“இப்போ எதற்குத் தேவை இல்லாததுகளை நினைத்துக் கலங்குகிறாய். அவருக்குத் திருமணம் முடிந்துவிட்டதா என்ன? இன்னும் இல்லை தானே. அதற்குள் என்ன என்ன நடக்கிறதோ யாருக்குத் தெரியும். அதனால் கண்டதையும் யோசிக்காமல் நிம்மதியாகப் போய்ப் படு. நாளைக்கு வேலை இருக்கிறது. சந்து கிண்டர் கார்டனுக்குப் போகவேண்டும். ” என்றான் சத்யன் இதமான குரலில்.
அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் நின்றாள் மித்ரா. இனி இதுதான் என் வாழ்க்கை.. எனக்கு மகன் மட்டும் தான். மகனுக்கு நான் மட்டும் தான் என்று மனதில் பதிய வைக்க முயன்று கொண்டிருந்தாள்.
அது பெரும் சிரமமாக இருந்தபோதிலும், உண்மை அதுதானே!
அவனாவது சந்தோசமாக வாழட்டும்! என்று எப்போதும் நினைப்பதையே அப்போதும் நினைத்துக்கொண்டாள்.
அந்த இரவு நேரத்துக்கே சொந்தமான குளிர்காற்று அவளைச் சில்லிட வைக்க, யோசனைகளில் இருந்து மீண்டவள் தம்பியிடம் திரும்பி, “வா.. உள்ளே போகலாம். மெலிதாகக் குளிர்கிறது..” என்றாள்.
அவனும் அவளுடன் அறைக்குள் வர, “இந்த நேரத்தில் இனி நீ வீட்டுக்குப் போகவேண்டாம். இங்கேயே இரு. அம்மாவிடம் சொல்லிவிட்டு தானே வந்தாய்?” என்று கேட்டாள்.
“ம்.. சொல்லிவிட்டுத்தான் வந்தேன்..” என்றவன், அவளிடம் ஒரு போர்வையை வாங்கிக்கொண்டு சோபாவில் போய்ப் படுத்துக்கொண்டான்.
மித்ராவும் கட்டிலில் மகனுக்கு அருகில் படுத்துக்கொண்டாள். அவளும் மகனும் மட்டுமே இருப்பதாலும், இரவினில் அவளைப்போட்டு வாட்டும் கீதனின் நினைவுகளில் இருந்து கொஞ்சமாவது தப்பிக்க மகனின் அருகாமையில் மட்டுமே முடிவதாலும், அவனுக்கு என்று தனியாகக் கட்டில் வாங்கவில்லை மித்ரா.
கட்டிலில் இருந்து சந்தோஷ் உருண்டுவிடாத படிக்கு எல்லாப் பக்கமும் தலையணைகளை அண்டு கொடுத்துவிட்டு, அவனை அணைத்துக்கொண்டு படுத்தவளுக்கு, இதேபோல் தான் தன் அன்னையின் அருகாமையில் துயில் கொண்ட நினைவுகள் மங்கலாக உதயமாயின.
மூன்று வயதேயான குட்டி மித்ராவுக்கு நடந்தவைகள் என்ன என்று நினைவில் இல்லாதபோதும், அவற்றை அவள் மனம் அறிந்திருக்கிறது. அந்தச் சின்ன வயதிலேயே அவள் சுமந்த வேதனைகளை உணர்ந்திருக்கிறாள்.
அவளுக்கு இரண்டு வயது இருக்கையில் தான் அவளுடைய தந்தை ஹரிஹரன் வாகன விபத்தில் பலியானார். அதன்பிறகு, அம்மா ஈஸ்வரிக்கு அவள் மட்டுமே தான் உலகம். இன்று சந்தோஷை அவள் எப்படித் தாங்குகிறாளோ, அப்படித்தான் அன்று ஈஸ்வரியும் மகளைத் தாங்கினார்.
அன்னையின் மடியிலேயே உறங்கி, அந்த மடியிலேயே விழித்து, அவரின் முகம் பார்த்துச் சிரித்து, அவர் கையாலேயே உண்டு, அவரின் நெஞ்சின் கதகதப்பிலேயே வளர்ந்தவளை, அவரின் கைகளுக்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்த்தவளை, திடீரென்று ஒதுக்கியது போலிருந்தது புதிய தந்தையின் வரவு.
அப்போது ஈஸ்வரி ஜெர்மனியில் வாழ்ந்தாலும், இல்லத்தரசியாகவே இருந்தவருக்குப் பெரிய படிப்பறிவும் இல்லாத காரணத்தால் கணவரை இழந்தது பெரும் பாதிப்பை கொடுத்தது.
அது போதாது என்று, கைக்குழந்தையோடு என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் திணறினார். அவர் படும் பாட்டைப் பார்த்துவிட்டு, வயதும் முப்பதைத் தாண்டாமல் இருந்தவருக்கு மறுமணம் பேசினர் அவரது பெற்றோர்.
முதலில் மறுத்தாலும், எதிர்காலம் மீதான பயம் அதற்குச் சம்மதிக்க வைத்தது.
கஷ்டப்பட்ட குடும்பத்தில் நான்கு தங்கைகளுக்கு ஒரேயொரு அண்ணனாகப் பிறந்து, குடும்பத்தைப் பொறுப்பாகப் பார்க்கும் சண்முகலிங்கம் மாப்பிள்ளையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
வெளிநாடு சென்றால் குடும்பத்தைப் பார்க்கலாம் என்கிற எண்ணத்தில் அவரும் சம்மதிக்க, திருமணமும் எளிமையாக நடந்து அவர் ஜெர்மனி வந்து சேரும் வரையிலும் மித்ராவின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் வரவில்லை.
ஆனால், ஜெர்மனியில் நிரந்தர விசா கிடைத்து, வேலை கிடைக்கும் வரை அமைதியாக இருந்தவர் மெல்ல மெல்ல தன் குணத்தைக் காட்டத் தொடங்கவும் தான் பிரச்சனைகள் ஆரம்பித்தது.
புதிதாகத் திருமணம் ஆனவருக்கு மனைவி அருகிலேயே இருக்கவேண்டும் என்கிற எண்ணம் மேலோங்க, அதற்குத் தடையாக இருக்கும் மித்ரா சுமையானாள்.
கணவருடனும் நேரத்தை தாய் செலவிட்டதில், அதுநாள் வரை அவள் மட்டுமே உலகமாக இருந்த அம்மாவின் அந்தச் சிறிய விலகலைக்கூடத் தாங்காமல் சிணுங்கும் மித்ராவை சண்முகலிங்கத்துக்குப் பிடிக்காமலேயே போனது.
கணவனையும் மகளையும் சமாளிக்க முடியாமல் தவிக்கும் ஈஸ்வரி, கணவனின் பிடிவாதத்துக்கும் கோபத்துக்கும் பயந்து மகளிடம் சினக்கத் தொடங்க, அதுநாள் வரை மலர்ந்த முகத்தில் புன்னகை தவழ, விழிகளில் கனிவும் அன்பும் மின்ன அணைத்துக்கொள்ளும் அம்மாவின் மாற்றத்தில் ஒன்றும் புரியாமல் மிரண்டுபோவாள் குட்டி மித்ரா.
இப்படியே காலம் கடக்க, சத்யன் பிறந்தான். தனக்கென்று ஒரு வாரிசு வந்ததும் மித்ரா சண்முகலிங்கத்துக்குப் பெரும் சுமையாகவே மாறிப்போனாள். அதோடு, அவர் இல்லாத நேரத்திலாவது அவளை அரவணைக்கும் அன்னை, சத்யன் பிறந்ததும் அவனைக் கவனிப்பதில் நேரத்தை செலவழிக்க, சிறுமி மித்ராதான் தவித்துப்போனாள்.
ஒருமுறை, தவழத் தொடங்கும் பருவத்தில் இருந்த சத்யனோடு மித்ரா கட்டிலில் இருந்து விளையாடிக்கொண்டு இருக்கையில், சத்யன் தானாகத் தவழ்ந்து வந்து விழுந்துவிட, மித்ராதான் தள்ளி விழுத்திவிட்டாள் என்று அவளுக்கு அடித்துவிட்டார் சண்முகலிங்கம்.
அன்னையோ, அதன்பிறகு தம்பியின் அருகில் கூட அவளை வர விடவில்லை. தாயின் கையிலேயே தம்பி இருப்பதால் அம்மாவின் அருகிலும் போக முடியவில்லை. சண்முகலிங்கத்துக்கோ அவளைப் பிடிக்கவே பிடிக்காது.
வித்யாவும் பிறந்துவிட, அம்மா, அப்பா, தம்பி, தங்கை என்று எல்லோரும் இருந்தாலும், அந்த வீட்டில் ஒதுக்கப்பட்டவளாகவே மாற்றப்பட்டாள் மித்ரா.
நாட்கள் இப்படியே நகர, கணவர் தன் பிறந்த வீட்டுக்கு அளவின்றிப் பணம் அனுப்புவதிலும், வீட்டுச் செலவுக்கு ஒழுங்காகப் பணம் தராததிலும், ஈஸ்வரிக்கும் சண்முகலிங்கத்துக்கும் பிரச்சினைகள் ஆரம்பித்தது. அதோடு, கணவர் முற்றுமுழுதாக மித்ராவை ஓரம் கட்டுவதையும், தானும் தன்னை மீறியே மகளை ஒதுக்குவதையும் தாங்க முடியாமல் ஈஸ்வரி வெடிக்க, முதல் புருசனின் நினைவை மறக்க முடியவில்லையா என்று குத்தலாகப் பேசும் சண்முகலிங்கம், குடித்துவிட்டு வந்து ஈஸ்வரியை அடிக்கத் தொடங்கினார்.
பின்னாட்களில் அப்படி அவர் குடித்துவிட்டு வருவதும், மித்ராவை காட்டி அவளின் தகப்பனைப்பற்றி எதையாவது குத்திப்பேசி அவருக்கு அடிப்பதும் வழமையாகிவிட, வீடே நரமகிப் போனது ஈஸ்வரிக்கு.
ஒரு கட்டத்தில் குடும்ப நிம்மதிக்காக, சண்டை சச்சரவுகளுக்கு அஞ்சி, கணவரின் அடியையும் தாங்கிக்கொள்ள முடியாமல், மகளால் தான் பிரச்சினை வருவதாக எண்ணி அவளை ஒதுக்கத் தொடங்கினார் ஈஸ்வரி.
அந்தப் பிஞ்சோ தான் ஒதுக்குக்கப் படுவதன் காரணத்தை அறியாமல், தாயிடமே மேலும் மேலும் ஒன்ற, கணவரின் மேலிருந்த கோபத்தில் ஈஸ்வரியும் அவளிடம் எரிந்துவிழ, அதன் பொருளை விளங்கிக்கொள்ள முடியாமல் மலங்க மலங்க விழித்த அந்தச் செல்வம் மெல்ல மெல்ல தானே ஒதுங்கத் தொடங்கியது.


