கலங்கிய விழிகளால் தம்பியை பார்த்து, “அப்படி அவர் யாரோ மாதிரி தள்ளி நின்று பார்த்ததையே என்னால் தாங்க முடியவில்லை சத்தி. இதில் இன்னொரு பெண்ணின் கணவனாக.. என்னால் கற்பனையில் கூட நினைக்க முடியவில்லையேடா. அவரால் மட்டும் எப்படி முடிந்தது?” என்று கேட்டாள்.
“ஏன் முடியாமல்? அவரால் எல்லாம் முடியும். அதுதான் அவரின் தேவைகளை எல்லாம் உன் மூலம் பெற்றுக்கொண்டு விட்டாரே. இனி நீ அவருக்குத் தேவையில்லை. அதனால் உதறிவிட்டார்.”
“அப்படி என்னால் எதையும் உதற முடியவில்லையே சத்தி. அவரோடு வாழ்ந்த வாழ்க்கை கண்ணுக்கு முன்னாலேயே நிக்குதே. எல்லாவற்றையும் யோசிக்க யோசிக்க நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. அம்மா என்னைப் பெறாமலேயே இருந்திருக்கலாம். அப்படி இருந்திருக்கச் சந்தோஷும் வந்திருக்க மாட்டான். நானும் அவனும் யாருக்கும் சுமையாகவோ தடையாகவோ இருந்திருக்கவும் மாட்டோம். இப்படி நெஞ்சை அரிக்கும் வேதனையும் இருக்காது.” என்றாள் மித்ரா.
“கண்ணை மூடினாலே இன்று மாலையில் நடந்ததுதான் வந்து நிற்கிறது. அவரின் அம்மா வார்த்தைகளால் வதைத்தார் என்றால் அவர் அமைதியாகத் தள்ளி நின்று வதைக்கிறார்”
அந்தப் பேச்சில் கோபம் கொண்டவனோ, “விசரி மாதிரி எதையும் பேசாதே! கடையில் வைத்தே சொல்லிவிட்டேன், அந்த மனுஷி ஒரு லூசு, அதன் கதையை நீ காதில் வாங்காதே என்று..” என்று படபடத்தான் சத்யன்.
சொல்லொணா துயரை விழிகளில் தேக்கி அவனைத் திரும்பி பார்த்து, “கீதனுக்கு வேறு ஒரு பெண்ணோடு திருமணம் நடக்கப் போகிறது என்பதையும் நான் காதில் வாங்கக் கூடாதா சத்தி? அது என்னால் முடியுமாடா?” என்று அவள் கேட்டபோது, பதில் சொல்ல இயலாமல் நின்றான் சத்யன்.
அவனாலேயே முடியவில்லையே!
“என் தலைவிதிதான் இப்படி என்று பார்த்தால், இனி என் பிள்ளையும் என்னைப்போல அன்புக்காக ஏங்கப்போகிறான் சத்தி..”
அதைக்கேட்டு ஆத்திரப்பட்டான் அவன். “அவன் ஏன் அன்புக்கு ஏங்கப் போகிறான்? அவனுக்கு நீ இருகிறாய். தாய் மாமன் நான் இருக்கிறேன். சித்தி என்று வித்தி இருக்கிறாள். பிறகு என்ன?” என்று அதட்டினான்.
“யார் இருந்தாலும் அப்பாபோல் வருமாடா?”
உண்மைதான்! ஆனால்.. அதை அவனும் ஏற்றுக்கொண்டால் அவள் இன்னும் துடிப்பாளே..
“அவனுக்கு ஒரு குறையும் வராது. வர நான் விடமாட்டன்! நீ சும்மா தேவை இல்லாததுகளை நினைத்து கவலைப்படாதே..”
“அவனுக்கு எந்தக் குறையும் வர நானும் விடமாட்டேன் தான். ஆனால், அப்பா பாசத்துக்கு என் பிள்ளை ஏங்கினால் என்னால் என்னடா செய்ய முடியும்? அப்பாவுக்காக எத்தனையோ நாட்கள் ஏங்கிய எனக்குத் தெரியாதா என் பிள்ளை என்ன பாடுபடுவான் என்று. அவனும் என்னைப்போல அப்பா இல்லாமல் நிற்கப் போகிறானே சத்தி. பிறகும் எப்படிடா கவலைப் படாமல் இருப்பது?” என்றாள் துயரோடு.
அவள் தன்னைப் பற்றிச் சொன்னதில் உள்ளம் வலித்தாலும், “அதெப்படி அப்பா இல்லாமல் போகும். அந்தாள் இன்னும் உயிரோடுதானே இருக்கிறார்.” என்றான் அவன் சூடாக.
“இன்னொருத்திக்கு கணவனாக இருப்பாரடா. அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அப்பாவாக இருப்பார். என் பிள்ளை மட்டும் தந்தை பாசத்தை அனுபவிக்காமல் தவிக்கப் போகிறான்..” என்றாள் நெஞ்சை கூறுபோடும் வேதனையோடு.
“அவன் ஏன் தவிக்க? அவர் கல்யாணம் கட்டட்டும், பிள்ளையைப் பெறட்டும். எதையாவது செய்து தொலைக்கட்டும்! அதற்காகச் சந்துவை தவிர்க்க முடியாது.
அப்பா என்கிற கடமையை அவர் செய்தே ஆகவேண்டும்!” என்றான் அழுத்தமான குரலில்.
அதைக் கேட்டவளின் இதழ்களில் சோகமான புன்னகை.“கடமையில் எப்படிடா பாசம் வரும்? அது தானாக வரவேண்டும்.”
“சரிக்கா. நீ சொல்வதுபோலக் கடமையில் பாசம் வராவிட்டாலும், அவருடைய மூத்தமகன் இவன் தானே. பிறகு எப்படிப் பாசம் இல்லாமல் போகும்?” என்று அவன் கேட்டபோது, அவனை நிமிர்ந்து பார்த்து மீண்டும் விரக்தியாகப் புன்னகைத்தாள் மித்ரா.
அந்தப் புன்னகையின் பொருள் புரியாமல் அவன் புருவங்களைச் சுருக்க, மீண்டும் இருண்ட வெளிக்குள் தன் பார்வையைத் தொலைத்து, “நம் வீட்டிலும் நான்தானே மூத்தவள். அம்மாவுக்கு என்மேல் பாசம் இருக்கிறதா சத்தி?” என்று அவள் ஆழ்ந்த குரலில் கேட்டபோது, அதிர்ச்சியில் பேச்சற்றுப் போனான் சத்யன்.
அவளோ அவனின் நிலையை உணராது தொடர்ந்தாள். அதுநாள் வரை மனதுக்குள் பூட்டி வைத்து வைத்து மூச்சடைத்ததோ என்னவோ, தன் மனதின் வேதனைகளை எல்லாம் கொட்டத் துவங்கினாள்.
“என்றாவது மனம் மாறுவார், அவர் கோபம் போய்விடும், மகனுக்காகவாவது என்னை மன்னிப்பார் என்று நினைத்தேன். இப்படி முற்று முழுதாகக் கை கழுவுவார் என்று நினைக்கவே இல்லைடா..” என்றவளின் கன்னங்களில் கண்ணீர் வடிந்தது.
அவர்களுக்குள் உண்டான பிரிவு இன்று நேற்று நடந்தது அல்லதான். ஒன்றரை வருடத்துக்கு முதலே.. சரியாகச் சொல்லப்போனால் மனதளவில் அவளை அவன் தள்ளிவைத்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த வலியும் வேதனையும் அதே இரண்டு வருடங்களாக அவள் அனுபவிப்பதுதான்.
ஆனாலும், அவர்கள் இருவரும் மீண்டும் சேரலாம், எல்லாம் சரியாகிவிடும், அவளைவிட்டு அவன் போகமாட்டான் என்று ஏதோ ஒரு நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்த நம்பிக்கை, இன்று முற்றாக அறுந்து அதல பாதாளத்தில் வீழ்ந்துபோனதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
திருமணம் என்று ஒன்று நடந்து அவன் இன்னொருத்திக்கு சொந்தமாகிவிட்டால், அவளோடு அவன் சேர்வதற்கு வழியே இல்லையே!
“என்னைவிட்டு இன்னொருத்தியை மணக்க எப்படிடா அவருக்கு மனம் வந்தது? என் மனம் என்ன பாடுபடும் என்று யோசிக்கவே இல்லையா அவர். அவரை விட்டுப் பிரிந்து வந்தாலும் அவரின் நினைவுகளோடுதான் வாழ்கிறேன் சத்தி. இனி அப்படி அவரை நான் நினைக்கக் கூட முடியாதே. இன்னொருத்திக்கு சொந்தமானவரை நினைப்பது தப்பேடா..” என்றவளின் குரலில் தெரிந்த துயரில் வார்த்தைகள் அற்றுப் போனான் சத்யன்.
அனைத்தையும் மனதில் வைத்து மருகுகிறவள் இன்று எல்லாவற்றையும் கொட்டுகிறாள் என்பதே சத்யனுக்குத் திகைப்புத்தான். இதில் கீதனைப் பற்றி வேறு சொல்கிறாளே.
கீர்த்தனனை பற்றி அதுநாள் வரை குறையாக ஒன்று அவள் பேசியதில்லை. அதுவும் அவனிடம் மூச்சே விட்டதில்லை. சும்மாவே அவர்மேல் கோபமாக இருப்பவன் இன்னுமின்னும் கோபப்படுவான் என்றோ என்னவோ, அவரை அவனிடம் விட்டுக் கொடுக்கவே மாட்டாள், அன்று மாலையில் நடந்தது போல.
இப்போது அவனிடமே அவரைப்பற்றிச் சொல்லி வேதனைப் படுகிறாள் என்றால், அவள் மனது படும்பாடும், துயரும் அவனுக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கியது.
இதற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்கிற அவன் முடிவு இன்னும் வலுப்பெற்றது.


