அதற்கு பதிலேதும் சொல்லாமல் அவன் நிற்க, “சரித்தான். இனி அதைப்பற்றி நான் எதுவும் கதைக்கவில்லை. ஆனால், என்ன பிழை செய்தேன் என்று என்மேல் உங்களுக்கு இந்தக் கோபம்?” என்று முகம் வாடக் கேட்டான்.
“எந்தத் தப்பும் நீ செய்யவே இல்லையா சத்யன்?” கூர்மையோடு கீதன் கேட்க,
“எனக்குத் தெரிந்து நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. செய்தது எல்லாம் அக்காவுக்காக. அவளும் நீங்களும் சேர்ந்து சந்தோசமாக வாழவேண்டும் என்பதற்காக. அதோடு, பவித்ராவையும் ஏமாற்றாமல் திருமணம் செய்துதான் இருக்கிறேன்.” என்றான் அவன்.
கீர்த்தனன் சட்டென தன் தங்கையை பார்த்தான். கன்றிப்போன முகத்தோடும், கலங்கிவிட்ட விழிகளோடும் அவள் நிற்க அவன் முகம் கடினப்பட்டது.
“அதென்ன, ‘பவித்ராவையும் திருமணம் செய்துதான் இருக்கிறேன்’ என்று என்னவோ பெரிய தியாகம் செய்தவன் போல் சொல்கிறாய். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ? உன் மிரட்டலுக்குப் பயந்து அவளை உனக்குக் கட்டிவைத்தேன் என்றா? அல்லது, இனி வேறு வழியில்லை என்றா? எதுவும் கிடையாது! அவள் உன்னை மனதில் நினைத்துவிட்டாள் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இந்தத் திருமணமே நடந்தது. அல்லாவிட்டால் நீ தலைகீழாக நின்றிருந்தாலும் உனக்குக் கட்டிவைத்திருக்க மாட்டேன்! அதை நீ நன்றாக நினைவில் வைத்துக்கொள்!” என்றான் அழுத்தம் திருத்தமாக.
முகம் சிறுத்துப் போனது சத்யனுக்கு.
ஒருவழியாக தன்னை சமாளித்துக்கொண்டு, “சரித்தான். எப்படியோ எல்லாம் நல்லபடியாக முடிந்தது தானே. பிறகும் ஏன் எப்போதும்போல் என்னோடு கதைக்கிறீர்கள் இல்லை?” என்று கேட்டான்.
“அப்படி எதுவும் இல்லையே சத்யன்.”
“பிறகு ஏன் சத்யன் என்று சொல்கிறீர்கள்?”
ஒருகணம் ஒன்றுமே சொல்லாதவன், “அதுதானே உன் பெயர். பெயரை சொல்லித்தானே கூப்பிடவேண்டும்.” என்றான்.
“என் பெயர் அதுதான் என்று உங்களுக்கு இன்று நேற்றுத்தான் தெரியுமா? இதுநாள் வரை நீங்கள் அப்படி கூப்பிட்டது இல்லையே.”
“இதெல்லாம் ஒரு விஷயம் என்று பேசிக்கொண்டு இராமல் போய் பார்க்கிற வேலையை பார்!” என்றுவிட்டு அங்கிருந்து சென்றான் கீர்த்தனன்.
அவனை சமாதானப்படுத்த முடியாமல் போன இயலாமையில் மனைவியை முறைத்தான் சத்யன். அவளோ அவனையும் மதியாது, அவன் பார்வையையும் மதியாது பால்கனியில் சென்று நின்றுகொண்டாள்.
தன்னால் தமையனுக்கு மேலும் மேலும் பிரச்சனைகள் வருகிறதே என்று உள்ளுக்குள் கண்ணீர் வடித்தாள். கணவனாகிப் போனவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் நெஞ்சை இன்னுமின்னும் பதம் பார்த்துக்கொண்டே இருந்தது. இதற்கெல்லாம் காரணம் அவள் மனதில் உதித்த கண்டறியாத காதல்! அது வராமல் இருந்திருக்க, இந்த ஜானை சந்திக்காமல் இருந்திருக்க, இதெல்லாம் நடந்தே இராதே!
இங்கே சத்யனும் மனதில் சுணக்கத்தோடும், தெளிவில்லாத முகத்தோடும் கைகளில் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தான். எவ்வளவோ கேட்டும் அத்தானின் கோபம் இன்னும் போகவில்லையே என்கிற வருத்தம் அவனுக்குள்.
மித்ரவுக்கோ இப்போது யாரிடம் என்ன பேசி எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியாத நிலை.
தம்பியின் அருகில் சென்று, “சத்தி..” என்று அவள் ஆரம்பிக்கும்போதே, “அக்கா, ப்ளீஸ்க்கா இப்போது எதுவும் சொல்லாதே!” என்றவன் எழுந்துகொண்டான். “வேலைக்கு கிளம்புறேன்.” என்று அவன் புறப்பட,
“என்னடா இது? நாளைக்குத்தானே போவதாக சொன்னாய்.” என்று கேட்டாள் தமக்கை.
“ப்ச்! நாளைக்கு போனால் என்ன இன்றைக்கு போனால் என்ன? குடியா முழுகப் போகிறது?” எரிச்சலோடு சினந்தவன், அவளிடம் விடைபெற, “பவியிடம் சொல்லிக்கொண்டு போடா.” என்றாள் அவள்.
“அது ஒன்றுதான் குறை!” என்று அதற்கும் எரிந்து விழுந்தவன், கீர்த்தனனிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.
தொலைவுக்கு சென்று தனியாக வேலை பார்க்கப் போகிறவன் மனதில் பாரத்தோடு செல்கிறானே! கண்ணை கரித்தது மித்ராவுக்கு.
அங்கே வெளியே பால்கனியில் நின்று தமக்கைக்கும் தம்பிக்கும் இடையில் நடந்த உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த பவித்ராவுக்கும் விழியோரங்களில் நீர் கசிந்தது.
மித்ரா சொன்னது அவள் காதிலும் விழுந்ததுதான். அவன் தன்னிடம் வராமல் இருந்தால் நல்லது என்று அவளும் நினைத்தாள் தான். அந்தளவுக்கு உள்ளம் கசந்து போயிருந்தது.
ஆனால், அவள் நினைத்தது போலவே அவளிடம் சொல்லாமல் அவன் சென்றபோது மறுபடியும் ஏமாந்துவிட்ட உணர்வு அவளை பலமாக தாக்கியது.
சத்யன் சென்றதும், கணவனின் அறைக்குள் சென்றாள் மித்ரா. அங்கே அவனும் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான். அணிந்திருந்த ஷர்ட்டின் பட்டனை பூட்டிக்கொண்டு இருந்தவன், நிமிர்ந்து பார்த்தான்.

