எல்லாம் மாறவேண்டும்! மாற்றவேண்டும்! மனதில் தோன்றிய எண்ணங்களை காட்டிக்கொள்ளாமல், “ஏனாம்?” என்று கேட்டு பேச்சை வளர்த்தான்.
“என்ன ஏனாம்? எல்லாம் உங்களால் தான். தன் பிறந்தநாளை கொண்டாடினாலோ அல்லது வாழ்த்துச் சொன்னாலோ அடுத்த வருடம் பிறந்தநாள் கொண்டாட உயிரோடு இருக்க மாட்டாராம். தான் பிறந்ததே கேவலமாம். இதில் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுதான் குறை என்று கத்திவிட்டார் அக்கா.” என்றவளின் விழிகள் மெலிதாகக் கலங்கியது.
அந்த சின்னப் பெண்ணிடம் என்ன சமாதானம் சொல்வான்?
“சாரிம்மா…” என்றுமட்டும் சொன்னான்.
இதற்கிடையில் பணத்தை கொடுத்து அவள் கேக்கை வாங்கிவிட, “என்னோடு வா. நானே வீட்டில் இறக்கி விடுகிறேன்.” என்றான்.
“தேவையில்லை. அண்ணாவோடுதான் வந்தேன். இப்போது வந்துவிடுவான்..” என்று அவள் சொல்லும்போதே அவளது கைபேசி சத்தம் எழுப்பியது.
அதை காதுக்குக் கொடுத்தபடி, “சொல்லண்ணா..” என்றாள்.
“இங்கே பார்க்கிங்கில் இடமில்லை. அதனால் கேக்கை வாங்கிவிட்டாய் என்றால் வெளியே வா. கடைக்கு முன்னால் தான் நிற்கிறேன்.” என்றான் சத்யன்.
“சரிண்ணா..” என்றவள், கீதனை ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து விரைந்தாள்.
செல்லும் அவளையே புன்னகையோடு பார்த்துக்கொண்டு நின்றான் கீர்த்தனன். இன்றோடு இந்தக் கோபதாபங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு வந்துவிடுமே! உள்ளம் துள்ள, அங்கே கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்து கண்ணைப்பறித்த கேக்குகளில் அழகாக இருந்த ஒன்றை மித்ராவுக்காக வாங்கிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.
காரில் திரும்புகையில், “என்னண்ணா இவ்வளவு சந்தோசமாக இருக்கிறீர்கள்? அண்ணிக்கும் சந்துவுக்கும் பிறந்தநாள் என்பது மட்டும் தான் காரணமா? எனக்கு என்னவோ வேறு எதுவோவும் இருப்பதாகத் தெரிகிறதே..” என்று கேட்டாள் பவித்ரா.
அவனோ சிரித்தான்.
“ஒன்றுமே சொல்லாமல் சிரித்தால் என்னண்ணா அர்த்தம்? சொன்னால் நானும் சந்தோசப் படுவேனே..”
“உன் அண்ணியை திரும்பவும் நம் வீட்டுக்கு கூட்டி வந்துவிடலாம் என்று இருக்கிறேன்.” என்று அவன் சொல்லி முடிக்க முதலே,
“உண்மையாவா? நீங்கள் ஏன் இதை என்னிடம் முதலே சொல்லவில்லை? இது அண்ணிக்குத் தெரியுமா? எப்போது நம் வீட்டுக்கு வருவார்கள்? இன்றைக்கேவா? அப்போ சந்துவும் இனி நம்மோடு இருப்பான் தானே.” ஆர்வமிகுதியிலும் சந்தோசத்தின் உச்சத்திலும் காருக்குள்ளேயே துள்ளிக் குதிக்காத குறையாக அவள் கேட்க, அதேயளவு மகிழ்ச்சி அவன் மனதிலும் வியாப்பித்து இருந்ததில் மனம் விட்டுச் சிரித்தான் கீர்த்தனன்.
“எத்தனை கேள்விகள் பவி. போகிற போக்கில் நீயும் அஞ்சு மாதிரி ஆகிவிடுவாய் போலவே.” என்று நகைத்தான் அவன்.
“ஐயோ அண்ணா..! எத்தனை கேள்விகள் என்றால் என்ன? என் பொறுமையை சோதிக்காமல் உடனேயே பதிலை சொல்லுங்கள்.”
“சரி சொல்கிறேன். உன் அண்ணியிடம் இன்னும் நான் சொல்லவில்லை. இன்று சொல்லலாம் என்று இருக்கிறேன். எனக்கும் இன்றைக்கே அவர்களை நம் வீட்டுக்கு கூட்டிவரத்தான் விருப்பம். ஆனால்..” என்று அவன் இழுக்க, அதுவரை அவன் முகத்தில் இருந்த மலர்ச்சியும் சற்றே குன்றியது.
“ஆனால் என்ன அண்ணா?” பொறுமையின்றிக் கேட்டாள் அவன் தங்கை.
“முதலாவதாக உன் அண்ணி சம்மதிக்க வேண்டும். அடுத்ததாக சத்தி.. அவன் என்ன சொல்வானோ தெரியவில்லை. இன்று சந்துவுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறானாம். இதுவரை என்னை யாரும் அழைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை.” என்றான் மனமும் முகமும் வாட.
அண்ணி கூடவா? மனதில் எழுந்த கேள்வியை அப்படியே மனதுக்குள்ளேயே புதைத்துக்கொண்டு, “அண்ணி நிச்சயம் சம்மதிப்பார்கள் அண்ணா. ஆனால்.. அவர் அந்த சத்தி.. அவர் இதில் என்ன சொல்ல இருக்கிறது?” என்றாள் விளங்காமல்.
“அவனை சமாளிப்பதுதான் பெரிய விசயமே. நான் உன் அண்ணியை பிரிந்தபிறகு அவளை கவனித்துக்கொண்டவன் அவன். ஏற்கனவே என்மேல் பயங்கர கோபத்தில் இருக்கிறான்.” என்றவனின் இதழ்களில் புன்னகை.
“அந்தளவு பொல்லாதவரா அவர்?” கவலையோடு கேட்டாள் பவித்ரா.
“சேச்சே! மிகவும் நல்லவன். பாசக்காரனும் கூட! அதனால் தானோ என்னவோ கோபமும் சட்டுச் சட்டென்று வரும். ஆனால் மித்துவின் விருப்பத்துக்கு எதிராக நிற்கமாட்டான் என்றுதான் நினைக்கிறேன். பார்ப்போம்..” என்றான் கீர்த்தனன்.
“அதுதானே அண்ணா. இதில் அண்ணியின் முடிவு தானே முக்கியம். அண்ணிக்கே சம்மதம் என்றால் அவர் சொல்ல என்ன இருக்கிறது. அப்போ நிச்சயம் அண்ணியும் சந்துவும் நம் வீட்டுக்கு வந்துவிடுவார்கள்.” என்றாள் கவலை நீங்கியவளாக.
“ம்ம்…” என்றான் தமையன்.
“ஆனால் எப்போது? எனக்கு இன்றே வரமாட்டார்களா என்று இருக்கிறது.”
அவனுக்கு மட்டும் என்னவாம்? முடிந்தவரை விரைவாக அவர்களை தன்னோடு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
மாலையானதும் மித்ராவின் வீட்டுக்குச் செல்லத் தயாரானான் கீர்த்தனன். சந்தோஷின் பரிசுகளை கொண்டுவந்து தந்தவளிடம், “உன்னை கூட்டிக்கொண்டு போகவில்லை என்று உனக்குக் கோபமில்லையா பவி?”என்று கேட்டான்.
“அப்படி எதுவுமே இல்லை. என் விருப்பம் எல்லாம் அண்ணியும் நீங்களும் சேரவேண்டும், நாம் எல்லோரும் ஒரே குடும்பமாக வாழவேண்டும் என்பதுதான். அதன் பிறகு வரும் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நான் இருப்பேன் தானே. அதனால் எந்தக் கவலையும் இல்லாமல் போய்வாருங்கள்.” என்றாள் அவள்.
“ம்ம்… நான் வர எத்தனை மணியாகுமோ தெரியாது. அதுவரை என்ன செய்யப் போகிறாய்?”
“அதற்குத்தான் அஞ்சுவின் வீடு இருக்கிறதே.”
“சரி. நீ அங்கே போ. வரும்போது நானே வந்து கூட்டீக்கொண்டு வருகிறேன்.” என்றுவிட்டு அவளிடம் விடைபெற்றுக் கிளம்பினான் கீர்த்தனன்.
கைநிறைய பரிசுப் பொருட்களோடு செல்லும் தமையனை பார்த்துக்கொண்டு நின்றவளின் உள்ளம், ‘கடவுளே…! அண்ணி எந்த மறுப்பும் சொல்லாமல் அண்ணாவுடன் திரும்பவும் சேர்ந்துவிட வேண்டும்.’ என்று வேண்டிக்கொண்டது.

