தனிமைத் துயர் தீராதோ 37 – 2

“இனியாவது இந்த வேட்டியை கழட்டலாம் தானே.” என்று அர்ஜூனின் காதை கடித்தான் சத்யன்.

 

“டேய், இன்றைக்கு உன் கல்யாண நாள்டா. வேட்டியோடு இருந்தால் என்ன? அதோடு, இதென்ன எப்போது பார்த்தாலும் நீ ஒருபக்கம் பவித்ரா ஒருபக்கம் என்று இருக்கிறீர்கள். அவளுக்கு அருகில் போய் நில்” என்றான் அர்ஜூன்.

 

“அதெல்லாம் தேவையில்லை!” என்று எரிச்சலோடு அவன் சொல்ல, அதை கேட்டபடி அங்கு வந்தார் சங்கரி.

 

“என்ன தேவையில்லை?” என்று அதட்டி, அவனையும் பவித்ராவையும் இரட்டைச் சோபா ஒன்றில் ஒன்றாக அமர்த்தினார்.

 

சத்யன் அமர்ந்ததும், முடிந்தவரை அவனைத் தொடாமல் அமர்ந்தாள் பவித்ரா. அந்தச் செய்கை, சற்றுமுன்னர் அவன் தோள் தெரியாமல் உரசியதும் அவள் தள்ளி நின்றதை நினைவூட்ட, வசதியாக அமர்ந்துகொள்வதுபோல் வேண்டுமென்றே அவளின் தோளை இடித்துக்கொண்டு அமர்ந்தான் சத்யன்.

 

பவித்ரா திரும்பிப் பார்த்து முறைக்க, அவனோ இவள் பக்கம் திரும்பவே இல்லை.

 

அப்போது, சேடிப்பெண்கள் புடைசூழ நடந்துவரும் அரசகுமாரி போன்று, வித்யாவும் அஞ்சலியும் பலகாரத் தட்டுக்களுடன் வர எல்லோருக்கும் தேநீர் கொண்டுவந்தாள் மித்ரா.

 

வைத்தவிழி வாங்காது மனைவியையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் கீர்த்தனன். எல்லோருக்கும் தேநீர் வழங்கியவள் கடைசியாக கணவனிடம் தட்டை நீட்டினாள்.

 

ஆவலுடன் அவள் முகத்தை அவன் பார்க்க, அவளோ தட்டில் பார்வையை பதித்துநின்றாள். முகம் வாட, கப்பை எடுக்கக் கையை நீட்டியபோது, மித்ராவின் கழுத்தில் இருந்த தாலி சேலை மறைவுக்குள் இருந்து வெளியே வந்து முன்னும் பின்னுமாக ஆடி அவனின் கவனத்தை ஈர்த்தது. தன்னவள் மீண்டும் தன் கரம் சேர்ந்துவிட்டதை அந்தத் தாலி உரக்கச் சொல்ல, வாடிப்போன அவன் முகம் மீண்டும் தன் ஜீவனை மீட்டுக்கொண்டது.

 

தட்டை அங்கிருந்த மேசையில் வைத்தவள் தன்னருகில் அமர்வாள் என்று அவன் எதிர்பார்க்க, கணவனின் அருகாமையை கவனமாக தவிர்த்துக்கொண்டு சங்கரி அம்மாவின் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள் மித்ரா.

 

காரிலும் மகனோடு பின்னால் அமர்ந்தவள் இப்போதும் அவனை தவிர்த்துவிட்டாள். காரணம் அறியாது மனைவியை பார்த்தான் கீர்த்தனன்.

 

இப்படி இரண்டு ஜோடிகளுக்குள்ளும் மௌனமாக நடக்கும் இந்த யுத்தங்களை அறியாத குழந்தைகள் திவ்யாவும் சந்தோஷும் தங்களின் விளையாட்டை தொடங்க, அவர்களோடு அஞ்சலியும் கலந்துகொள்ள, சற்று நேரத்தில் வித்யாவும் இணைந்துகொண்டாள்.

 

புன்னகையோடு அதைப் பார்த்துக்கொண்டு இருந்த தாமோதரன், முதல்நாள் பயணத்தின் காரணமாகவும், அன்று அதிகாலையிலேயே எழுந்து கொண்டதினாலும் உண்டான களைப்பில் மறைமுகமாக ஒரு கொட்டாவியை வெளியேற்ற, அதைக் கவனித்த மித்ரா, “கொஞ்சநேரம் ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள் அப்பா.” என்றாள் அக்கறையோடு.

 

“ஓய்வு எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் மித்து. ஆனால் இந்தக் குழந்தைகள் சேர்ந்து விளையாடுவதை இன்றைக்கு மட்டும்தானே பார்க்கலாம். இனி அடுத்த லீவுக்குத்தானே நாம் எல்லோரும் திரும்ப சந்திப்போம்.” என்றார் அவர் அங்கிருந்து அசையாமல்.

 

“நாளைக்கே போகிறீர்களா சேகரன்? அவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள், உடனேயே திரும்ப வேண்டுமா?” என்று அர்ஜூன் கேட்க,

 

“அதைத்தான் அண்ணா நானும் சொன்னேன். ஒருவாரம் நின்று தங்கிப் போங்கள் என்றால் கேட்கிறார்கள் இல்லை.” என்றாள் மித்ரா குறையோடு.

 

அவளைப் பார்த்த நொடியில் இருந்து எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, அவளைப் பற்றிய தூண்டித் துருவல்கள் இன்றி, அன்பைப் பொழிந்த அவர்களைப் பிரிவது பெரும் வருத்தத்தைக் கொடுத்தது.

 

அவளின் தலையை தடவிக் கொடுத்த சங்கரி, “எங்களுக்கும் நிற்கத்தான் மித்தும்மா ஆசை. உன் அப்பாவுக்கு நாளை மறுநாள் புல் செக்கப் ஒன்று இருக்கிறது. ஒரு வருடத்துக்கு முதலே முன்பதிவு செய்த நாள் இது. கட்டாயம் போகவேண்டும். ஆனால், அடுத்த லீவுக்கு எல்லோருமாக அங்கே வரவேண்டும். தனா, எல்லோரையும் கூட்டிக்கொண்டு வரவேண்டியது உன் பொறுப்பு!” என்று அழைப்பு விடுத்தார் அவர்.

 

“கட்டாயம் மாமி.” என்றான் அவன்.

 

“உன் வேலை என்னமாதிரி சத்தி? பொன்னில் வேலை செய்வதாக உன் அக்கா சொன்னாளே? நிரந்தரமாகவே அங்கேதான் வேலையா?”

 

“அங்கே இன்னும் ஒரு.. மூன்று வார வேலை இருக்கிறது என்று நினைக்கிறேன். பிறகு இங்கேதான் அம்மா.” என்றான் அவன்.

 

“அதுவரை உன் மனைவி என்ன செய்யப் போகிறாள்? அம்மா அப்பாவோடு விடப் போகிறாயா?”

 

அன்று, சுவிசில் வைத்து கீர்த்தனன் சொன்னதைத் தாண்டி, மற்ற விஷயங்கள் அறியாதவர் கேட்க, சத்யனுக்கோ என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

 

மனைவி, குடும்பம், எங்கே வாழ்வது என்பது பற்றியெல்லாம் முதலே யோசித்து இருந்தால் தானே பதில் சொல்ல முடியும்.

 

அக்காவின் திருமணம் என்று அதிலேயே குறியாக இருந்தவன், பதிலற்று தமக்கையை பார்க்க, “அவனும் இனி இங்கேதான் இருக்கப் போகிறான்.” என்றான் கீர்த்தனன்.

 

“இந்த வீடு மூன்று மாடிகளாக நாங்கள் வாங்கியதே எல்லோரும் ஒன்றாக இருக்கத்தான் மாமி. மேல் மாடி அவனுக்கு. அதற்கு வேண்டிய தளபாடங்கள் கூட வாங்கிப் போட்டுவிட்டேன். அதற்கு மேலே வித்யாவுக்கு. இப்போ, அவன் திரும்பி வரும்வரை பவி எங்களோடுதான் இருப்பாள்.” என்றான் தொடர்ந்து.

 

“ஓ.. முதலே எல்லாவற்றையும் திட்டம் போட்டுச் செய்திருக்கிறீர்கள்.” என்று மெச்சிக்கொண்டார் சங்கரி.

 

அந்த மெச்சுதலில் மகிழ முடியாமல் மனம் சுருண்டது சத்யனுக்கு. அந்த மூன்றுமாடித் திட்டம் அந்த வீடு வாங்குகையில் அவர்கள் எல்லோருமாக கதைத்துப் பேசியதுதான். ஆனால் இன்று, கோவிலில் வைத்து சீதனம் கொடுத்ததன் பிறகு, இதை சாதரணமாக எடுக்க இயலவில்லை அவனால். இதுவும் அந்த சீதனத்தில் அடக்கமா என்கிற சினத்தில் சத்யனின் முகம் சிவந்தது.

 

 

அன்று இரவு;

 

error: Alert: Content selection is disabled!!