“ஏன் ஜான் இப்படியெல்லாம் கதைக்கிறீர்கள்? வேலை என்று சொன்னவர் வந்திருக்கிறாரே என்கிற ஆவலில் ஓடிவந்தால்.. நேசிக்கும் பெண்ணோடு கதைக்கிற மாதிரியா கதைக்கிறீர்கள்?” என்றவளின் பேச்சில், யார் அதிர்ந்தார்களோ இல்லையோ அவள் பின்னால் நின்றவன் வெளிப்படையாகவே அதிர்ந்தான்.
அதைக் கண்ணுற்ற ஜான், என்னவோ பெரும் ஹாஸ்யத்தைக் கேட்டவன்போன்று சிரித்தான். “என்னது? நேசிக்கிறேனா? உன்ன்னையா? அப்படி என்றாவது நான் சொன்னேனா?” என்றான் ஏளனமாக.
இதயத்தை அறுத்தது அவனது வார்த்தைகள்! “ஜான்! தயவுசெய்து விளையாட்டுக்காவது இப்படிக் கதைக்காதீர்கள். எனக்கு பயமா இருக்கிறது..” என்றவளுக்கு, நெஞ்சுக்குள் பொத்தி பொத்தி அவள் வளர்த்த காதல் கோட்டையை அவன் உடைப்பது போலிருந்தது.
“நானா விளையாடுகிறேன்? இல்லை.. வேறொருவர் ஆரம்பித்த விளையாட்டை நான் முடித்துவைக்கப் போகிறேன்.” என்றவனின் உதடுகள் ஏளனத்தில் வளைய, பார்வை அவளுக்கு பின்னால் சென்றது.
அப்போதுதான் அதைக் கவனித்து திரும்பிப் பார்த்த பவித்ரா, அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் உறைந்து நின்ற தமையனைக் கண்டதும் ஒருநொடி மூச்சுவிடவும் மறந்தாள்.
அடுத்த கணமே, தன் துயர் தீர்க்க, தனக்காக நியாயம் கேட்க தமையன் இருக்கிறான் என்கிற எண்ணம் கொடுத்த உந்துதலில், “அண்ணா..!” என்ற கூவலுடன் ஓடிப்போய் அவன் தோளில் சாய்ந்தவள் உடைந்தாள்.
ஒரு கை ஆதரவாக அவளை மெதுவாக அணைத்துக்கொண்டாலும் கீதனின் பார்வை மட்டும் ஜானை விட்டு அகலவேயில்லை! அந்தப் பார்வையை தளராது எதிர்கொண்டது ஜானின் விழிகள்.
“அண்ணா.. இவர் ஜான்.. என்னை விரும்புகிறேன் என்று சொல்லிப் பழகிவிட்டு இப்போது என்னென்னவோ சொல்கிறார். என்னவென்று கேளுங்கள்!” என்று தமையனிடம் முறையிட்டாள் பவித்ரா.
“என்ன சத்தி நடக்கிறது இங்கே?” என்று உணர்வுகளைக் காட்டாமல் கேட்டான் கீர்த்தனன்.
“சத்தியா?” என்று அதிர்ந்தாள் பவித்ரா.
அவளது அதிர்ந்த தோற்றத்தை உள்வாங்கிக்கொண்டே, “எனக்குத் தெரிந்து சந்துவின் பிறந்தநாள் பார்ட்டி தான் நடக்கிறது.” என்றான் ஜான் என்கிற சத்யன் அலட்சியமாக.
முகம் இறுகியது கீர்த்தனனுக்கு. “இந்த நக்கலும் அலட்சியமும் தேவையில்லை சத்தி. எதுவாக இருந்தாலும் நேராகப் பேசு. அவளை விரும்புவதாகச் சொல்லியிருக்கிறாய். அவளோடு பழகியிருக்கிறாய். இதையேன் நீ என்னிடம் முதலே சொல்லவில்லை? அவளை பிடித்திருக்கிறது என்று சொல்லியிருக்க சந்தோசமாக கட்டித் தந்திருப்பேனே.” என்றான்.
தங்கையின் இந்தக் குறுகிய காலத்துக் காதலை எண்ணி அவன் மனம் வருந்தினாலும், அப்படி அவள் காதலித்தது சத்யனை என்பதாலும், அவன்மேல் உள்ள பாசத்தாலும் சொன்னான் கீர்த்தனன்.
சத்யனோ அதுநாள் வரை அடக்கிவைத்திருந்த கோபத்தை அன்று காட்டத் தொடங்கினான். “கட்டித் தந்து? உங்கள் தங்கைகள் இருவரையும் நல்லபடியாக கரை சேர்த்துவிட்டு நிம்மதியாக நீங்கள் இருப்பீர்கள். நான்மட்டும் நிர்கதியாக நின்று தினமும் கண்ணீர் வடிக்கும் என் அக்காவை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமா?” என்று கேட்டான்.
‘இதெல்லாம் உனக்குத் தெரிந்துதான் நடக்கிறதா?’ மித்ராவிடம் கண்ணால் கேட்டான். அவன் விழிகளில் தெரிந்த கோபத்தில் பயந்து இல்லை என்று வேகமாகத் தலையசைத்தாள் அவள்.
சத்யனிடம் திரும்பி, “அது எனக்கும் உன் அக்காவுக்குமான விஷயம். அதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். நீ உன் விஷயத்தை மட்டும் பேசு!” என்றான் தன் மனதில் இருந்த முடிவை கருத்தில் கொண்டு.
அவனோ, “இரண்டும் ஒன்றுதான்!” என்றான். “என் அக்காவுக்கு நீங்கள் ஒரு முடிவு சொல்லாமல் இது முடியாது. முடிக்க விடமாட்டேன்!” என்றான்.
கீர்த்தனனின் முகம் கடினப்பட்டது. “யார் மேல் உள்ள கோபத்தை யாரிடம் கட்டுகிறாய்? என்னோடு பிரச்சனை என்றால் நீ என்னோடு கதைத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பவித்ராவோடு விளையாடுவாயா? நீ செய்வதை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பேன் என்று நினைக்காதே சத்தி! நான் அவளின் அண்ணன்.” என்றான் கண்டிப்புடன்.
“என்ன செய்வீர்கள்? என்ன செய்துவிட முடியும் உங்களால்? நான் அவளைக் காதலிக்கவில்லை தான். ஆனால், உங்கள் தங்கை என்னைத்தான் விரும்புகிறாள். என்னோடு கோப்லென்ஸ் வரைக்கும் வந்தவள் அவள். அதையெல்லாம் மறைத்து இன்னொருவனுக்கு கட்டிக் கொடுப்பீர்களா? அப்போ உங்கள் தங்கையின் நிலையும் என் அக்காவின் நிலைதான். ஒருநாள் அவளும் கண்ணீரோடு உங்கள் வீட்டுக்கே திரும்பி வருவாள். பரவாயில்லையா?” என்றான் எள்ளலாக.
அடுத்த நொடியே பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்தாள் மித்ரா. அதிர்ந்துபோய் தமக்கையைப் பார்த்தான் சத்யன்.
“ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கத் துணிந்த நீயெல்லாம் என் தம்பியா?” என்று குமுறியவள், “அன்றொருநாள் என் தம்பி தங்கையை நான் நன்றாகத்தான் வளர்த்திருக்கிறேன் என்று இவரோடு சண்டைக்கு போனேன். ஆனால், இப்போது ஒத்துக்கொள்கிறேன். உன்னை வளர்ப்பதிலும் நான் தோற்றுத்தான் போனேன். இல்லாவிட்டால் உன்னால் இப்படியெல்லாம் நடத்திருக்க முடியுமா?” என்றாள் கோபத்தோடு.
முதன் முதலாகக் கண்ட தமக்கையின் கோபம் அவனை அதிரவைத்தாலும், கீர்த்தனனிடம் போன்று அவளிடம் கோபப்பட முடியாமல், “எல்லாம் உனக்காகத்தான் அக்கா..” என்றான் சுருதி இறங்கிய குரலில்.
“சீ வாயை மூடு! நீ செய்த கேவலமான வேலைக்கு என்னைக் காரணமாக்காதே! ஒரு பெண்ணின் வாழ்க்கையை பகடைக்காயாக மாற்றித்தான் எனக்கொரு வாழ்க்கை என்றால், அப்படி ஒரு வாழ்க்கையே எனக்கு வேண்டாம்!” என்று சீறியவள் கீதனிடம் ஓடினாள்.
“கடவுள் சத்தியமாக எனக்கு இது எதுவும் தெரியாது கீதன். தெரிந்திருக்க விட்டிருக்கவே மாட்டேன். என்னை நம்புங்கள்.” என்றாள் கண்ணீரோடு.

