தனிமைத் துயர் தீராதோ 36 – 4

அதையேன் தன்னிடம் தருகிறான் என்கிற குழப்பத்தோடே வாங்கிக்கொண்டான் அவன்.

 

அடுத்ததாக வங்கிப்புத்தகம் ஒன்றை எடுத்து, “இது அவளின் பெயரில் தொடங்கிய வங்கிக்கணக்கு. இதில் கணிசமான தொகையை வைப்புச் செய்து இருக்கிறேன். முதலில் இந்தப் பணத்தை வைத்து இங்கேயும் ஒரு வீட்டை வாங்கித் தரலாமா என்றுதான் நினைத்தேன். பிறகு உங்கள் இருவரின் விருப்பம் வேறாக இருந்தால்? அதுதான் பணமாகத் தருகிறேன்.” என்றவன் அதையும் அவனிடம் கொடுத்தான்.

 

கடைசியாக ஒரு கார் திறப்பை எடுத்துக் கொடுத்தான். “புத்தம் புதுக்கார். என் தங்கையின் கணவனுக்காக வாங்கி இருக்கிறேன். நகைகள்.. பவித்ரா அணிந்திருப்பது எல்லாமே அவளுக்காக செய்தவைதான்.” என்றவனின் பேச்சில், ‘இனி நீ எனக்கு என் தங்கையின் கணவன் மட்டும்தான்’ என்கிற தொனி தெறித்ததில் மனதில் அடிவாங்கினான் சத்யன்.

 

“இதெல்லாம் என் தங்கைக்காக நான் கொடுக்கும் சீதனம். கவிதாவுக்கு என்னவெல்லாம் கொடுத்து திருமணம் செய்து கொடுத்தேனோ அதேயளவு பவித்ராவுக்கும் செய்து இருக்கிறேன். இதில் ஏதாவது குறை இருந்தால் தாராளமாக என்னிடம் கேட்கலாம்.” என்று பக்கா பெண் வீட்டுக்காரனாக அவன் சொல்லி முடித்தபோது,

 

“என்னத்தான் இதெல்லாம்? சீதனம் அது இது என்று நான் கேட்டேனா? எனக்கு ஒன்றும் வேண்டாம்! நான் ஆசைப்பட்டது நீங்களும் அக்காவும் திரும்பச் சேரவேண்டும் என்று மட்டும்தான் அத்தான்.” என்றவன் அருகில் நின்ற தமக்கையிடம் திரும்பி, “அக்கா, ஏன் அத்தான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்?” என்று கேட்டான்.

 

மித்ராவும் அதே கேள்வியை விழிகளில் தாங்கி கணவனை ஏறிட்டாள். கூடப் பிறந்தவன் ஒருபக்கம், கட்டியவன் மறுபக்கம் என்று அவர்கள் இருவரும் இருகூறாகப் பிரிந்து நிற்க யாருக்காக தான் பேசுவது என்று தெரியாமல் தடுமாறினாள்.

 

“என் தங்கைக்கு கணவனாக வருகிறவருக்கு இதையெல்லாம் செய்யத்தானே வேண்டும்.” என்று மனைவியின் விழிகள் சுமந்த கேள்விக்கு பதில் அவன் சொல்ல, ‘நான் உங்கள் தங்கையின் கணவன் மட்டும் தானா அத்தான்? உங்களின் சத்தி இல்லையா?’ என்று தவித்துப்போனான் சத்யன்.

 

சத்யனிடம் திரும்பி, “அன்று நீ என் தங்கையை மணந்துகொள்ள ஒரு நிபந்தனை விதித்தாய் சத்யன். அதை நான் நிறைவேற்றி விட்டேன். அதேபோல சீதனத்தையும் நீ எதிர்பார்க்கலாம் இல்லையா? இதையும் நீயாகக் கேட்டபின்னர் கொடுப்பதை விட, கேட்கமுதல் கொடுப்பது தானே எனக்கும் மரியாதை, என் தங்கைக்கும் மரியாதை. இனியும் நீ வாயால் கேட்டு நான் ஒன்றைச் செய்யும் நிலையில் இருக்கக் கூடாது பார்.” என்றான் கீர்த்தனன்.

 

“அத்தான்..” விழிகள் கலங்கிப்போயிற்று சத்யன் என்கிற அந்த முழுமையான ஆண்மகனுக்கு!

 

பவித்ராவை திரும்பிப் பார்த்தான். இதையெல்லாம் வேண்டாம் என்று அத்தானிடம் சொல்! விழிகளால் இறைஞ்சினான்.

 

அவளோ கண்களை நனைத்த கண்ணீரோடு, ‘நாலுபேர் கூடியிருக்கும் சபையில் தங்கையையும் கவுரவித்து தன் மரியாதையையும் காப்பாற்றிக் கொண்டாரே, அவர்தான் உண்மையான கூடப்பிறந்த சகோதரன். நீயும் இருக்கிறாயே!’ என்று வெறுப்போடு கேட்டாள்!

 

இவள் வேறு! நேரம் காலம் தெரியாமல்!

 

ஐயர் நல்லநேரம் முடியப் போகிறது என்று அறிவுறுத்த, மனதில் விசனத்துடன் பவித்ராவின் கழுத்திலும் சத்யன் தாலியைக் கட்டி அவளை தன் மனைவியாக்கிக்கொண்டான்.

 

அவன் கட்டிய மாங்கல்யத்தை நெஞ்சில் சுமந்தவளுக்கு அது என்னவோ பெரும் பாறாங்கல்லாக மாறி நெஞ்சை அழுத்தியது.

 

பதிவுத் திருமணத்தையும் முடித்துக்கொண்டு திரும்பி வருகையில் கீர்த்தனன் குடும்பம் அவனது காரிலும், சத்யனும் பவித்ராவும் சத்யனின் காரிலும் ஏறிக்கொள்ள, திருமணமானவர்கள் இடைஞ்சலின்றி பேசிக்கொள்ளட்டும் என்றெண்ணி வித்யாவை தங்கள் காருக்குள் ஏற்றிக்கொண்டார் சங்கரி அம்மா.

 

மற்றவர்களும் அவரவர் கார்களில் இவர்களைப் பின்தொடர்ந்தனர்.

 

மகனின் அருகில் அமர்ந்தபடி, ஜன்னல் வழியாக வேடிக்கை பார்கிறேன் என்கிற பெயரில் பின்னால் அமர்ந்திருந்த மனைவியை அவ்வப்போது கண்ணாடி வழியே பார்த்தபடி காரை ஓட்டிக்கொண்டிருந்தான் கீர்த்தனன். இப்போதே பேச்சை ஆரம்பித்து, அனைத்தையும் சுமூகமாக்கிவிட மனம் துடித்தாலும், இப்படி பாதையில் பாதிக் கவனமும், பேச்சில் மீதிக்கவனமும் என்று பேசும் விசயமல்ல இது என்றெண்ணி தன்னை அடக்கிக்கொண்டான்.

 

அதோடு, இனி காலமுழுக்க அவள் அவனோடுதானே இருக்கப் போகிறாள் என்கிற ஆறுதலும் சேர, இப்போதைக்கு தான், மனைவி, மகன் என்று மூவரும் ஒன்றாகச் சேர்ந்ததே போதும் என்றெண்ணி அமைதிகொண்டான்.

 

அடுத்த காரில் கணவனின் அருகில் அமர்ந்திருந்த பவித்ராவும் முகத்தை வெளியிலேயே திருப்பி வைத்துக்கொண்டு வர சத்யனுக்கு எரிச்சலும் ஆத்திரமும் தான் வந்தது.

 

அத்தான் தந்தபோது இவளாவது வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டாமா? என்னவோ இவள் வீட்டுக் காசுக்கும் வீட்டுக்கும் அவன் ஆசைப்பட்டது போன்ற மாயையை அண்ணனும் தங்கையுமாகச் சேர்ந்து உருவாக்கி விட்டார்களே.

 

ஏனோ அந்தக் கோபத்தை கீர்த்தனனிடம் காட்ட முடியாமல் போனதில் அருகில் அமர்ந்து வந்தவளையே திரும்பித் திரும்பிப் பார்த்து முறைத்தான்.

 

அவளோ அவனது முறைப்பையும் மனநிலையையும் உணராது தனக்குள்ளேயே போராடத் தொடங்கியிருந்தாள்.

 

காதலில் முழுமையாக தோற்று அல்லவோ காதலித்தவனை கரம் பிடித்திருக்கிறாள்.

 

விழியோரங்கள் கரிக்கப் பார்க்க, இல்லை நான் அழக்கூடாது! வாழ்ந்து காட்டவேண்டும்! என்னைத் தோற்கடித்தவனின் மனதை வென்று காட்டவேண்டும்!

 

ஏமாற்றப் பட்டுவிட்டோம் என்றதும் சோர்ந்துவிட்டால் நடந்தது மாறிவிடுமா என்ன?

 

பார்க்கலாம்! என் கணவனே நீயா நானா என்று பார்க்கலாம்?

 

அவள் மனம் உறுதி பூண்டது!

 

 

error: Alert: Content selection is disabled!!