தனிமைத் துயர் தீராதோ 34 – 3

நின்று திரும்பிப் பார்த்தவனிடம், “சரி நான் வருகிறேன். ஆனால், அண்ணா வரமுதல் கட்டாயம் என்னை இங்கே கொண்டுவந்து விட்டுவிடவேண்டும்.” என்கிற உறுதி மொழியோடும், மனச் சஞ்சலத்தோடும் சம்மதித்தாள் பவித்ரா.

 

அதேபோல், அடுத்தநாள் கீர்த்தனன் வேலைக்குச் சென்றதும் அவளை கோப்லென்ஸ் அழைத்துச் சென்றான் ஜான். கப்பலில் ஊரை சுற்றிப் பார்த்துவிட்டு, நதியோரம் முழுவதும் ஒருவரின் கையை மற்றவர் பற்றியபடி, தோள்கள் உரச நடந்துவிட்டு, மதிய உணவையும் முடித்துக்கொண்டு சொன்னதுபோல நல்லபடியாகவே அவளைக் கொண்டுவந்து விட்டான்.

 

இனி நான்கு மாதங்களுக்கு பார்க்கவே முடியாதா என்கிற கலக்கத்தோடு, கண்கள் கலங்க அவள் விடைகொடுக்க, “முடிந்தால் இடையில் வந்து பார்க்கிறேன். தினமும் செல்லில் பேசுகிறேன்.” என்கிற உத்தரவாதங்களுடன் விடைபெற்றான் அவன்.

 

அதன் பிறகான நாட்கள் பவித்ராவுக்கு மந்த கதியிலேயே நகர, அன்றும் அப்படியே விடிந்தது. ஆனால், காலையில் கண்விழித்த போதே கீதனின் இதழ்களில் அழகிய புன்னகை ஒன்று மலர்ந்தது.

 

இத்தனை நாள் மனப் போராட்டத்துக்கு பிறகு அவன் மனம் தெளிவாகி இருந்தது. அடுத்து தான் என்ன செய்யவேண்டும் என்கிற முடிவும் எடுத்திருந்தான். அந்த முடிவை செயலாற்ற நிர்ணயித்திருந்த நாளான இன்று ஒருவழியாக விடிந்துவிட்டதில் மனதில் ஒருவித பரபரப்பு. ஒருவித உற்சாகம். என்னவோ திடீரென்று பத்து வயது குறைந்துவிட்டாற் போன்றதொரு துள்ளல்.

 

இதற்கெல்லாம் காரணம் இன்று அவனுடைய அருமை புத்திரனின் பிறந்தநாள்! அதுமட்டுமா, அன்று மித்ராவுக்கும் பிறந்தநாள் அன்றோ!

 

கடைசியாக கடந்த அவளின் ஒவ்வொரு பிறந்தநாட்களும் அவள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியவை!

 

இன்றும் அப்படி ஒரு மாற்றத்தை உருவாக்கிவிடும் துடிப்புடன் தன் காலைக் கடன்களை முடித்தான் கீர்த்தனன்.

 

பவித்ரா செய்து வைத்திருந்த காலை உணவை இருவருமாக முடித்ததும், “சந்துவுக்கு ஏதாவது போய் வாங்கி வரலாம் பவி. தயாராகு.” என்றான் கீர்த்தனன்.

 

“சரிண்ணா. ஆனால் அன்றுபோய் அவனுக்கு நகைகள் வாங்கி வந்துவிட்டோமே. இன்று என்ன வாங்கப் போகிறீர்கள்?” என்று கேட்டாள் பவித்ரா.

 

“நகைகளை பற்றி அவனுக்கு என்ன தெரியும் சொல்? அது நம் சந்தோசத்துக்கு செய்வது. அவன் சந்தோசத்துக்கு அவனுக்கு பிடித்த மாதிரி விளையாட்டுப் பொருட்கள் தான் வாங்க வேண்டும். அதுதான்..” என்ற தமையனின் விளக்கத்தை கேட்டவள், தயாராகி வரவும் இருவருமாக கடைக்குச் சென்றனர்.

 

அங்கே மகனுக்கு பிடித்த அத்தனை விளையாட்டுப் பொருட்களையும் வாங்கித் தள்ளினான் கீர்த்தனன். கடைசியாக, “அண்ணா! என்ன இது? இவ்வளவு விளையாட்டுச் சாமான்களையும் ஒரேநாளில் வாங்கிக் கொடுத்தால் அவன் எதையென்று விளையாடுவான். இனிப் போதும். வாருங்கள் போகலாம்.” என்று பவித்ராதான் அவனை இழுத்துக்கொண்டு வந்தாள்.

 

காரில் ஏறும்போது வீதியின் எதிர்பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குள் வித்யா செல்வதை கண்ட கீர்த்தனன், “நீ காரிலேயே இரு பவி. இதோ வருகிறேன்..” என்றுவிட்டு வீதியை கடந்து அந்தக் கடைக்குள் சென்றான்.

 

இரண்டு நாட்களுக்கு முதல் ஆர்டர் கொடுத்த பிறந்தநாள் கேக்கை வாங்க வந்திருந்த வித்யா, “வித்தி…!” என்கிற அழைப்பைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

 

அவளை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்த கீதனைக் கண்டதும் முகத்தை பட்டென திருப்பிகொண்டாள். அதை கவனத்திலேயே கொள்ளாமல், “இங்கே தனியாக என்ன செய்கிறாய்?” என்று கேட்டான் கீர்த்தனன்.

 

“சந்துக்குட்டிக்கு ஆர்டர் கொடுத்த கேக் வாங்க வந்தேன்.” என்றாள் அவள் கடுகடுப்புடன்.

 

சின்னச் சிரிப்புடன், “அப்போ, எனக்கெல்லாம் அழைப்பு இல்லையா?” என்று கேட்டான் கீர்த்தனன்.

 

அவனை பார்த்து முறைத்தாள் அவள். “பெற்ற மகனின் பிறந்தநாளுக்கு அழைப்பை எதிர்பார்க்கும் அப்பா நீங்கள் ஒருவர் தான்.”

 

அதுதானே கடவுள் அவனுக்கு அருளியிருக்கும் வரம்! எழுந்த பெருமூச்சை தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு, “உன் அக்காவுக்கு கேக் வாங்கவில்லையா?” என்று வினவினான்.

 

“சந்துவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையே வேண்டாம் என்ற அக்கா, தன் பிறந்தநாளா கொண்டாடுவார்?” என்றவள், அதற்குக் காரணம் அவன்தான் என்று அவனை முறைத்தாள்.

 

வலித்தது கீர்த்தனனுக்கு. அன்று சுவிசில் வைத்து திவ்யாவின் பிறந்தநாளை பார்த்துவிட்டு அவள் அழுத அழுகையை அவன் அறிவானே! அப்படியானவள், இன்று மகனுக்கு எந்தக் கொண்டாட்டமும் வேண்டாம் என்கிறாள் என்றால்.. அவள் மனநிலையை அவனால் கணிக்க முடிந்தது.

 

 

 

error: Alert: Content selection is disabled!!