தனிமைத் துயர் தீராதோ 36 – 2

கீர்த்தனன் மித்ரா, சத்யன் பவித்ரா ஜோடிகளின் கல்யாணத்துக்கு முதல் நாளே வந்திறங்கினார்கள் கவிதா குடும்பத்தினர். பயணக்களை ஆறியதுமே, “மித்துவீட்டுக்கு போய் வருவோமா?” என்று கேட்டார் சங்கரி அம்மா.

 

அதைக்கேட்ட கவிதாவுக்கு, ‘அவள் வீட்டுக்கு நான் போவதா?’ என்று மனம் கடுத்தது. வேறு வழியின்றி திருமணத்திற்காக என்று குடும்பத்தோடு ஜெர்மனி வந்தாலும், மித்ராவை பார்க்கவோ அவளோடு பேசவோ பிடிக்கவில்லை அவளுக்கு.

 

“நீங்கள் வேண்டுமானால் போய்விட்டு வாருங்கள் மாமி. எனக்கு களைப்பாக இருக்கிறது. திவிக்குட்டியும் அழுதுகொண்டே இருக்கிறாள்.” என்றாள் தன் மாமியாரிடம்.

 

நீண்ட பயணத்தால் திவியும் மெய்யாகவே சிணுங்கிக் கொண்டிருக்க, கவிதாவையும் திவ்யாவையும் விட்டுவிட்டு சங்கரியும் தாமோதரனும் கிளம்பினர்.

 

“மித்துவின் வீடு எங்கே இருக்கிறது தனா? விலாசத்தை தந்தாய் என்றால் நாவியில் கொடுத்துப் போகலாம்.” தாய் தந்தையரை கொண்டுபோய் விட ஆயத்தமான சேகரன் கேட்டான்.

 

“பவிக்குத் தெரியும். அவளைக் கூட்டிக்கொண்டு போ. வழி காட்டுவாள்.” என்றான் அவன்.

 

‘அந்த வீட்டுக்கா? அந்த ஜான் இருப்பானே?’ வெறுப்பில் சுளித்தது பவித்ராவின் முகம். எந்தளவு ஆழத்துக்கு அவள் நெஞ்சில் காதலும் நேசமும் நிறைந்து கிடந்ததோ அதற்கு சற்றும் குறையாமல் இப்போது கோபமும் வெறுப்பும் நிறைந்து வழிந்தது.

 

ஆனாலும், இந்த திருமணங்களை நிறுத்த முயலவில்லை அவள். முதலாவது காரணம், அவளது தமையன். இனியும் எதையாவது முட்டாள் தனமாய் செய்து அவனின் வாழ்க்கையை சீர்குலைக்க விருப்பமில்லை. அடுத்த காரணம், சொல்லவே பிடிக்கதபோதும், அந்த ஜானை விடுத்து இன்னொருவனை கணவனாக மனதில் வரிக்க முடிக்காமையே! அந்தளவு ஆழத்துக்கு தன் மனதில் அவன் பதிந்திருப்பதை தானே வெறுத்தாள். தன் எண்ணங்களை யாருக்கும் காட்டாமல் அவர்களோடு புறப்பட்டாள்.

 

வீட்டின் அழைப்புமணி ஒலிக்கவும், போய் கதவைத் திறந்தாள் மித்ரா. அங்கே நின்றவர்களைக் கண்டதும் முகம் பூவாக மலர, “அம்மா..!” என்றபடி, விரைந்து சங்கரி அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.

 

“சுகமாக இருக்கிறாயா மித்தும்மா?” ஆதுரத்தோடு அணைத்துக்கொண்டவரும் அவள் நெற்றியில் முத்தமிட்டு வினாவினார்.

 

“ஓ..! நான் நன்றாக இருக்கிறேன்மா. உள்ளே வாருங்கள். வாருங்கள் அப்பா. வாருங்கள் அண்ணா.” என்று எல்லோரையும் வரவேற்றவள், அவர்களோடு நின்ற பவித்ராவைக் கண்டதும், அவளையே பார்த்தாள்.

 

அவளும் இவளைப் பார்க்க, “உள்ளே வா பவி..” என்று அவளின் கைப்பிடித்து அழைத்தாள்.

 

வந்தவர்கள் யார் என்று தெரியாத போதிலும் புன்னகைத்து வாருங்கள் என்று வரவேற்றனர் அங்கேயிருந்த சத்யனும் வித்யாவும்.

 

சத்யனின் பார்வை பவித்ராவை நோக்க, அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஏன் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. எப்போதும் தன்னை ஆவலுடன் பார்ப்பவளின் அலட்சியம் அவனுக்கு ஒருவித ஆத்திரத்தை கிளப்பியது.

 

‘சரிதான் போடி! நீ பெரிய இவள் பார். எனக்கு தேவை என் அக்காவின் கல்யாணம். அது நாளைக்கு நடக்கப் போகிறது. இதில் நீ என்னைப் பார்த்தால் என்ன பார்க்காட்டி என்ன?’ அவனும் முகத்தை திருப்பிக்கொண்டான்.

 

அவனளவில், பவித்ராவிடம் பொய்யாகப் பழகினாலும் அவளையும் கைவிடாமல் கைப்பிடிக்கப் போகிறான். ஆக, செய்த தவறையும் நேர் செய்துவிடப் போகிறோம் என்றெண்ணி, எந்தக் குற்ற உணர்வும் இன்றியே இருந்தான் அவன்.

 

மித்ரா, வீட்டுக்குள் வந்தவர்களை அமரச்சொல்லிவிட்டு, “என்னம்மா திடீர் என்று வந்திருக்கிறீர்கள். காலையில் கதைக்கும்போது கூட வருவதாகச் சொல்லவே இல்லையே.” என்று சங்கரியிடம் கேட்டாள்.

 

“நீயும்தான் காலையில் கதைக்கும்போது நாளைக்கு உனக்கு திருமணம் என்பதை சொல்லவில்லை. பிறகு நாங்கள் மட்டும் சொல்லவேண்டுமா?” என்று கேட்டார் அவர்.

 

என்ன சொல்ல என்று தெரியாமல் சங்கடத்தோடு அவர்கள் மூவரையும் பார்த்தாள்.

 

“தனா முதலே சொல்லிவிட்டான் மித்து. அம்மாதான் திடீர் என்று வந்து உனக்கு ஆனந்த அதிர்ச்சியை தரவேண்டுமாம் என்று சொல்லவில்லை.” என்று சொல்லிப் புன்னகைத்தான் சேகரன்.

 

“அது.. அதுவந்து அண்ணா..” என்று தடுமாறியவளின் விழிகள் அருகில் நின்ற சகோதரர்களிடம் சென்று மீண்டது.

 

“எது வந்தது?” என்று கேட்டுச் சிரித்தார் தாமோதரன்.

 

“அதப்பா..” அப்போதும் எதை எப்படி சொல்வதென்று தெரியாமல் தடுமாறினாள் மித்ரா.

 

பின்னே, கணவன் மனைவி என்று சொல்லிக்கொண்டு ஒருவாரம் அவர்களின் வீட்டில் போய் தங்கிவிட்டு வந்தவர்களுக்கு நாளை திருமணம் என்றால்.. விசித்திரமாக இல்லை?

 

ஆனால் அவளின் மனதை உணர்ந்துகொண்டார் சங்கரி. “எங்களுக்கு எல்லாம் தெரியும். அதனால் நீ ஒன்றும் சங்கடப்படாதே.” என்றார் தேற்றும் முகமாக.

 

அவளோ தேறுவதற்கு பதிலாக இன்னும் குழம்பினாள். எல்லாம் என்றால்? யார் சொல்லியிருப்பார்கள்? கீதனா கவியா?

 

வித்யா அவர்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டுவர எண்ணி உள்ளே போக, “இது உன் தம்பி சத்யன் தானே. எங்கள் பவியின் மனதில் இடம் பிடித்தவன்.” என்று சத்யனை பார்த்துக் கேட்டார் சங்கரி.

 

“ஆமாம் அம்மா.” என்றாள் மித்ரா மனதை குடைந்த விஷயத்தை மறைத்து.

 

“அதெப்படி அவ்வளவு இலகுவாக பவியின் மனதில் இடம்பிடித்தாய் சத்யா? அவள் இங்குவந்து கொஞ்ச காலம்தானே ஆகிறது.” என்று குறும்போடு கேட்டார் தாமோதரன். “என் மனைவியை சம்மதிக்க வைக்க எனக்கு சரியாக ஒரு வருடம் பிடித்தது.” என்று அவர்களின் பொன்னான அந்தக் காலத்தை வேறு நினைவு கூர்ந்தார்.

 

அவனை மீறி சத்யனின் பார்வை பவித்ராவிடம் செல்ல, அவளோ விழிகளில் வெறுப்பை உமிழ்ந்தாள். ‘சொல்! பொய்யாக நாடகமாடி அவளை ஏமாற்றி அவள் மனதில் இடம் பிடித்தேன் என்று சொல்’ என்றது அவள் விழிகள்.

 

error: Alert: Content selection is disabled!!