அன்று மட்டுமல்ல, அடுத்தநாளும் அவன் கோப முகமே கண்முன்னால் நின்று அவளை வாட்டி வதைத்தது.
எங்காவது அவனைக் கண்டால் எப்படியாவது சமாதானப்படுத்திவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அன்றும் வெளியே கிளம்பியவளின் விழிகள் அவனையே தேடின. அன்று ஏமாற்றத்தை வழங்கினாலும் அதற்கு அடுத்தநாள் அவளுக்கு தரிசனம் கொடுத்தான் அவன்.
வரிசைப் பற்கள் பளீரிட, “ஹாய்…” என்றபடி அவன் காரிலிருந்து இறங்கி வந்தபோது, இவளுக்கோ துள்ளிக் குதிக்கலாம் போலிருந்தது.
அவனைக் கண்டது சந்தோசம் என்றால், கோபத்தைக் கைவிட்டுவிட்டு பழையபடி புன்னகை மன்னனாக அவனாக வந்து பேசியது பெரும் சந்தோசத்தை கொடுத்தது.
“பார்த்தாயா? உன் டொச் வகுப்பு முடியும் நேரம் பார்த்து சரியாக வந்திருக்கிறேன்.” என்று வேறு அவன் சொல்ல, மனம் துள்ள விழிகள் படபடக்க அவனைப் பார்த்தாள் பவித்ரா.
என்ன சொல்வது, என்ன கதைப்பது என்றே தெரியாத நிலை! அவனோ இயல்பாக முன்பக்க கதவை திறந்து, “ஏறு. காரில் போய்க்கொண்டே கதைப்போம்.” என்றான்.
முன் பக்கமா?
அவள் தயங்க, “என்ன? ஏன் அப்படியே நிற்கிறாய்?” என்று கேட்டான் அவன்.
அப்போதுதான் அவன் ஒருமையில் கதைப்பதும் கருத்தில் பட மனம் ஏனோ கோபம் கொள்வதற்கு பதிலாக ஆனந்தம் தான் கொண்டது. அந்த ஆனந்தம் சற்றுமுன் இருந்த தயக்கத்தை மறக்கடிக்க, முன்பக்கமே ஏறிக்கொண்டாள் பவித்ரா.
காரை இயக்கிக்கொண்டே, “இப்போதே உடனேயே வீட்டுக்கு போகவேண்டுமா? அல்லது ஒரு கஃபே குடித்துவிட்டுப் போவோமா? வேலை முடிந்ததும் உன்னை பார்க்கும் ஆசையில் ஓடி வந்ததில் வயிற்றுக்கு ஒன்றும் போடவில்லை.” என்றான் அவன்.
அவனோடு தனியாகவா? தயக்கமாக இருந்த போதிலும், பசியோடு இருக்கிறானே என்கிற கரிசனையில், “கஃபே குடித்துவிட்டே போவோம். அண்ணா வர இன்னும் ஒருமணி நேரம் ஆகும்.” என்று சம்மதித்தாள் பவித்ரா.
கஃபே அருந்தும்போது, அவளது குடும்பத்தை பற்றி விசாரித்தான்.
அண்ணாவுக்கும் அக்காவுக்கும் திருமணம் முடிந்துவிட்டது என்று அவள் சொன்னபோது, “ஓ.. அப்போ எங்கே உன் அண்ணி? எங்கே இருக்கிறார்?” என்று கேட்டான் அவன்.
விழிகள் கலங்க, “அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.” என்றாள் பவித்ரா.
சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “ஏன்?” என்று மெல்லக் கேட்டான் அவன்.
“அது.. அது.. அதைப்பற்றி நாம் பேசவேண்டாமே..”
“ஓ.. சாரி! என்ன இருந்தாலும் உங்கள் குடும்ப விஷயத்தை நான் கேட்டிருக்கக் கூடாது”
பதறிப்போனாள் பவித்ரா. “தயவுசெய்து அப்படி எதுவும் நினைக்காதீர்கள். சொல்லக் கூடாது என்றில்லை. அதை சொல்லத் தொடங்கினால் நான் அழுது விடுவேன். அதனால் தான்.. அதோடு, என் அண்ணா.. அவர் எங்களுக்காக பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.. ஆனாலும் அவர் வாழ்க்கையில் எந்த சந்தோசமும் நிலைக்கவில்லை. திருமண வாழ்க்கையாவது அவருக்கு நன்றாக அமையும் என்று பார்த்தால்.. எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிற்கிறார்.” என்றவளின் விழிகளில் கண்ணீர் திரண்டது.
தலையை குனிந்து அதை மறைக்கமுயன்றாள். அவளையே சற்றுநேரம் பார்த்திருந்துவிட்டு, முகத்தில் கனிவைக் கொண்டுவந்து, மேசையில் இருந்த அவளின் கரத்தை மென்மையாகப் பற்றினான்.
திடுக்கிட்டுப்போய் அவள் நிமிர்ந்து பார்க்க, அவன் விழிகளோ அவள் விழிகளைக் கவ்விக் கொண்டன!
அதிலிருந்து விடுபட முடியாமல் அவள் அப்படியே உறைய, பற்றிய கரத்தை மெல்ல அழுத்தி, “எல்லாம் சரியாகும். கஃபே ஆறுகிறது. எடுத்துக் குடி.” என்றான் இதமான குரலில்.
கன்னங்களில் செம்மை பரவ, சட்டென அவனிடம் இருந்து தன் கரத்தை உருவிக்கொண்டு, இரண்டு கைகளாலும் கப்பை பற்றிப் பருகினாள்.
அவன் தன்னையே வைத்த விழி வாங்காமல் பார்ப்பது இவளது கடைக்கண் பார்வையில் விழுந்து, உணர்வுகளின் பேராட்சிக்குள் அவளை இழுப்பதை தாங்க முடியாமல், “உங்களை பற்றிச் சொல்லுங்கள் ஜான். உங்கள் வீட்டில் நீங்கள் மட்டும் தானா?” என்று விசாரித்தாள்.
“ஆமாம்! என் அம்மா அப்பாவுக்கு நான் ஒரேயொரு ஆண்பிள்ளை தான். மற்றும்படி என்னைப்பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. நல்ல கம்பனி ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறேன்.” என்றவன், கண்ணைச் சிமிட்டி, “அப்போ உன் வீட்டில் அடுத்த கல்யாணம் உனக்குத்தான். அது எப்போது?” என்று குறும்போடு கேட்டான்.
அவள் முகமோ சட்டெனச் சிவந்து போனது. “இப்போது அதற்கு என்ன அவசரம்?” என்றாள் நாணத்தோடு.
“ஆகா..! உன் வாய் ஒன்று சொல்கிறது. முகம் வேறு ஒன்று சொல்கிறதே.” என்றான் அவன்.
என்ன சொல்கிறதாம்? கண்டுபிடியேன்! இரத்தமெனச் சிவந்துவிட்ட முகத்தை அவனுக்குக் காட்ட வெட்கி, பக்கவாட்டில் திருப்பிக்கொண்டாள் பவித்ரா.
“மாப்பிள்ளை தயாரா?” திரும்பவும் கேட்டான் அவன்.
“இன்னும் இல்லை..” என்றவளுக்கு காரணமின்றி சிரிப்புத்தான் வந்தது.
“அப்போ… நீ.. யாரையாது…?” என்று அவன் இழுத்தபோது, “ஐயோ ஜான். அப்படி எதுவுமில்லை.” என்றாள் வெட்கச்சிரிப்போடு.
“இல்லை?” ஒற்றைப் புருவத்தை தூக்கி விஷமத்துடன் அவன் கேட்க, அவளால் அவனிடமிருந்து விழிகளை அகற்றவே முடியாமல் போயிற்று!
அவன் கண்களால் சிரிக்க, சட்டென எழுந்துவிட்டாள் அவள். “நேரமாகிறது. போவோமா?” அவன் முகம் பாராமல் கேட்க, “சரி வா..” என்றபடி அழைத்துச்சென்று அவர்களின் வீட்டின் முன்னால் இறக்கிவிட்டான்.
அன்று மட்டுமல்ல, அடுத்துவந்த நாட்களிலும் அதுவே தொடர்ந்தது.

