தனிமைத் துயர் தீராதோ 35 – 5

அது போதாது என்று அவளது காதலன், காதலியாக அவளை தோற்கடித்து, அவள் காதலை மண்ணுக்குள் குழிதோண்டிப் புதைத்துவிட்டு பாசமுள்ள ஒரு தம்பியாக அவன் வெற்றிக்கொடி நாட்டுவதற்கு அவளை பகடைக்காயாக பயன்படுத்திவிட்டானே.!

 

அன்று, அவர்கள் வசிக்கும் வீட்டை நன்றாக அறிந்திருந்தும் வீட்டுக்கு வழி சொல்லக் கேட்டானே. அவள் சொன்னபோது மனதுக்குள் எப்படிச் சிரித்திருப்பான்?

 

அவளது அண்ணியான அவனது தமக்கையை பற்றி ஒன்றுமே தெரியாதவன் போன்று விசாரித்தது என்ன? உன் குடும்ப விசயத்துக்குள் நான் தலையிட்டு இருக்கக் கூடாது என்று நடித்ததென்ன? என் வீட்டுக்கு நான் ஒரேயொரு ஆண்பிள்ளை தான் என்று சொன்னதென்ன!

 

அனைத்தையும் நம்பினாளே! சந்தேகப்படத் தோன்றவே இல்லையே!

 

“அவனை உனக்குத் தெரியாதா?”

 

திடீரென்று தமையனிடம் இருந்து வந்த கேள்வியை புரிந்துகொள்ள முடியாமல், “என்னண்ணா?” என்று கேட்டாள் பவித்ரா.

 

“சத்யனை உனக்கு முதலே தெரியாதா?” மீண்டும் கேட்டான்.

 

“இல்லையே அண்ணா. நான் அவரைப் பார்த்ததே இல்லையே.. நீங்கள் அண்ணியின் சகோதரர்களைப் பற்றி கதைக்கும்போது சத்தி வித்தி என்று சொல்லிக் கேட்டு இருக்கிறேனே தவிர அவரை பார்த்ததே இல்லையே.” என்றாள் கண்ணீரோடு. தெரிந்திருக்க இவ்வளவு தூரத்துக்கு வந்திராதே!

 

உண்மைதான். பவித்ரா இலங்கையில் இருந்த காலத்திலும், அவன் தாய்க்கு மித்ரா குடும்பத்தை பிடிக்காது என்பதால் சத்யன் வித்யா வீட்டில் இருக்கும்போது, இலங்கைக்கு ஸ்கைப்பில் கூட அழைக்கமாட்டான் கீர்த்தனன். தாய் ஏதாவது மனம் நோகச் சொல்லி, அதைக்கேட்டு இவர்கள் நொந்துவிடக் கூடாதே என்கிற அக்கறை. அதன் விளைவு?

 

“அவனைத் தெரியாது என்றாலும் அவன் தன் பெயரை சொன்ன போதாவது நீ யோசித்துக் கண்டு பிடித்திருக்க வேண்டாமா?”

 

அவன்தான் ஏமாற்றினான் என்றால், இவளும் ஏமாந்திருக்கிறாளே!

 

“அவர் ஜான் என்று சொன்னார் அண்ணா. இல்லையில்லை அவர் சொல்லவில்லை அஞ்சு அப்படித்தான் அவரைக் கூப்பிட்டாள். நானும் அதுதான் அவர் பெயர் என்று நினைத்தேன்.” என்றவள், உங்களின் முழுப்பெயர் என்ன என்று கூட கேட்கத் தோன்றவில்லையே என்றெண்ணி இப்போது வருந்தினாள்.

 

பெயரை மட்டுமா கேட்காமல் விட்டாள்? அவனும் அவளைக் காதலிக்கிறானா என்பதையும் தானே கேட்காமல் விட்டுவிட்டாள். அந்தளவுக்கு ‘ஜான்’ என்பவனிடம் தான் மயங்கிப் போயிருந்தோம் என்று நினைக்கவே மனம் கூசியது.

 

“அவரின் போட்டோக்களை கூட நான் பார்க்கவில்லையே அண்ணா. அண்ணி வீட்டில் கூட..” என்றாள் வருத்தத்தோடு.

 

அதைப் பார்த்திருந்தாலாவது இதெல்லாம் நடந்திராதே.

 

“அவனுக்கு சுவர்களில் போட்டோக்களை தொங்க விடுவது பிடிக்காது. விடவே விடமாட்டான். அதுதான் மித்ரா வீட்டில் இருந்திருக்காது. இங்கே.. நம் வீட்டில்.. ஆல்பத்தில் இருக்கிறான் தான்..” என்றவனுக்கு மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் போகவே பேச்சை நிறுத்தினான்.

 

மித்ரா மீதிருந்த கோபத்தில் ஆல்பங்களை எல்லாம் கட்டி நிலக்கீழ் அறைக்குள் போட்டிருந்தான். பிறகும், அவன் இருந்த மனநிலையில் அதை வீட்டுக்குள் கொண்டுவரத் தோன்றவில்லை.

 

அதையேதான் அவளும் யோசித்தாள் போலும். “எனக்கும் உங்களின் திருமண ஆல்பம், போட்டோக்கள் எல்லாம் பார்க்க ஆசையாகத்தான் அண்ணா இருக்கும். பலமுறை உங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைப்பேன். பிறகு, அதுவே உங்கள் வேதனையை இன்னும் கிளறிவிடுமோ என்று பயந்து வாயை மூடிக்கொள்வேன்.” என்றவளுக்கு, அதையாவது தான் செய்திருக்கக் கூடாதா என்றிருந்தது.

 

இப்படி தானும் அவமானப்பட்டு தமையனையும் கஷ்டப்படுத்த வேண்டும் என்று அவளுக்கு விதித்திருந்திருக்கிறது போலும்.

 

மெல்ல தன் கலங்கிய விழிகளை உயர்த்தி தமையனைப் பார்த்து, “சாரி அண்ணா. திடீர் வெளிநாடு. இங்கிருக்கும் மக்களின் சுதந்திர வாழ்க்கை. திடீர் என்று ஒரு ஆணின் அறிமுகம்.. காரணம் இல்லாமல் வந்த சலனம். இப்படி என்னை நானே மறந்துபோனேன். உங்களிடம் பொய் சொல்லவோ, இப்படி கேவல.. இப்படி நடக்கவோ நானாக நினைக்கவே இல்லை. இப்போது நினைத்துப் பார்த்தால் அதையெல்லாம் நானா செய்தேன் என்று இருக்கிறது. என்னையே அறியாமல் எல்லாவற்றையும் மறந்து நடந்துகொண்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணா.” என்று கம்மிய குரலில் அவள் சொன்னபோது, அண்ணன்காரனின் உள்ளமும் கரைந்துதான் போனது.

 

ஸ்டீரிங்கில் இருந்து ஒரு கையை எடுத்து ஆதரவாக அவள் தலையை வருடிக்கொடுத்தான். “சரி விடு! நம் சத்தி தானே. என்மேல் இருந்த கோபத்தில் ஏதேதோ செய்துவிட்டான். இனி எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். கவலைப் படாதே!” என்றான் தேறுதலாக.

 

அவன் மட்டும் தேற்றுவாரின்றி உள்ளுக்குள் உடைந்தே போனான்.

 

 

 

error: Alert: Content selection is disabled!!