தனிமைத் துயர் தீராதோ 38 – 2

மித்ரா பாத்திரங்களை ஒதுக்க சமையலறைக்குள் செல்ல, பவித்ராவும் அவளோடு சென்றாள். சென்றவளின் பார்வை சீண்டலோடும் சீறலோடும் கணவனை வெட்டிச் சென்றது.

 

தேகம் விறைக்க கீர்த்தனனைப் பார்த்தான் சத்யன். “உங்கள் மனதில் நீங்கள் என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் அத்தான்?” எடுத்த எடுப்பிலேயே பொரிந்தான்.

 

திடீரென்று வந்த குற்றச்சாட்டில், தொலைக்காட்சியை ரிமோட் மூலம் உயிர்ப்பிக்க நீண்டவனின் கை அந்தரத்தில் அப்படியே நிற்க, கேள்வியாக சத்யனை திரும்பிப் பார்த்தான்.

 

அவனோ, அனல் கக்கும் மூச்சுக்களை வெளியேற்றிக்கொண்டு, கோபத்தில் சிவந்துவிட்ட முகத்தோடு, “உங்கள் தங்கையை சீதனத்துக்காகத்தான் கட்டினேனா? காசு வேண்டும் கார் வேண்டும் என்று கேட்டேனா? ஏன் அத்தான் இப்படி என்னைக் கேவலப்படுத்தினீர்கள்? எல்லோர் முன்னாலும் வைத்து அவமானப்படுத்தி விட்டீர்களே!” என்று பொங்கி எழுந்தான் அவன்.

 

வாழ்க்கைப் பாடத்தை கற்காத இளம் கன்று அல்லவா, ஆத்திரப்பட்டு கேட்டான். ஆனால், அனுபவமும் நிதானமும் மிகுந்த கீர்த்தனன், தன் கூறிய விழிகளால் அவனை நிதானமாக நோக்கினான். அந்தப் பார்வையே சத்யனை அடக்க முயன்றது.

 

அவனின் சத்தமான குரல் கேட்டு பதட்டத்தோடு ஹாலுக்கு ஓடிவந்த மித்ரா, “டேய் சத்தி! என்னடா இது?” என்று பதறினாள்.

 

மீண்டும் மீண்டும் கணவனை கோபப்படுத்துகிறானே என்கிற அச்சம் அவளுக்குள். அவளோடு சேர்ந்துவந்த பவித்ராவை முறைத்துவிட்டு, “அது ஒன்றுமில்லை அக்கா. சும்மாதான் அத்தானோடு கதைக்கிறேன்.” என்று அவளிடம் சமாளித்துவிட்டு கீதனின் பக்கம் திரும்பி,

 

“சொல்லுங்கள் அத்தான், இந்த சீதனத்துக்காகத்தான் பவித்ராவை நான் மணந்தேனா?” என்று திரும்பவும் கேட்டான் சத்யன்.

 

“நீ அவளுக்காகவும் அவளை மணக்கவில்லை சத்யன். அதையும் மறந்துவிடாதே.” என்றான் கண்டிப்பான குரலில் கீர்த்தனன்.

 

ஒரு நிமிடம் பேச்சற்றுப் போனது சத்யனுக்கு. என்றாலும் விடாமல், “ஆனால் சீதனம் கேட்கவில்லையே நான்? அதனால் அதையெல்லாம் நீங்களே திருப்பி வாங்கிக்கொள்ளுங்கள்.” என்று தன் விசயத்திலேயே குறியாக நின்றான் அவன்.

 

மறுத்துத் தலையசைத்தான் கீர்த்தனன்.“அது முடியாது! சீதனம் தரவேண்டியது என் கடமை. அதோடு, இப்போது நான் திருப்பி வாங்கினால், சொந்த பந்தத்துக்கு முன்னால் தருவதுபோல் தந்துவிட்டு தனிமையில் திருப்பி வாங்கிவிட்டார் என்று யாரும் சொல்லவா? யாரும் என்ன, நீ கூடச் சொல்வாய். அல்லது அதுதான் உன் திட்டமா?” என்று சத்யனின் விழிகளை நேராக பார்த்துக் கேட்டான் அவன்.

 

தான் செய்த பிழையை உணர்ந்து கொள்ளாதவனுக்கு, கீர்த்தனன் தன்னை அநியாயமாக குற்றம் சாட்டுவதாகத் தோன்ற, “அப்போ நானும் என் அக்காவுக்கு சீதனம் தரத்தானே வேண்டும். அதுவும் என் கடமைதானே. என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்? நான் தருகிறேன்.” என்று நெஞ்சை நிமிர்த்திக் கேட்டான்.

 

எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிக்கும் கீர்த்தனனே ஆத்திரத்தில் எழுந்துவிட்டான். தன்னை நிதானப்படுத்திக்கொள்ள சில நொடிகள் தேவைப் பட்டது அவனுக்கு.

 

மித்ராவோ பதறிப் பயந்தே போனாள். “என்ன சத்தி இது பேச்சு? திரும்பத் திரும்ப தப்புத் தப்பாகவே ஏன் நடக்கிறாய்?” என்று பதறியவள், “கீதன், அவன்..” என்றபடி கணவனிடம் விரைய, அவனோ பார்வையால் அவளை அடக்கினான்.

 

பரிதவிப்புடன் அந்த இடத்திலேயே அவள் நிற்க, பவித்ராவோ எப்போதும் அடுத்தவரின் மனதைப் பற்றி யோசிக்காமல் உளறும் கணவனை என்ன செய்தால் தகும் என்பதாக முறைத்தாள்.

 

தன்னை நிதானித்துக்கொண்டு, ஆழ்ந்த மூச்சுக்களை இழுத்து விட்டுவிட்டு சத்யனை நோக்கித் திரும்பினான் கீர்த்தனன்.

 

எல்லோரின் விழிகளும் பதட்டத்தோடு அவன் முகத்தையே மொய்க்க, அவன் பார்வையில் தெரிந்த தீர்க்கத்தில் சத்யனின் உள்ளம் ஒருகணம் ஆடியது.

 

“அத்..தான்.” என்றபடி தானாக எழுந்துநின்றான்.

 

“இங்கேபார் சத்யன்! இந்தப் பேச்சு இன்றுதான் கடைசியாக இருக்கவேண்டும்! உன் அக்கா என் மனைவி. அது நடந்து பல ஆண்டுகளாகிவிட்டது. நாங்கள் பிரிந்து இருந்தோம் தான். ஆனால், நான் மீண்டும் கரம் பிடித்தது என் மனைவியைத்தான். உன் அக்காவை இல்லை! புரிந்ததா உனக்கு?” என்றான் கண்டிப்பு நிறைந்த குரலில் அதட்டலாக.

 

தன் பேச்சு சற்றே அதிகப்படி என்பதை ஏற்கனவே அவனே உணர்ந்திருந்தான். அதோடு, கீர்த்தனனின் பேச்சும் சேர்ந்துகொள்ள, “சாரித்தான்.” என்றான் இறங்கிவிட்ட குரலில்.

 

error: Alert: Content selection is disabled!!