பேசும் சக்தியை இழந்தவளாக, போகும் நீக்கோவையே பார்த்தபடி நின்றிருந்தாள் மித்ரா.
அழக்கூடத் தோன்றாமல் அப்படியே அவள் நின்ற மணித்துளிகள் எத்தனையோ.. அவளே அறியாள்!
வேலைக்கு போவதற்காக அவள் வைத்திருந்த அலாரம் அடித்தபோதும் பிரக்ஜை அற்றுக் கிடந்தவள், அதனது தொடர்ந்த அலறலில் சற்றே தன்னிலை மீண்டாள். பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போன்று நெஞ்சம் கனத்தாலும், அப்படியே இருந்துவிட முடியாதே!
அவள் எழுந்துகொள்ள வேண்டும், குளித்துத் தயாராக வேண்டும். வேலைக்குப் போகவேண்டும். நாளாந்த வாழ்க்கையை ஓட்டியே ஆகவேண்டுமே!
எழுந்து தயாராகி வீட்டைப் பூட்டுவதற்காக திறப்பினை எடுத்தவளுக்கு நீக்கோவோடு சந்தோசமாய் கடந்துபோன அந்த ஒருவாரம் கண்முன்னால் வந்து நின்று கண்ணீரைச் சொரிய வைத்தது. சிறுபிள்ளைகள் போல் யார் முதலில் படிகளை இறங்கி முடிப்பது, யார் முதலில் டிரைவர் சீட்டில் இருப்பது என்று போட்ட சண்டைகள் அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து தாக்க, கண்ணை மறைத்த கண்ணீரோடு கதவை பூட்டிக்கொண்டு திரும்பி படிகளில் காலை வைத்தவள் கால் இடறி அந்த மாடிப்படியில் விழுந்து உருண்டாள்.
அப்படியே மயங்கியும் போனாள்.
கண்விழித்த போது, அவளெதிரே இருந்த சத்யன், “என்னக்கா இது? கொஞ்சம் கவனமாக இருக்கமாட்டாயா?” என்று வடித்த கண்ணீரில் அவளது உள்ளம் வெடித்துச் சிதறியது. தன்னை மறந்து நடந்தவைகளை சொல்லிக் கதறத் தொடங்கினாள்.
கேட்டவனுக்கோ அதிர்ச்சியில் மண்டையே வெடிக்கும் போலிருந்தது. தான் பள்ளிக்கூடத்தால் டூர் சென்றிருந்த அந்த ஒற்றை வாரம் அக்காவின் வாழ்வில் இவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்கி விட்டதா?
நெஞ்சம் குலுங்கினாலும், வேகமாக தன் அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு அவளைத் தேற்றுவதில் ஈடுபட்டான்.
அன்றைய நினைவில் இன்றும் கண்கள் கலங்க, “அன்றுதான் அப்படி அழுதாள். அடுத்த இரண்டு நாட்களும் ஹாஸ்பிட்டலில் இருக்கும் வரைக்கும் சூன்யத்தையே வெறித்துக்கொண்டு அமைதியாகவே இருந்தாள். அதன் பிறகோ ஒரு இயந்திர தனமான அக்காவை தான் நான் பார்த்தேன். எப்போதும் ஒருவித அமைதி. எல்லாம் வெறுத்துப் போனது போல எல்லாவற்றிலும் ஒரு சலிப்பு. ஒரு சிரிப்பு, நண்பர்கள், பார்ட்டி, நல்ல உடைகள் இப்படி எதுவுமே கிடையாது. யாரையும் அவளை நெருங்க விட்டதே இல்லை அவள். எனக்கும் வித்திக்கும் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வாள். மற்றும்படி எங்களைக் கூட ஒரு அளவை தாண்டி நெருங்க விட்டதில்லை.” என்றான் வேதனையோடு.
“தொடர்ந்து ஒரு வெறியோடு படித்தாள். நல்ல வேலையும் கிடைத்தது. அதன் பிறகான அந்த ஐந்து வருடங்கள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. அந்த நாட்களில் எத்தனையோ தடவை திருமணம் செய்துகொள் அக்கா என்று கேட்டிருக்கிறேன். ஒரேயடியாக மறுத்தவள், எப்படி உங்களை மணக்க சம்மதித்தாள் என்பது இன்றுவரை எனக்குப் புரியாத புதிர்தான். எதையாவது நான் கேட்டு, அவள் இந்த திருமணத்தையே நிறுத்திவிட்டாலும் என்று பயந்து வாயை மூடிக்கொண்டேன். அதன் பிறகோ.. “ என்றவனின் தொண்டை அடைத்தது.
தொண்டையை செருமிக்கொண்டு, “கேட்பதற்கு அவசியம் வரவில்லை..” என்று முடித்தான். தமக்கை வாழ்ந்த வாழ்க்கை.. சொர்க்கம் அல்லவா! அவனே எத்தனை தடவைகள் கண்ணாரக் கண்டு நெஞ்சார நெகிழ்ந்திருக்கிறான். அவன் கண்தான் பட்டதோ!
கீர்த்தனனோ அப்படியே அமர்ந்திருந்தான். ஆவலோடு அவனைப் பார்த்தான் சத்யன்.
எல்லாவற்றையும் சொல்லிவிட்டான். இனியாவது மனம் மாற மாட்டாரா? மாறி அக்காவின் சந்தோசத்தை மீட்டுக் கொடுக்கமாட்டாரா? மறுபடியும் அவள் வாழ்வில் மலர்ச்சி தோன்றாதா?
ஆர்வமிகுதியால் உள்ளம் அடித்துக்கொள்ள, “அத்தான்..” என்று அழைத்தான்.
அந்த அழைப்பில் தன்னிலை மீண்டு தலையை உயர்த்தி அவனைப் பார்த்தான் கீர்த்தனன். என்ன நினைக்கிறான் என்பதை உணர முடியாத பார்வை! சட்டென்று எழுந்தவன் எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து நடந்தான்.
அதிர்ச்சியோடு கீர்த்தனனின் முதுகை வெறித்தான் சத்யன்.
அனைத்தையும் சொல்லியும் கொஞ்சம் கூட இரக்கம் காட்ட மறுத்துவிட்ட அவன்மேல் அதுநாள் வரையிலும் இல்லாத அளவுக்கு ஆத்திரமும் வஞ்சினமும் உண்டானது சத்யனுக்கு.
பெரும் ஆவலை சுமந்து வந்தவனின் மனம், முழுமையான ஏமாற்றத்தை தழுவ பெரும் புயலே மையம் கொண்டது அவன் மனதில்!

