தனிமைத் துயர் தீராதோ 36 – 1

கோபத்தோடு அமர்ந்திருந்த தமக்கையை பார்க்க, சிரிப்புத்தான் வந்தது சத்யனுக்கு. போலிங்கில் இருந்து வீட்டுக்கு வந்தபிறகு கடந்த இரண்டு மணி நேரங்களாக அவள் இப்படியேதான் இருக்கிறாள்.

 

‘நான் எவ்வளவு பெரிய விஷயத்தை ஒரேநாளில் முடித்திருக்கிறேன். இந்த அக்கா என்னவென்றால் முகத்தை தூக்கிக்கொண்டு இருக்கிறாளே..’ என்று எண்ணியவன், அவளருகில் சென்றமர்ந்து, அவளின் கரம் பற்றி, “அக்கா..” என்றழைத்தான்.

 

முகத்தை திருப்பிக்கொண்டு கையையும் இழுத்துக்கொண்டாள் அவள்.

 

தாடையை பற்றித் திருப்பி, “என்னக்கா இது? இன்னுமா உன் கோபம் போகவில்லை. வேண்டுமானால் மற்றக் கன்னத்திலும் அறைந்துவிடு. அதை விட்டுவிட்டு இப்படி இருக்காதே.” என்றான் அவன்.

 

அதுவரை நேரமும் கீர்த்தனனையும் பவித்ராவையும் எண்ணி வேதனையுற்றுக் கொண்டிருந்தவள், இப்போது தவிப்போடு சத்யனை திரும்பிப் பார்த்தாள். அவன் கன்னத்தில் தெரிந்த அவளது கைத்தடத்தைக் கண்டதும் விழிகளில் நீர் திரண்டது.

 

ஒருநாளும் இல்லாமல் இன்று கைநீட்டி விட்டேனே! அவன் கன்னத்தை தடவிக்கொடுத்தவள், “சாரி சத்தி. ஆனால், நீ செய்தது எவ்வளவு பெரிய பிழை தெரியுமா?” என்று கேட்டாள்.

 

அவளின் கையை கன்னத்தோடு சேர்த்து அழுத்தி, “தெரியும் அக்கா. ஆனால், இந்தப் பிழையால் விழைந்திருப்பது நன்மை மட்டும் தானே. அதனால் நீ சும்மா இதையே நினைத்துக் கவலைப்படாதே.” என்றான் அவன் தன் கருத்தில் உறுதியாக.

 

இன்னும் நடந்துவிட்ட நிகழ்வுகளின் ஆழம் தெரியாமல் பேசும் தம்பியை கவலையோடு பார்த்தாள் மித்ரா. “உனக்கு ஒன்றும் விளங்கவில்லை சத்தி. பவித்ராவின் மனதை நீ நோகடித்திருக்கிறாய். உண்மையாக உன்னை விரும்பியவளை காயப்படுத்தி இருக்கிறாய். .அதோடு.. உன் அத்தான்.. அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று கொஞ்சம் யோசி.” என்றாள் கண்களில் நீர் கோர்க்க.

 

“என்ன செய்து இதை சீர் செய்யப் போகிறோமோ தெரியவில்லை.” என்று பெருமூச்செறிந்தாள்.

 

தமக்கையின் கரத்தை தன் இரண்டு கைகளாளும் பற்றிக்கொண்டவன், சற்று நேரத்துக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.

 

அவனுக்கு தேவை அவளின் சந்தோசம். அதைத் தாண்டிய அனைத்துமே இரண்டாம் பட்சம் தான். பவித்ரா உட்பட!

 

ஆனால், கீர்த்தனன்?

 

அவன் கடைசியாக பேசிச் சென்றவிதம் நினைவிலாட நெஞ்சில் நெருஞ்சிமுள் ஒன்று குத்தத்தான் செய்தது.

 

ஆனாலும், ‘அவர் செய்தது மட்டும் சரியா? அக்காவைப் பற்றி முழுவதுமாக அறிந்தபிறகும் தன் முடிவை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லையே. இப்போது, தன் தங்கைக்கு ஒன்று என்றதும் எவ்வளவு வேகமாகச் சம்மதித்தார். இதே முடிவை முதலே அவர் எடுத்திருக்க நான் ஏன் இப்படி நடக்கப் போகிறேன்?’ என்று ஓடியது அவனது சிந்தனை.

 

அதை தமக்கையிடம் சொல்லாமல், “அதுதான் பவித்ராவை நானே கட்டுகிறேன் என்று சொல்லிவிட்டேனே. அதிலேயே அத்தானின் மனம் சமாதானம் ஆகிவிடும். அதனால் நீ ஒன்றுக்கும் யோசிக்காதே.” என்றான் சமாதானமாக.

 

அந்தமட்டிலாவது நல்ல முடிவை எடுத்தானே என்று எண்ணியபோதிலும், “ஆனாலும்..” என்று அவள் ஆரம்பிக்க, “அக்கா, நீ அடித்தது இன்னும் வலிக்குதுக்கா. நோ மாற மருந்து ஏதாவது தருவதை விட்டுவிட்டு என்னென்னவோ கதைத்துக்கொண்டு இருக்கிறாயே..” என்றான் சிறுபிள்ளையாக முகத்தில் வலியைக் காட்டி.

 

“பொறு, மருந்து எடுத்துக்கொண்டு வருகிறேன்..” என்று அவள் உள்ளே செல்ல, பேச்சை மாற்றிவிட்ட நிம்மதியில், இரண்டு கைகளாலும் தலையை கோதி, “ஊப்ஸ்..” என்று உதட்டைக் குவித்து காற்றை ஊதினான் சத்யன்.

 

ஆனால், அவன் பொய்யாகச் சொன்ன கன்னத்து வலிக்கு மித்ராவின் கையால் கிரீம் தடவிக்கொண்டு வீட்டுக்குச் சென்றவனின் நிம்மதியை நிலைக்கவிடாமல் துள்ளினார் சண்முகலிங்கம்.

 

வித்யாவின் மூலம் விஷயத்தை அறிந்து, எகிறிக்குதித்த தகப்பனிடம், “நான் அவளைத்தான் கட்டுவேன். வேண்டாம் என்று தடுக்க உங்கள் யாருக்கும் உரிமை கிடையாது. நீங்கள் சம்மதித்தால் உங்கள் இருவரின் முன்னாலும் திருமணம் நடக்கும். இல்லையோ, என் திருமணத்தை நடத்திக்கொள்ள எனக்குத் தெரியும்!” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி அவரின் வாயை ஒரேயடியாக அடைத்தான் சத்யன்.

 

இங்கே பவித்ராவின் விஷயம் அறிந்த லக்ஷ்மியும் கீதனுக்கு அழைத்து, “என் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க எனக்குத் தெரியும். உன்னை யார் அந்தக் கேடுகெட்ட குடும்பத்தில் கல்யாணம் பேசச்சொல்லி சொன்னது? நீ கெட்டதும் இல்லாமல் அவள் வாழ்க்கையையும் கெடுக்காதே.” என்று பாய்ந்தபோது,

 

“சத்யன் நல்லபிள்ளை. பவியை நன்றாக பார்த்துக்கொள்வான். அதோடு, அவளுக்கும் அவனைத்தான் பிடித்திருக்கிறது. சீதனம் கொடுப்பது மட்டுமில்லை, மனதுக்கு பிடித்தவனையே அவளுக்கு கட்டிவைக்க வேண்டியதும் என் கடமைதான்.” என்று முடித்துவிட்டான் கீதன்.

 

பவித்ராவும் அதையே சொல்ல, இலங்கையில் இருக்கும் அவரால் என்ன செய்ய முடியும்? கணவரிடம் எரிந்துவிழ மட்டுமே முடிந்தது.

 

கவிதாவுக்கும் எதுவும் செய்ய முடியாத நிலை. அவளின் மாமியார் தொடங்கி கணவன் வரைக்குமே இந்த இரட்டை திருமணத்தில் அவ்வளவு திருப்தியும் சந்தோசமும் பட்டனர்.

 

தன்னால் முடிந்தவரை இந்தக் கல்யாணத்தை நிறுத்தும் முயற்சியாய் மித்ராவை பற்றி தனக்குத் தெரிந்ததுகளோடு இன்னும் இல்லாததுகளையும் பொல்லாததுகளையும் சொல்லி, “அவளைப்போலத்தான் அவளின் தம்பியும் இருப்பான். அவன் வேண்டாம் உனக்கு.” என்று சொல்லிப் பார்த்தாள்.

 

பவித்ராவோ, “அண்ணாவை விட உனக்கு எல்லாம் தெரியுமாக்கா? எனக்கும் அண்ணியை பற்றியும் தெரியும், அவரைப் பற்றியும் தெரியும். அதனால் நீ சும்மா எதையாவது சொல்லாதே.” என்றுவிட்டாள்.

 

அதன்பிறகான நாட்கள் இரண்டு திருமணத்தையும் ஏற்பாடு செய்வதிலேயே கீர்த்தனனுக்கும் சத்யனுக்கும் கழிந்தது.

 

error: Alert: Content selection is disabled!!