தனிமைத் துயர் தீராதோ 33 – 1

“என்னை எதற்கு அண்ணா அங்கே வரச்சொன்னாள் அஞ்சு?” காரை செலுத்திக்கொண்டிருந்த அர்ஜூனிடம் கேட்டாள் பவித்ரா.

 

தனியாக இருக்க அலுப்பாக இருந்தால் அஞ்சலியையும் கூப்பிட்டுக்கொள் என்று சொல்லிவிட்டு கீர்த்தனன் சத்யனை சந்திக்க சென்றுவிட, இவள் அஞ்சலிக்கு அழைத்தபோது, அவளோ இவளை அங்கே வரச் சொல்லியிருந்தாள்.

 

“அவள் என்னவோ ஷாப்பிங் போகப்போகிறாளாம்.” என்று அர்ஜூன் சொல்லி முடிக்க முதலே, “அய்யய்யோ.. திரும்பவும் ஷாப்பிங்கா? காரை திருப்புங்கள். நான் வீட்டுக்கே போகிறேன்.” என்று அலறினாள் பவித்ரா.

 

அத்தையின் அலறலில் அருகில் அமர்ந்திருந்த சந்தோஷ் தன் கொட்டைப்பாக்கு விழிகளை விரித்துப் பார்க்க, அர்ஜூனோ விழுந்து விழுந்து சிரித்தான்.

 

பின்னே, அஞ்சலியோடு கடைத்தெருவுக்கு சென்றால் என்னாகும் என்கிற முன் அனுபவம் பவித்ராவுக்கு ஏற்கனவே உண்டுதானே!

 

“இனி ஒன்றும் செய்யமுடியாது. அதனால் வா! நீ இல்லாவிட்டால் என்னை அல்லது அருணாவைத்தான் பிடித்துக்கொள்வாள் அந்தக் குட்டிப்பிசாசு.” என்றவனை கண்ணாடி வழியே முறைத்தாள் பவித்ரா.

 

“அதுதானே பார்த்தேன்! என்னடா அண்ணா என்றுமில்லாமல் இன்று என்னைக் கூட்டிக்கொண்டு போக வந்திருக்கிறாரே என்று! எல்லாம் திட்டமிட்ட சதி.” என்றவளை பார்த்து இன்னுமே நகைத்தான் அர்ஜூன்.

 

வீடும் வந்துவிட, தமையனின் காரைக் கண்டுவிட்டு துள்ளல் நடையோடு அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தாள் அஞ்சலி. பரிதாபமாக அர்ஜுனைப் பார்த்து விழித்தாள் பவித்ரா.

 

பொங்கிய சிரிப்பை அடக்கிக்கொண்டு, “சந்துக்குட்டி! நீ வா கண்ணா. நாம் அருணா ஆன்ட்டியிடம் போவோம்.” என்று அவனை வாங்கிக்கொண்டு, தங்கையின் புறமாகத் திரும்பி, “இப்படியே கிளம்புகிறீர்களா?” என்று கேட்டான்.

 

“ஆமாம் அண்ணா!” என்றுவிட்டு பவித்ராவை இழுத்துக்கொண்டு நடந்தாள் அஞ்சலி. பலியாடாக இழுப்பட்டாள் பவித்ரா.

 

இருவருமாக கடைக்குள் சென்றதும், கண்ணைக் கவரும் ஆடைகள் அவர்களை கவர்ந்து இழுத்துக்கொண்டது.

 

தனக்கு நன்றாக இருக்கும் என்று தோன்றிய சில உடைகளை தேர்ந்தெடுத்த அஞ்சலி, “பவிக்கா..! இதையெல்லாம் போட்டுப் பார்த்துவிட்டு வருகிறேன்.” என்றுவிட்டு செல்ல, பவித்ரா விழிகளால் மட்டும் அங்கே தொங்கிக்கொண்டிருந்த உடைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.

 

அபோது ஒரு அன்னையும், தளிர் நடை பயிலும் குழந்தையும் கடைக்குள் நுழைந்தனர். வெளியே பெய்துகொண்டிருந்த மழைக்கு பாதுகாப்பாக பிடித்துவந்த குடையை கடை வாசலில் நின்று தாய் மடக்கிக்கொண்டு நிற்க, அந்தக் குழந்தையோ தத்தக்கா பித்தக்கா என்று உள்ளே ஓடிவந்தது.

 

ஏற்கனவே மழைக்குள் இருந்து கடைக்குள் வந்தவர்களின் ஷூக்களில் இருந்த ஈரம் நிலத்தில் படிந்திருந்ததாலோ, அல்லது நன்கு நடை பழகாத குழந்தை என்பதாலோ அந்தக் குட்டி கால் தடுமாறி விழப்போக, பதறிப்போய் குழந்தை விழுந்துவிடாமல் பிடிக்க ஓடினாள் பவித்ரா.

 

அதே நேரம் பக்கவாட்டில் இருந்த ஆண்களுக்கான உடைப் பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு ஆண் இவள் புறமாகத் திரும்ப, பவித்ரா அவனோடு நேருக்கு நேராக மோதிக்கொள்ளவும், குழந்தையின் தாய் குடையை போட்டுவிட்டு ஓடிவந்து குழந்தையை தூக்கிக்கொள்ளவும் சரியாக இருந்தது.

 

அவனோடு இவள் மோதிய வேகத்துக்கு, திடகாத்திரமான அந்த ஆண் அப்படியே நிற்க, இவளோ சுவரில் அடிபட்ட பந்தாக அவனில் மோதி பின்பக்கமாக சரியத் தொடங்கினாள். இப்போது அவன் இவளை இடையில் பற்றித் தாங்கிக்கொண்டான். அச்சத்தில் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு அவனையே பற்றிக்கொண்டாள் அவள்.

 

நொடிகள் சில கடந்தபிறகே தான் நிற்கும் நிலை உச்சியில் அடித்ததுபோல் உறைக்க, விதிர்விதிர்த்துப்போய் சட்டென அவனிடம் இருந்து விலகி, “சாரி.. சாரி..” என்று பதட்டத்தோடு சொன்னவளுக்கு விழிகள் மெலிதாகக் கலங்கியது.

 

கலங்கிச் சிவந்த முகமும் கலங்கிய விழிகளுமாக நின்றவளை நிமிர்ந்தும் பாராது, “பரவாயில்லை..” என்றுவிட்டு மறுபக்கமாகத் திரும்பி தன்னுடைய நீளக்கால்களால் வேகமாக நடந்தவனின் நடையை, “ஜான் அண்ணா..!” என்ற உற்சாகக் குரல் நிறுத்தியது.

 

திரும்பிப் பார்த்தவன், “ஹேய் எலிக்குஞ்சு…! இங்கே என்ன செய்கிறாய் நீ?” என்று கேட்டான் வரவழைத்துக்கொண்ட புன்னகையோடு.

 

“ம்…! இறைச்சிக் கறியும் சோறும் சாப்பிட்டுப் போகலாம் என்று வந்தேன்.”

 

விழிகள் குறும்புச் சிரிப்பில் பளபளக்க, “ஓ…! சாப்பாடு நன்றாக இருந்ததா?” என்றான் அவன்.

 

விழிகளில் குறும்பும், இதழ்களில் நகைப்பும், களையான முகமுமாக நின்றவனின் தோற்றம் பவித்ராவின் பெண் மனதுக்குள் புயலென புகுந்து, சூறாவளியாக மாறிச் சுழற்றி அடிக்கத் தொடங்கியது.

 

சற்றுமுன், அவனது அணைப்பும், இடையை அழுத்தமாகப் பற்றிய வலிமையையும் வேறு நினைவுகளில் வந்து என்னென்னவோ செய்தது.

 

அதை அறியாதவனோ, இடுப்பில் கைகளை கொடுத்து தன்னை முறைத்த அஞ்சலியை பார்த்து அப்போதும் நகைத்தான்.

 

தன் பொய்க் கோபத்தை இழுத்துவைக்கத் தெரியாதவளும், “சரி அதை விடுங்கள். எப்படி இருக்கிறீர்கள்? ஏன் இப்போதெல்லாம் நீங்கள் விளையாட வருவதில்லை? வேலைக்கு போகிறீர்களா? உங்களை காணவே முடிவதில்லையே.” என்று கேள்விகளை அடுக்க, அவனது நகைப்பு புன்னகையாக மாறியது.

 

அந்தப் புன்னகைக்குள் தான் தொலைவது போன்றதொரு உணர்வு பவித்ராவுக்குள். நெஞ்சு படபடக்க மெல்ல அஞ்சலியின் அருகில் சென்று நின்றுகொண்டாள்.

 

“ஆமாம் அஞ்சு. வேலை கிடைத்திருக்கிறது. ஆனாலும் நேரம் கிடைத்தால் விளையாடப் போவேன். உன்னைத்தான் அங்கே காண முடிவதில்லை.” என்றவனின் பார்வை அப்போதுதான் அஞ்சுவின் அருகில் நின்றவளின் மீது பட்டது.

 

இவள் தானே என்னோடு மோதியவள்..! பவித்ரா விழிகள் படபடக்கத் தொடங்க பார்வையை தழைத்துக் கொண்டாள்.

 

“இது பவிக்கா ஜான் அண்ணா.” என்று அறிமுகம் செய்துவைத்தாள் அஞ்சலி.

 

 

error: Alert: Content selection is disabled!!