தனிமைத் துயர் தீராதோ 36 – 3

“சரி சொல்லப்பா. உன் காதல் கதையை பற்றி. எங்கே முதலில் சந்தித்தீர்கள்?” என்று கதைகேட்க ஆயத்தமானார் தாமோதரன்.

 

“அப்பா! அவர்களின் தனிப்பட்ட விசயத்துக்குள் நுழைகிறீர்கள்.” என்று சிரிப்போடு எச்சரித்தான் சேகரன்.

 

“எங்கே சந்தித்தார்கள் என்பது தனிப்பட்ட விசயமாடா?” என்று மகனைக் கேட்டவர், “நீ சொல் சத்தி.” என்று அவனை ஊக்கினார்.

 

பவித்ராவின் முகத்தில் இருந்த கோபச் சிவப்பும், அவள் அவனை முறைத்ததும் தூண்ட, “அது ஒரு ஆடையகத்தில் சந்தித்தோம்.” என்றான் சத்யன் வேண்டுமென்றே.

 

நெஞ்சில் வலித்தது பவித்ராவுக்கு. அப்படி சந்தித்ததும், அவனோடு மோதிக்கொண்டதும், அதன் பிறகு அவன் நினைவாகவே நாட்களை கழித்ததும் என்று ஒவ்வொன்றாக நினைவில் வர, அன்று சுகமாய் இனித்த விஷயங்கள் ஒவ்வொன்றும் இன்று விசமாய் கசந்தது.

 

இதை விடவே கூடாது என்று கணத்தில் முடிவெடுத்து, “அண்ணி, நாளைக்கு எத்தனை மணிக்கு கோவிலுக்கு கிளம்புகிறீர்கள் என்று அண்ணா கேட்கச் சொன்னார்.” என்று மித்ரவிடம் கேட்டாள்.

 

“காலையிலேயே ஆறுமணிக்கு பவி.”

 

“அண்ணாவும் அப்படித்தான் சொன்னார். உங்களை தயாராகி அங்கே வரட்டுமாம். எல்லோரும் ஒன்றாகப் போகலாமாம். அர்ஜூன் அண்ணா குடும்பம், அருணா அக்காவின் அம்மா அப்பா எல்லோரும் வருவார்கள்.” என்றாள் அவள்.

 

அப்போது, வித்யா அனைவருக்கும் தேநீரையும் சிற்றுண்டியும் கொண்டுவந்து கொடுத்தாள். தன்னதை புன்னகையோடு வாங்கிக் கொண்டே, “மூவருமே அருமையான பிள்ளைகளாக இருக்கிறீர்கள். உன் தங்கைக்கும் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் மாப்பிள்ளை பார்க்கச் சரியாக இருக்கும் இல்லையா மித்து. அப்படிப் பார்க்கும்போது என்னிடம் ஒரு வார்த்தை சொல். எங்கள் சொந்தத்தில்லும் நல்ல பெடியன்கள் இருக்கிறான்கள்” என்றார் சங்கரி.

 

அப்படியே பேச்சு அடுத்தநாள் நடக்கப்போகும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் பற்றி பேசுவதில் மாறிப்போக, தான் சீண்டுவதை உணர்ந்து பேச்சை மாற்றியவளை சத்யன் முறைத்தான்.

 

அவளோ தன் தேநீரை அருந்துவதே மகாகடமை என்பதுபோல் இருந்தாள். அதன்பிறகு சத்யனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. ஆனால், சத்யனின் விழிகளோ அவளை அவ்வப்போது ஆராய்ச்சியுடன் தழுவியது.

 

மித்ரா வீட்டிலேயே அன்றிரவு தங்கப்போவதாக சங்கரி சொல்ல, அவரை அங்கேயே விட்டுவிட்டு, தகப்பனாரோடும் பவித்ரவோடும் கீர்த்தனம் வீட்டுக்கு கிளம்பினான் சேகரன்.

 

அடுத்த நாளும் அழகாக விடிந்தது.

 

கீர்த்தனன் மித்ராவின் முதல் திருமணம் நடந்த அதே கோவிலிலேயே இந்த இரட்டை திருமணமும் ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லோரும் அங்கு சென்று சேர்ந்ததும், “இரண்டு கல்யாணங்களும் ஒன்றாகவே நடக்கட்டும்.” என்றார் தாமோதரன்.

 

“முதலில் எங்கள் திருமணம் நடக்கட்டும் மாமா. பிறகு சத்யன் பவியின் திருமணத்தை செய்யலாம்.” என்று இடைமறித்தான் கீர்த்தனன்.

 

காரணம் புரியாமல் அவனை நோக்கிய சத்யனுக்கு, அவன் ‘சத்யன்’ என்று முழுப்பெயரிட்டு அழைத்தது சரக்கென்று மனதில் உறைத்தது.

 

அத்தான் இன்னும் என்மேல் கோபமாக இருக்கிறாரோ? அவன் முகத்தை ஆராய, அதிலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை இவனால்.

 

ஆனால், விழிகள் மட்டும் ஒருவித தவிப்போடு அவனையே தொடர்ந்தன.

 

காரணம் புரியாதபோதும், கீர்த்தனன் எதையும் சும்மா செய்யமாட்டான் என்று அறிந்து எல்லோரும் அதற்கு சம்மதிக்க, மித்ராவின் பெற்றோர், கவிதாவின் புகுந்தவீடு, அர்ஜூன் குடும்பம், அருணாவின் பெற்றோர் என்று எல்லோரும் வாழ்த்த, அன்றுபோல் இன்றும் அதே மங்களநாணை மித்ராவின் கழுத்தில் அணிவித்தான் கீர்த்தனன்.

 

அன்று நெஞ்சம் முழுவதும் நேசத்தால் நிரம்பித் தளும்ப, கண்களில் காதல் மின்ன தாலியை வாங்கிக்கொண்டவள் இன்று கண்ணீரோடு அதை ஏற்றாள்.

 

ஒருபக்கம் அவனுடைய நிழலுக்கு தான் மீண்டும் வந்து சேர்ந்துவிட்டோம் என்று நிம்மதியடைந்த மனது, அப்படி வந்துசேர்ந்த வழியை எண்ணி ஊமையாக அழுதது.

 

அவளின் கண்ணீரைக் கண்டவனின் நெஞ்சமெல்லாம் வலி. எல்லோரும் சூழ இருக்கும் நிலையில் எதுவும் செய்ய இயலாதபோதும், அவளின் கரத்தைப் பற்றி அழுத்திக்கொடுத்தான்.

 

விழிகளில் கலக்கத்தோடு அவனை ஏறிட்டாள் மித்ரா. அவனும் அவளைத்தான் பார்த்தான். அந்த விழிகள் எதையோ சொல்ல முயல்வது போலிருக்க, அதைப் புரிந்துகொள்ள அவள் முயற்சிக்க, அப்படி புரிந்துகொள்ள முதலே பார்வையை மாற்றிக்கொண்ட கீர்த்தனன் அவளை அதே கைப்பிடியாக அழைத்துக்கொண்டு சத்யனிடம் சென்றான்.

 

இணைந்திருந்த அவர்களின் கரத்தையும், தமக்கையின் கழுத்தில் தொங்கிய தாலியையும், அவள் நெற்றியில் இருந்த குங்குமத்தையும் கண்ட சத்யனின் உள்ளம் எல்லையில்லா மகிழ்ச்சியில் நிறைந்து தளும்பியது.

 

இந்தக் கோலத்தில் திரும்பவும் அவளைப் பார்க்கத்தானே அவன் பாடு பட்டதெல்லாம்!

 

அதற்கு காரணமான அத்தானிடம் தன் நன்றியை சொல்ல அவன் வாயை திறக்க முதலே, “நீ சொன்னதுபோல உன் அக்காவை நான் மணந்துகொண்டேன் சத்யன். இனி என் தங்கையை மணப்பதில் உனக்கு எந்தத் தடையும் இல்லையே?” என்று கேட்டான் கீர்த்தனன்.

 

“அத்தான்!” அதிர்ச்சியோடு அழைத்தவனின் விழிகளில் வலி!

 

அந்த விதியை நிர்ணயித்தவன் அவன்தான். என்றாலும் அது இவ்வளவு தூரத்துக்கு கீர்த்தனனை பாதித்திருக்கும் என்பது அவன் எதிர்பாராதது. அதை கீர்த்தனன் சொல்லும்போது அவனுக்குமே இவ்வளவு தூரத்துக்கு வலிக்கும் என்பதும் அவன் எதிர்பாராதது.

 

சத்யனை பார்த்து உயிர்ப்பில்லாமல் புன்னகைத்தான் கீர்த்தனன். அதுநாள் வரை அவனின் அந்த அழைப்புக்காக ஏங்கியவனின் மனதில் இன்றைய அழைப்பு எந்த மாற்றத்தையும் உருவாக்க மறுத்தது.

 

அர்ஜூனை திரும்பிப் பார்க்க, அவன் ஏதோ பத்திரங்களை கொண்டுவந்து கொடுத்தான்.

 

அதை கையில் வைத்துக்கொண்டு எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, “இது பவித்ராவின் பெயரில் இலங்கையில் வாங்கியிருக்கும் வீட்டுப் பத்திரம்.” என்று ஒரு பத்திரத்தை சத்யனிடம் நீட்டினான்.

 

error: Alert: Content selection is disabled!!