தனிமைத் துயர் தீராதோ 32 – 1

மித்ரா கடந்த காலத்தின் நினைவுகளில் இருந்து மீள முடியாதவளாக அதிலேயே ஆழ்ந்துபோய் கிடந்தாள்.

 

அன்று எப்படி நீக்கோ நிராதரவாக அவளை விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே போனானோ, அதேபோல் அவளது கணவனும் அவளை விட்டுவிட்டு மாடிக்கு குடிபோனதில் அவளின் நினைவுகள் வந்து நின்றது.

 

அப்படி அவன் செய்தது இதயத்தை கசக்கிப் பிழிந்த போதிலும், அவன் கோபம் ஆறும் வரைக்கும் பொறுத்திருப்போம் என்று காத்திருந்தாள் மித்ரா.

 

அப்படி அவனது கோபம் ஆறிய பிறகு, எல்லாவற்றையும் சொல்லி, ஏன் சொல்லாமல்விட்டாள் என்பதையும் சொல்லி மன்னிப்புக் கேட்கவேண்டும். கட்டாயம் என் கீதன் என்னை மன்னிப்பார். என்னை ஏற்றுக்கொள்வார். திரும்பவும் நாங்கள் சந்தோசமாக வாழ்வோம் என்று அசைக்க முடியாத நம்பிக்கையோடு அவள் காத்திருக்க, அவனோ விவாக ரத்துப் பத்திரத்தை அனுப்பிவைத்தான்!

 

அவள் தலையில் இடியே இறங்கியது. அவன் சட்டப்படி அவளிடம் இருந்து பிரிவைக் கோருகிறான் என்பதை நம்பவே முடியவில்லை. இருக்காது! என் கீதன் அந்தளவு தூரத்துக்கு போகமாட்டார்!

 

இல்லை! அவன் போயிருக்கிறான் என்பதை அவள் கையிலிருந்த விவாகரத்து பத்திரம் அடித்துச் சொன்னது.

 

பரிதவித்துப்போய் மேல்மாடிக்கு ஓடினாள். அதை அவன்முன்னால் நீட்டி, “என்ன கீதன் இது?” என்று கேட்டாள் தவிப்போடு.

 

புருவங்கள் சுருங்கப் பார்த்துவிட்டு, “பார்த்தால் தெரியவில்லை?” என்றான் அவன்.

 

“அது தெரிகிறது. ஆனால் ஏன்? நான் செய்தது பிழைதான். அதை வேண்டுமென்றே மறைக்கவில்லை. எனக்கு அது ம…” என்றவளை,

 

“போதும் நிறுத்து!” என்றவனின் உக்கிரம் வாயடைக்கச் செய்தது.

 

“உன் பேச்சைக் கேட்கவோ, முகத்தைப் பார்க்கவோ பிடிக்கவில்லை என்று அன்றே சொல்லிவிட்டேன். இனி என்ன பேசுவதாக இருந்தாலும் கோர்ட்டில் பேசிக்கொள்.”

 

கோர்ட்டா? அதிர்ந்தது அவள் நெஞ்சம்! விசாரிக்காமலே தண்டனை வழங்கத் துடிக்கும் கணவனை கண்ணீரோடு பார்த்தாள் மித்ரா.

 

“நான் செய்தது பிழைதான். மறைத்தது மகா தப்புத்தான். அதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன். ஆனால், இந்த விவாக ரத்து மட்டும் வேண்டாம். நீங்கள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது. எனக்காக இல்லாவிட்டாலும் நம் குழந்தைக்காகவாவது என்னை மன்னிக்கக் கூடாதா?” என்றாள் கண்ணீருடன்.

 

சரேலெனத் திரும்பியவனின் விழிகள் அவளைப் பொசுக்கின. “உன் பிள்ளை என்று சொல்! என் பிள்ளை என்பதற்கு என்ன சாட்சி?” என்று கேட்டான்.

 

“ஐயோ..!” காதுகள் இரண்டையும் பொத்திக்கொண்டு கதறிவிட்டாள் மித்ரா.

 

“ஏன்.. ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? அது நம் குழந்தை. உங்கள் மகன். என் வயிற்றில் உதித்தான் என்பதற்காக அவனை கேவலப் படுத்தாதீர்கள். என் அப்பாவே என்னை இப்படிச் சொல்லிவிட்டாரே என்று தவித்துப்போவான். என்னை நம்புங்கள் கீதன். அவன் உங்கள் பிள்ளைதான்..” என்றவள் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு கதறத் தொடங்கினாள்.

 

காதலில் கசிந்துருகி ஓருடல் ஈருயிராக வாழ்ந்து, ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்து, ஆசையாசையாக அவள் சுமக்கும் அவன் மகவைப் பற்றி இப்படிச் சொல்லிவிட்டானே!

 

“உன்னை நம்புவதா? எந்த..” என்றவனை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள் மித்ரா.

 

“தயவுசெய்து திரும்பவும் எதையும் சொல்லிவிடாதீர்கள். அதைத் தாங்கும் சக்தி எனக்கில்லை. உங்களுக்கு விவாக ரத்துத்தானே வேண்டும். நான் தருகிறேன். அதற்காக குழந்தை உங்களது இல்லை என்று மட்டும் சொல்லாதீர்கள்.” என்றவள், தொய்ந்துபோய் வெளியேறினாள்.

 

அதன்பிறகோ விரக்திகொண்ட மனதுடனேயே மித்ராவின் நாட்கள் நகர்ந்தன. வயிற்றில் குழந்தையின் அசைவுகள் தெரியும் போதெல்லாம் மனம் கணவனை நாடி ஓடி அவன் கால்களில் விழுந்து கதறும்!

 

என்னை மன்னியுங்களேன்.. நம் பிள்ளையை பார்க்க வாருங்களேன்.. அவன் அசைகிறான்.. கால்களால் உதைக்கிறான்.. அப்பா எங்கே என்று கேட்கிறான்.. அவனுக்காக உங்கள் கோபத்தை விரட்டக் கூடாதா.. என்று மனதால் அவனிடம் தினம் தினம் மன்னிப்பை யாசித்தாள்.

 

நாட்கள் கோபத்தை ஆற்றும். கணவன் திரும்பி வருவான். ஏதோ கோபத்தில் விவாக ரத்துக்கு விண்ணப்பித்தாலும் அதை செயலாற்ற மாட்டான். அவன் அப்படியானவன் அல்ல என்று மித்ராவின் மனம் அப்போதும் உருப்போட்டது.

 

அசைக்கமுடியாத அந்த நம்பிக்கையோடு அவளது நாட்கள் நகர்ந்ததே தவிர மாற்றங்கள் எதுவும் நிகழவேயில்லை. கீர்த்தனன் கல்லாய் நின்றான். எந்த விதத்திலும் சற்றும் அசைய மறுத்தான். மித்ராவுக்கு குழந்தைப் பேற்றுக்கான நாளும் விரைந்து வந்தது.

 

அன்று மித்ராவின் பிறந்தநாள். கடந்த இரண்டு வருடங்களில் அந்த நாளை எவ்வளவு இனிமையாகக் கொண்டாடினாள். இன்பமாய் கழிந்த கணங்கள் எல்லாம் இப்போது கனமாய் நெஞ்சை அழுத்த, அது கண்ணீராய் வெளியேறிக்கொண்டே இருந்தது.

 

error: Alert: Content selection is disabled!!