அந்த ஒற்றைப் படுக்கையறை வீடு இருளில் மூழ்கியிருக்க, ஹால் மேசையில் ஒற்றையாய் வீற்றிருந்த மெழுகுதிரி, தன்னை உருக்கி மெல்லிய வெளிச்சத்தை ஹாலுக்குள் பாய்ச்சி கொண்டிருந்தது. வீடே நிசப்தமாக இருக்க, கடிகாரத்தின் டிக் டிக் சத்தம் மட்டும் வெகு துல்லியமாகக் கேட்டுக்கொண்டிருந்தது.
அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்த மித்ரா, துயிலில் ஆழ்ந்திருந்த மகனை மடியில் தாங்கியிருந்தாள். விழிகளோ வீட்டுக்குள் பரவியிருந்த மெல்லிய வெளிச்சத்தில் அவனின் வரிவடிவத்தை அளந்தன.
‘இனி அவனுக்கு உறவென்று அவள் மட்டும்தான்.’ என்கிற எண்ணம் மீண்டும் மீண்டும் எழ, துயர் தாங்கமாட்டாமல் அவனை அள்ளி அணைத்தாள். மார்பில் சாய்த்து, அவன் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தாள். அதன்பிறகுதான் மனம் சற்றேனும் அமைதி கொண்டது!
கீர்த்தனன் மகனின் நெற்றியில் முத்தமிட்டான் என்று தெரிந்ததில் இருந்து இதோடு பலமுறை அந்த இடத்தில் தன் இதழ்களைப் பதித்துவிட்டாள் மித்ரா. அதில் ஏதோ ஒரு சுகம்.
அவனின் நெற்றியிலேயே இதழ் பதிப்பதுபோல்.. அப்படி முன்னர் அவன் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு நிமிர்கையில் கிடைக்கும் நிறைவையும், அமைதியையும் இப்போதும் அனுபவிப்பது போன்ற பிரம்மை. அவனைப் போலவே தானும் செய்கிறோம் என்பதால் கிடைக்கும் மனச்சாந்தி என்று வரையறுக்க முடியாத ஒருவித பரமசுகத்தை அனுபவித்த அதே நேரத்தில், இனி மகனுக்கும் அவளுக்கும் அவனுடைய முத்தங்கள் கிடைக்காதே என்று எண்ணியவளுக்கு இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போன்று இருந்தது.
எந்த நிலை மகனுக்கு வரவே கூடாது என்று போராடினாளோ, அந்தநிலை அவனுக்கு வந்துவிட்டதே! இனி, வாரத்தில் ஒருநாள் அல்லது இருநாள் கிடைத்த தந்தையின் அருகாமையையும் அவன் இழக்கப் போகிறானே.
சட்டப்படி அது முடியாது என்றாலும், சட்டத்தை அணுகும் தெம்போ, உயிரில் கலந்தவனுக்கு எதிராக வழக்காடும் துணிவோ அவளிடம் இல்லை!
போராடியவரை போதும்!
அவன் கேட்பது அவளது உயிர் என்றாலும் முழுமனதோடு கொடுக்கத்தானே இந்தப் பாழாய்ப்போன மனது துடிக்கிறது.
அது ஈரைந்து மாதம் சுமந்து பெற்ற மகனின் நலன் என்றாலும் உயிர் கொண்டவனின் பாசம் அல்லவோ கண்முன்னால் நின்று அவளைத் தடுமாற வைக்கிறது.
ஏனடா இந்தப் பாவப்பட்ட அம்மாவின் வயிற்றில் வந்து பிறந்தாய்? யாருமில்லாமல் தனித்துப்போய் நிற்பேன் என்று எனக்குத் துணையாக வந்தாயா?
அவளின் நினைவுகளைக் கலைக்கும் விதமாகக் கைபேசி சத்தமிட்டது. மகன் விழித்துவிடப் போகிறானே என்று அவசரமாக எடுத்துப் பார்த்தாள்.
சத்யன் என்று ஒளிரவும் உயிர்ப்பித்து, “சொல்லுடா..” என்றாள் உயிர்ப்பற்ற மெல்லிய குரலில்.
அந்தக் குரலும், முதல் அழைப்பிலேயே அவள் எடுத்துவிட்டதும் கருத்தில் பதிய, “இன்னும் நித்திரை கொள்ளாம என்னக்கா செய்றாய்?” என்று கேட்டான் அவன்.
“ப்ச்! நித்திரை வந்தால் தானே..” என்றாள் சலிப்போடு.
அவள் குணம் அறிந்துதான் கடையிலிருந்து வரும்போது ஒரு ஹோட்டலில் நிறுத்தி வலுக்கட்டாயமாக அவளை உண்ண வைத்து அனுப்பினான். உணவை வலுக்கட்டாயமாகக் கொடுக்க முடியும். உறக்கத்தை?
கையிலிருந்த மணிக்கூடு நேரம் இரவு பதினொன்றை நெருங்குவதைக் காட்டியது. “நித்திரை வராத அளவுக்கு இந்த நேரத்தில் என்ன செய்துகொண்டு இருக்கிறாய்” என்று அக்கறையோடு கேட்டான்.
“ஒன்றும் செய்யவில்லை. சந்தோஷோடு சும்மா இருக்கிறேன்.” என்றாள் விரக்தியோடு.
அந்தக் குரல் சத்யனை பாதித்தது. என்றைக்கும் அவள் உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்கிறவள் அல்லதான். ஆனால், ஒருவித அமைதி இருக்கும். நிதானம் இருக்கும். எதையும் காட்டிக்கொள்ளாத பாவம் இருக்கும். இன்றானால், இப்படி எல்லாம் வெறுத்ததுபோல் பேசுகிறாளே!
தொடர்ந்து அவனோடு பேசினால் உடைந்து விடுவோமோ என்று பயந்த மித்ரா, “சரிடா.. நீ போய்த் தூங்கு. உனக்கு நாளைக்கு வேலை இருக்கிறதே..” என்று பேச்சை முடிக்க முயன்றாள்.
“எனக்கு மட்டுமா வேலை? உனக்கும் தானே. அதனால் கண்டதையும் யோசிக்காமல் போய்த் தூங்குக்கா.” என்றான் சிறுபிள்ளைக்குச் சொல்வது போன்ற மென்மையான குரலில்.
அவனது பாசத்தில் அழுகை வந்துவிடும்போல் தோன்ற, “சரிடா..” என்று அவசரமாகச் சொல்லிவிட்டு கைபேசியை அணைத்தாள்.
ஆனால், சத்யன் அவளின் மனம் புரிந்த தம்பி அல்லவா. அவள் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டும் என்று துடிப்பவன் இல்லையா. இப்படியே விட்டால் தனக்குள்ளேயே புழுங்கிப் புழுங்கி வேதனைப் படுவாள் என்று அறிந்தவன், அடுத்தப் பத்தாவது நிமிடத்தில், இரவு உடையைக் கூட மாற்றாது அவள் முன் வந்துநின்றான்.
இன்னும் அவள் கையில் மகனோடு சோபாவிலேயே இருப்பதைக் கண்டுவிட்டு, “சந்துவை கொண்டுபோய்க் கட்டிலில் கிடத்து அக்கா..” என்றான் அழுத்தமாக.
திடீரென்று, அதுவும் அந்த நேரத்தில் சத்யனை எதிர்பாராதவள் முதலில் அதிர்ந்தாலும், சற்றே ஆறுதலாக உணர்ந்தாள்.
எழுந்துசென்று மகனைக் கட்டிலில் கிடத்திவிட்டு, பால்கனியில் சென்று நின்றுகொண்டாள். விழிகளோ எங்கோ வெறித்தது.
தமக்கையின் அருகில் சென்றவன், “என்னக்கா..?” என்று மென்மையாகக் கேட்டான்.
ஒன்றுமில்லை என்பதாகத் தலையை அசைத்தாள். வாயை திறந்தாள் அழுதுவிடுவோம் என்று நிச்சயமாகத் தெரிந்திருந்தது.
சத்யனுக்குச் சட்டெனக் கோபம் மூண்டது. “எதையும் வாயை திறந்து சொல்லிவிடாதே. இப்படியே எல்லாவற்றையும் மனதுக்குள் போட்டுப் புதைத்துக்கொண்டு வேதனைப்படு. பிறகு எதற்குத் தம்பி என்று நான் இருக்கிறேன்?”
அப்போதும், “ஒன்றும் இல்லைடா..” என்றாள் முணுமுணுப்பாக.
“பிறகு ஏன் இப்படி இருக்கிறாய்? புதிதாக என்னக்கா நடந்தது? சொன்னால் தானே எனக்குத் தெரியும்? சொல்லுக்கா.” என்றான் இதமாக.
பார்வையை எங்கோ வைத்து, “கீதனை பார்த்தேன்..” என்றாள் மித்ரா.
“ஓ…! எங்..கே பார்த்தாய்? கடையிலா..”
“ம்ம்…”
“என்னவாம்?”
“ஒன்றும் கதைக்கவில்லை. யா…ரையோ பார்ப்பதுபோல் பார்த்தார்..”
“அந்தாளும் அந்தாளின் பார்வையும்!” ஆத்திரப்பட்டான் அவன்.


