் உதவியோடு வேறு வீடு பார்த்துக்கொண்டவள், வைத்தியசாலையில் இருந்து மகனோடு வாடகை வீட்டுக்கே குடிபோனாள்.
அவர்களது மகன் சொந்த வீட்டுக்குத்தான் முதன்முதலில் வரவேண்டும் என்று அடம்பிடித்து வீடு வாங்கியது என்ன, இன்று வாடகை வீட்டுக்கு அவன் போவது என்ன?
எந்தப் பக்கம் திரும்பினாலும் காயங்களும் வேதனைகளும் வலிகளும் மட்டுமே நிறைந்து கிடந்தது. எதை எண்ணி உள்ளத்தை தேற்றுவது என்று அறியாமல் தவித்தாள். அதை அதிகரிக்கும் விதமாக, மீண்டும் கீர்த்தனனின் வக்கீலிடம் இருந்து கடிதம் வந்தது, விவாக ரத்துக்கு அவளை கையெழுத்திடச் சொல்லி!
அன்று வாயால் சம்மதித்தாலும், கணவனின் மனமாற்றத்துக்காக அவள் காத்திருந்தது வீண் என்று விளங்க, ஒரு வக்கீலின் மூலம் ‘விவாக ரத்து தருகிறேன். மகனுக்கு அப்பாவாய் சகலதையும் அவர் செய்ய வேண்டும்’ என்று பதில் அனுப்பினாள் மித்ரா.
அடுத்த வாரமே, ‘அந்தப் பிள்ளை என்னுடையதுதான் என்று நம்புவதற்கில்லை’ என்று பதில் வந்தபோது, முற்றிலுமாக உடைந்து, துகள் துகள்களாய் சிதறிப்போனாள் மித்ரா.
ஆனாலும், வேதனைகளும் சோதனைகளும் எத்தனை வந்தாலும் அது அவளுக்கு மட்டுமே வரட்டும்! அவள் பெற்ற மகனும் அவளைப்போல் தந்தை இல்லாமல் இருந்துவிடக் கூடாது என்றெண்ணி, உள்ளத்தை கல்லாக்கிக்கொண்டு dna பரீட்சையை கணவனையும் குழந்தையையும் கோர்ட் மூலமாக செய்ய வைத்தாள்.
முகம் இறுக, அவமானக் கன்றலோடு சம்மதித்தான் கீர்த்தனன். அந்த டெஸ்ட் அது அவன் குழந்தைதான் என்று நிரூபித்தபோது, மறுபடியும் ஒருமுறை மனதளவில் மரணித்தான் கீர்த்தனன்.
என் பிள்ளையை நானே அப்படிச் சொல்லிவிட்டேனே. என் உதிரத்தில் உதித்தவனின் பிறப்பையே களங்கப் படுத்திவிட்டேனே. அதற்குக் காரணம் அவள் தானே! அந்த கோபம் இன்னுமே அவனை உலுக்க, விவாக ரத்தை கையில் எடுத்துவிட்டே ஓய்ந்தான்.
அதை அவனுக்கு வழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தவளோ, கட்டிலில் விழுந்து கதறித் தீர்த்தாள். ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுது கரைந்தவளின் கண்ணீர் கூட ஒரு கட்டத்தில் வற்றிப் போனது.
தாய்மை அடைந்த போதிலும், குழந்தையை பெற்றெடுத்த பிறகும் தன்னை வந்து பார்க்காத அன்னையின் செயல் அவளை வருத்தவே இல்லை!
“என் மானம் மரியாதையை வாங்கியவள் வாழ்க்கை நன்றாகவே இருக்காது என்று சொன்னேனே.. பார்த்தாயா, அவன் விசாவை வாங்கிக்கொண்டு, பிள்ளையையும் கொடுத்துவிட்டு இவளைத் துரத்திவிட்டான்.” என்று சண்முகலிங்கம் கொக்கரித்த போதும் அவளுக்கு வலிக்கவில்லை. அந்தளவுக்கு மரத்துப்போனாள்!
இப்படியே நாட்கள் கடந்த வேளையில்தான் ‘இல்லையில்லை! உன் மனது இன்னும் மரத்துப் போகவில்லை, அதில் இன்னும் கொஞ்சம் உயிர் மிச்சம் இருக்கிறது’ என்பதை, அன்று கடையில் வைத்து லக்ஷ்மி அம்மாளையும், கீதனையும் சந்தித்த நொடியில், அவளது உயிர் துடித்த துடிப்பில் உணர்ந்தாள் மித்ரா.
இந்த நினைவுகள் மித்ராவுக்குள் ஓடிக்கொண்டு இருந்த அதே நேரம், அங்கே பவித்ரா அஞ்சலி வீட்டுக்கு சந்தோஷுடன் காரில் சென்றுகொண்டிருந்தாள்.

