தனிமைத் துயர் தீராதோ 40 – 1

அன்று காலையில் எழுந்ததில் இருந்தே பவித்ராவின் உள்ளம் பரபரப்புற்றிருந்தது. காரணம் அவளின் கணவன் வரப்போகிறான் இன்று!

 

அன்று, எதேர்ச்சையாக இருவரும் தொலைபேசியில் கதைக்க நேர்ந்ததன் பிறகு, அவன் அவளுக்கு அழைக்கவுமில்லை கதைக்கவுமில்லை.

 

ஆனாலும், அவன் வருகிறான் என்றதும் துல்லிய மனதை அடக்கமுடியவில்லை. அன்று மாலை டொச் வகுப்பு வேறு இருந்தது. அதற்கு முதல் அவன் வந்துவிடவேண்டும் என்றிருந்தது அவளுக்கு.

 

அதுநாள் வரை சும்மா பெயருக்கு மேலே அவர்களின் வீட்டுக்குச் சென்று வந்தவள், அன்று காலையிலேயே போய் தூசுகளை தட்டி, துடைத்து பளிச்சென்று வீட்டை மாற்றிவிட்டு வந்தாள். மதிய உணவை முடித்ததும், குளித்து உடைமாற்றி தன்னையும் பளிச்சென்று வைத்துக்கொண்டாள்.

 

ஒருவழியாக சத்யனும் வந்து சேர்ந்தான். அவனது காரைக் கண்டதுமே பார்க்கிங்குக்கு ஓடப் பரபரத்த கால்களையும், படபடத்த நெஞ்சையும் அடக்கிக்கொண்டு பால்கனியில் நின்றிருந்தாள் பவித்ரா.

 

அவள் மேலே நின்று தன்னைக் கவனிப்பதை அறியாதவன் காரை விட்டு இறங்கி, கதவைச் சாத்திவிட்டு காரின் சைட் கண்ணாடியின் முன்பாக சற்றே குனிந்து தன் அடர்ந்த கேசத்தை இரண்டு கைகளாலும் கோதிச் சரி செய்தான்.

 

அதைப் பார்த்தவளுக்கு சிரிப்புத்தான் வந்தது.

 

டிக்கியை திறந்து தன் பயணபாக்கை எடுத்துக்கொண்டு அவன் வரவும், இவள் நல்ல பிள்ளையாக வீட்டுக்குள் வந்து நின்றுகொண்டாள்.

 

“ஹாய் ஹாய் ஹாய்..” என்று உற்சாகமாக உள்ளே வந்தவனை,

 

“வாடா! வேலையெல்லாம் நல்லபடியாக முடிந்ததா?” என்று விசாரித்தான் கீர்த்தனன்.

 

“சூப்பரா முடிந்தது அத்தான்.”

 

“அப்போ இனி எங்கும் போகத்தேவையில்லை தானே.” என்று கேட்டாள் தமக்கை.

 

“இல்லைக்கா. அப்படிப் போவதாக இருந்தாலும் ஒருநாள் இரண்டுநாள் என்றுதான் வரும். இப்படி மாதக்கணக்கில் வராது.” என்றவன்,

 

சத்யனின் குரல் கேட்டு, “மாமா..” என்றபடி ஓடிவந்த மருமகனை, “ஹேய் சந்துக்குட்டி..!!” என்றபடி அப்படியே அள்ளிக்கொண்டான்.

 

“உனக்கு மாமா ஒரு சாமான் வாங்கி வந்திருக்கிறேன். என்ன என்று சொல் பார்க்கலாம்?” அவனை தூக்கி மேலே போட்டுப் பிடித்தபடி கேட்டான்.

 

கிளுக்கிச் சிரித்தபடி, “கார்.. கார்..” என்று ஆர்ப்பரித்தான் அவன்.

 

“காரே தான்டா. ஆனால் உன்னை விடப் பெரிது. வா எடுத்துக்கொண்டு வருவோம்.” என்றவன், மருமகனோடு வெளியே சென்றுவிட, நெஞ்சைப் பிளந்துகொண்டு வந்த அழுகையை அடக்கப் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தாள் பவித்ரா.

 

தன்னோடு ஒருவார்த்தை கதைப்பான், தன்னைப் பார்ப்பான், சிரிப்பான் என்று எவ்வளவு ஆவலாகக் காத்திருந்தாள்.

 

அழுகை ஆத்திரமாக, ஆத்திரம் ஆங்காரமாக உருவெடுக்க, அங்கேயே நின்றால் எல்லோர் முன்னாலும் அவனின் சட்டையை பிடித்தாலும் பிடித்துவிடுவோம் என்று பயந்து, விறுவிறு என்று தன் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வகுப்புக்குச் செல்லத் தயாரானாள்.

 

சுவரில் தொங்கிய கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு, “வகுப்புக்கு நேரம் இருக்கிறதே பவி..” என்றாள் மித்ரா.

 

“அது.. இன்றைக்குக் கொஞ்சம் நேரத்துக்கே வரச்சொன்னார்கள் அண்ணி..” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

 

“அப்பா.. இங்க பாருங்க.. அம்மா கார்.. அத்தை.. பெரிய கார்..” என்றபடி ஒரு குட்டிக் காரில் அமர்ந்து அதை ஓடிக்கொண்டு வீட்டுக்குள் வந்தான் சந்தோஷ்.

 

அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மித்ரா, “எங்கேடா வாங்கினாய்? உண்மையான கார் போலவே இருக்கிறது. இனி இவனை பிடிக்கவே முடியாதே..” என்றாள் மகனின் முகத்தில் தெரிந்த சந்தோசத்தை ரசித்துக்கொண்டே.

 

அவனைப் போன்ற வயதுக் குழந்தைகள் ஓடக்கூடிய வகையிலான கார். அதுவும் அவ்டிக்கார்(ஆடிக்கார்).

 

“பெர்லின்ல தான்க்கா.” என்றவன், சந்து புதுப் பழக்கத்தில் காரைக் கொண்டுபோய் சுவரோடு மோத, “இந்த பட்டனை அமத்துடா. ரிவர்சில் வரும்..” என்று மருமகனுக்குக் காட்டிக் கொடுத்தான்.

 

கையில் புத்தகங்களோடு நின்ற பவித்ரா அவனை ஏக்கத்தோடு நிமிர்ந்து பார்த்தாள். நெடிய கால்களை சற்றே அகற்றி வைத்தபடி, இடுப்பில் கைகளை கொடுத்தபடி, புன்னகையில் மலர்ந்திருந்த முகத்தோடு அந்த வீட்டுக்குள் அங்குமிங்கும் காரில் ஓடித்திருந்த சந்துவை பார்வையால் தொடர்ந்தபடி நின்றவனின் அந்தக் காட்சி கூட நெஞ்சில் கல்வெட்டாகப் பதிய, அந்த நெஞ்சம் அவளை அவன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையே என்று சொல்லிக் கதறியது.

 

“டேய் சந்து! உன் மாமாவிடம் சொல்லு. விளையாட்டுக் காரெல்லாம் வாங்கித்தந்து ஏமாற்ற முடியாது. உண்மையான கார் வேண்டும் என்று.” என்று சத்யனை சீண்டினான் கீர்த்தனன்.

 

முகம் மலர அவனை நிமிர்ந்து பார்த்தான் சத்யன். ‘என்மேல் இருந்த கோபம் போய்விட்டதா அத்தான்?’ என்பதாக.

 

கீர்த்தனன் அவனைப் பார்த்துப் புன்னகைக்க, “கட்டாயம் அத்தான். சந்து லைசென்ஸ் எடுத்ததும் அவன் ஓடும் முதல் கார் நான் வாங்கியதாகத் தான் இருக்கும்!” என்றான் அந்தப் பாசக்காரன்.

 

இப்படியே அக்கா குடும்பத்தையே கட்டிபிடித்துக்கொண்டு நீ கிட!

 

ஆத்திரத்தையும் அழுகையையும் மீறிக்கொண்டு எரிச்சல் வர, “நான் கிளம்புகிறேன் அண்ணா. பாய் அண்ணி.” என்றபடி செருப்பை மாட்டினாள் பவித்ரா.

 

அப்போதுதான் அப்படி ஒரு ஜீவனே அங்கே நிற்பதாக சத்யன் அவளைப் பார்க்க, அவளோ முகத்தை திருப்பிக்கொண்டாள்.

 

“கொஞ்சம் பொறு. நான் கொண்டுவந்து..” என்ற மித்ராவை பார்வையால் அடக்கினான் கீர்த்தனன்.

 

அவள் கேள்வியாக ஏறிட, “சத்தி, நீ அவளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வா!” என்றான் மறுப்புச் சொல்ல முடியாத குரலில்.

 

“சரித்தான்..” என்று அவன் சொல்லும்போதே, “தேவையில்லை அண்ணா. நான் நடந்தே போவேன்.” என்றாள் பவித்ரா.

 

error: Alert: Content selection is disabled!!