திரும்பத் திரும்ப முதுகெலும்பு அற்றவளாக கணவன் முன்னால் போய் நிற்கவேண்டுமா? அப்படிச் செய்தால் இன்னுமின்னும் அவளை மரியாதையின்றி நடத்தமாட்டானா?
தவறுகளை எல்லாம் அவன் செய்திருக்க, அவள் சமாதானக் கொடியை பறக்க விடுவதா? இந்த சிந்தனைகள் உள்ளுக்குள் ஓட, சந்தோஷோடு சேர்ந்து கார்ட்டூனில் மூழ்கியிருந்தாள் பவித்ரா.
அப்போது வீட்டுத் தொலைபேசி சத்தமெழுப்ப, அதை எடுத்து, “ஹலோ…” என்றாள்.
அந்தப் பக்கத்தில் இருந்து சத்தமின்றிப் போகவே, சற்று நேரம் காத்திருந்து பார்த்தாள். யாரும் பேசக் காணோம்! குழப்பத்தோடு திரும்பவும், “ஹலோ..” என்றாள்.
யார் கதைக்கிறீர்கள் என்று கேட்க யோசனையாக இருந்தது. யாராவது ஜேர்மனியராக இருந்தால் அவள் பேசும் தமிழ் விளங்காதே.
ஆனால், அவளை நிறைய நேரம் குழம்ப வைக்காமல், “அக்கா எங்கே?” என்றது அந்தப்புறம்.
எதிர்பாராமல் செவிவழி நுழைந்த கணவனின் குரல் இரத்த நாளங்களை சீண்டி, உடலையும் உள்ளத்தையும் சிலிர்க்க வைத்து, நெஞ்சுக்குள் போய் நிறைந்தபோது, அப்படியே உறைந்து நின்றாள் பவித்ரா.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு கணவனின் குரலைக் கேட்கிறாள். அந்தக் குரல் அவனைக் காணவேண்டும், அவனோடு கதைக்கவேண்டும் என்கிற ஏக்கத்தை பூதாகாரமாய் அவளுக்குள் எழுப்பியதில் ஒருகணம் அவளே திகைத்துத்தான் போனாள்.
அவன் மீது இன்னுமா அவளுக்கு அன்பிருக்கிறது?
இப்போது இவளின் அமைதி அவனுக்கு சூடேற்றியது போலும். “அக்கா எங்கே என்று கேட்டேன்?” என்றான் எரிச்சலோடு.
பேசுவது அவள் என்று தெரிந்தும், எப்படி இருக்கிறாய்? சாப்பிட்டாயா? என்ன செய்கிறாய் என்று அவளைப்பற்றி விசாரிக்க மனம் வரவில்லையே அவனுக்கு!
“அதை அண்ணிக்கே அழைத்துக் கேட்க வேண்டியது தானே.” என்றாள் வேண்டுமென்றே.
தினமும் தமக்கைக்கு எடுத்துக் கதைக்கிறவன், அவனை தள்ளிவைத்துக் கதைக்கும் கீர்த்தனனோடு கூட இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கதைக்கிறவன் அவளோடு மட்டும் கதைக்காமல் இருந்தான் என்கிற கோபமும் அதில் வெளிப்பட்டது.
“அக்காவுக்கு அழைத்துப் பார்க்காமலா வீட்டுக்கு எடுக்கிறேன். அவளின் செல் அணைத்துவைக்கப் பட்டிருக்கிறது. எங்கே போய்விட்டாள்?” என்று கேட்டான் அதிகாரமாக.
அதுதானே பார்த்தேன்! நீயாவது என்னைத் தேடி எடுக்கிறதாவது!
மித்ரா அவளின் மேலதிகாரி யாரையோ சந்திக்கப் போயிருக்கிறாள் என்று தெரிந்தும், “தெரியாது!” என்றாள் வீம்புக்கு என்றே.
“இதைக்கூட தெரிந்து வைக்காமல் நீ எதற்கு வீட்டில் இருக்கிறாய்?”
அந்தக் கேள்வி மனதை தைக்க, “நான் என்ன உங்கள் அக்காவின் ‘பிஎ’ வா? அவரின் தம்பி பெண்டாட்டி.” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
அந்தப் பக்கம் அவன் பல்லைக் கடிப்பது இந்தப் பக்கம் இவளுக்கு கேட்டு, இனிய சங்கீதமாய் செவியை நிறைத்தது.
வெடித்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அவள் நிற்க, “அக்கா வந்ததும் நான் அவசரமாக எடுக்கச் சொன்னேன் என்று சொல்!” என்றவனின் தொனியே, அப்படியே அவன் செல்லை அணைக்கப் போகிறான் என்று தெரிய,
“ஏன் ஜான்? ஏதாவது பிரச்சனையா?” என்று தன்னை மீறி கேட்டாள் அவன் மனைவி.
“பிரச்சனைதான் என்றால் என்ன செய்யப் போகிறாய்?” என்று நக்கலாகக் கேட்டான் அவன்.
அந்த நக்கல், பெரிதாக எதுவுமில்லை என்று சொல்ல, “என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்.” என்றவள், “ஆனால், ஊர் உலகத்தில் இருக்கிற அத்தனைபேருக்குமே பிரச்சனையை கொடுக்கிற உங்களுக்கா பிரச்சனை வரப்போகிறது? நீங்கள் யாருக்கும் கொடுக்காமல் இருந்தால் சரிதான்.” என்றவள், அவன் எதையாவது சொல்லமுதல் தானே தொலைபேசியை வைத்தாள்.
வைத்தவளின் உள்ளத்தை வார்த்தைகளால் வடிக்கமுடியாத உணர்வுகள் வந்து தாக்கின. அவன் ஒன்றும் அவளைத் தேடி அழைக்கவில்லை. கனிவோடு பேசவில்லை. எப்படி இருக்கிறாய் என்று கூடக் கேட்கவில்லை. ஆனாலும், நெஞ்சிலோர் பரவசம். இத்தனை நாட்களாயிருந்த அலைப்புறுதல் அடங்கி, அவன் மனதில் தான் இடம்பிடித்தே ஆகவேண்டும் என்கிற முடிவை உறுதியாக எடுக்க வைத்தது.
மறுபடியும் வாழ்க்கைப் போராட்டத்தில் அவனோடு போராடத் தயாரானாள் அவன் மனைவி. தொலை தூரத்தில் இருக்கும் கணவனோடு மனதோடு சண்டையிடத் தொடங்கினாள் பவித்ரா.
நீ உன் அக்காவுக்கு நல்ல தம்பியாக இருந்துகொள். உன் தங்கைக்கு நல்ல அண்ணனாக இருந்துகொள். அதேநேரம் எனக்கும் நல்ல கணவனாக நீ இருக்க வேண்டாமா? உன்னை நான் அப்படி மாற்றாவிட்டால் உன்னை உருகி உருகி காதலித்ததற்கு என்ன பயன்? அவளை நான் காதலிக்கவில்லை என்று எல்லோருக்கும் முன்னாலே நீ சொன்னபிறகும் உன்னையே கட்டிக்கொண்டதற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா?
நல்லதொரு சகோதரனாக நீ வெற்றிக்கொடி நாட்டி இருக்கலாம். அதேபோல,நல்ல காதலியாக நல்லதொரு மனைவியாக நானும் வெற்றிக்கொடி நாட்டி உனக்கு ஈடாக வரவேண்டாமா? உன் காதலை பெற வேண்டாமா? உன்னை என்னைக் காதலிக்க வைக்க வேண்டாமா?
கணவனே, நீயும் தோற்க வேண்டாம். நானும் தோற்க வேண்டாம். வா, இருவருமாக வெல்வோம்! இனி என் போராட்டம் அந்த வெற்றியை நோக்கித்தான்.

