காலையில் கண்விழிக்கும் போதே துயிலில் ஆழ்ந்திருந்த மகனின் பால்வடியும் முகத்தில் விழித்ததில் மிகவும் உற்சாகமாக உணர்ந்தான் கீர்த்தனன். அவன் நெற்றிக் கேசத்தை மெல்ல ஒதுக்கி இதழ் பதித்துவிட்டு, மெதுவாக எழுந்து குளியலறைக்குள் புகுந்தான்.
குளித்துவிட்டு இடுப்பில் கட்டிய துண்டோடு, இன்னொரு துவாலையால் தலையை துவட்டியபடி, உறங்கும் மகன் விழித்து விடாதிருக்க குளியலறைக் கதவை மெல்லத் திறந்துகொண்டு வந்தவனின் நடை, கட்டிலை பார்த்ததும் நின்றது.
ஒரு கையால் தலையை தாங்கிக்கொண்டு மகனின் அருகில் ஒருக்களித்துப் படுத்திருந்தாள் மித்ரா. மற்றக் கையால் உறக்கம் கலைந்ததில் சிணுங்கிக்கொண்டிருந்தவனை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
தலைசிறந்த சிற்பியால் கூட வடிக்கமுடியாத சிற்பமாய் மனதில் பதிந்தது அந்தக் காட்சி! கண்களை அவர்களிடம் இருந்து அகற்ற முடியாமல் நின்றான் கீர்த்தனன்.
மகனை தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்த மித்ரா, மெதுவாக என்றாலும், கதவு திறக்கப்படும் ‘கிளிக்’ என்ற ஓசையில், விழிகளை மட்டுமாக உயர்த்திப் பார்க்க, அவளது விழிகளும் அவனிடம் ஒட்டிக்கொண்டன.
புத்துணர்ச்சியில் பளபளத்த களையான முகத்துக்கு கலைந்துகிடந்த ஈரமான கேசம் கவர்ச்சியை கொடுக்க, வைரம் பாய்ந்த வெற்றுடம்பில் தண்ணீர் துளிகள் வைரத் துளிகளாக மின்ன, இடுப்பில் துண்டுடன் அவன் நின்ற கோலத்தில் தடுமாறிப் போனாள்.
சிலகணங்கள் அவனிடமிருந்து கண்களை அகற்றமுடியவில்லை.
மனைவியை கண்டுகொண்டவனின் இதழ்களில் இளநகை துலங்க, ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கண்ணால் சிரித்தான். கன்னங்கள் சூடேற சட்டென எழுந்தமர்ந்தாள் மனையாள்.
“அது.. சந்து.. அழுதான்.. அதுதான் வந்தேன்..”
அந்த அறைக்குள் தன் முன்னால் இயல்பாக இருக்கமுடியாமல் அவள் தடுமாறுவது மனதை வருத்தியது.
“ஓ.. சந்து எழுந்துவிட்டானா?” என்று, எதையும் காட்டிக்கொள்ளாது இயல்பாக கேட்டுக்கொண்டே, கண்ணாடி முன் நின்று தலையை துவட்டத் தொடங்கினான்.
மித்ராவோ இப்போது கட்டிலில் இருந்து எழுந்து, வெளியே செல்லப் பார்க்க, இதயத்தின் வலி கண்களில் துலங்க அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் அவன்.
தகப்பனை போலவே மகனுக்கும் அன்னை அந்த அறையை விட்டுப் போவது பிடிக்கவில்லை போலும், அவன் மீண்டும் சிணுங்கத் தொடங்க, மகனைத் தூக்க முயன்றாள் மித்ரா.
பொறுமை பறந்தது கீர்த்தனனுக்கு!
கையிலிருந்த துவாலையை தூக்கி எறிந்துவிட்டு அவளை நெருங்கி, அவளது தோள்கள் இரண்டையும் பற்றி, “உனக்கு என்னதான் பிரச்சனை மித்து? உறக்கத்துக்கு அழுகிற பிள்ளையை ஏன் தூக்குகிறாய்?” என்றான் கோபத்தோடு.
அவன் பற்றியதில் தேகமெல்லாம் சிலிர்த்தோட, மிரட்சியோடு அவனைப்பார்த்து விழித்தாள் மித்ரா.
“இல்ல.. அது..” என்று அவள் கலக்கத்தோடு இழுக்க, “இயல்பா இரு. உன் விருப்பத்துக்கு எதிரா எதுவுமே நடக்காது!” என்றவன், சட்டென்று திரும்பி தன் உடைகளோடு மீண்டும் குளியலறைக்குள் புகுந்துகொண்டான்.
புகுந்தவனுக்கோ மனம் புகைந்தது. அதென்ன பார்வை.. எதற்கு அந்தக் கலக்கம்? அவளை அவன் என்ன செய்து விடுவானாம்? அப்படியே செய்தால் தான் என்ன? அவன் செய்யாததா?
அவர்களுக்கு நடுவில் இரண்டரை வருடகால பிரிவு நிகழ்ந்ததுதான் என்றாலும் சுவிஸ் போனபோது இந்த அசூசையை, அசௌகரியத்தை அவள் காட்டவில்லையே.
இன்றுமட்டும் ஏன்?
இரண்டரை வருடப் பிரிவு என்பதும், அவர்களுக்குள் நடந்தவைகளும் சாதாரண விஷயங்கள் அல்லதான். புண்பட்டுப் புண்பட்டே புண்ணாகிப் போன அவளால் அதையெல்லாம் சட்டென உதற முடியாதுதான். அதையெல்லாம் உணர்ந்துதான் முடிந்தவரை இயல்பான குடும்ப சூழ்நிலையை உருவாக்கிவிட அவன் முயற்சிக்கிறான். அது தெரிந்தும் வேண்டுமென்றே விலகிப்போய் தனக்குள் சுருண்டுகொண்டே போனால், இன்னும் அவன் என்னதான் செய்வது?
உள்ளத்தில் புயல் அடித்தாலும், தயாராகி வந்தவனை உறங்கிவிட்ட மகன் மட்டுமே அந்த அறைக்குள் இருந்து வரவேற்றான்.
ஒரு பெருமூச்சுடன் வெளியே வந்தவன், அங்கே சேகரன் குடும்பம் எல்லோரும் பயணத்துக்கு தயாராக இருக்கக் கண்டான். சத்யன் பவித்ராவும் அங்கு வர, அங்கிருந்த அனைவரின் பார்வைகளும் ஆராய்ச்சியுடன் அவர்களை மொய்த்தது. அதை எதிர்கொள்ள சங்கடப்பட்டு பவித்ரா மித்ராவுக்கு உதவி செய்யும் சாக்கில் சமையலறைக்குள் நுழைந்துகொண்டாள்.
எல்லோருமாக காலை உணவை முடித்துக்கொண்டதும், சேகரன் குடும்பம் விடைபெற்றுச் சென்றது.
அவர்களை வழியனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்தவர்களுக்கு, வித்யாவும் பள்ளிக்கு கிளம்பிவிட்டிருந்ததில் நான்குபேர் இருந்தும் வீடே வெறிச்சோடிப் போனதுபோல் ஒரு தோற்றம். யாரோடு என்ன கதைப்பது என்கிற தடுமாற்றம்.

