கட்டிய மனைவியை கூட்டிக்கொண்டுபோய் விடவேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு சொந்தமாகத் தோன்றியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அண்ணா சொன்னதும் இவன் செய்வானாமா என்கிற ஆத்திரத்தில் அவள் சொல்ல, அவனோ அவளை சட்டையே செய்யாமல் கார் திறப்பை எடுத்துக்கொண்டு நடந்தான். பல்லைக் கடித்தாள் பவித்ரா.
அவளின் மறுப்பை ஒரு பொருட்டாகவே அவன் மதிக்கவில்லையே!
அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாமல் போக, ஒரு தலையசைப்புடன் விடைபெற்று வெளியேறிச் சென்றவளை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, “இவர்கள் இருவரையும் எப்படி சேர்த்து வைப்பது என்றே தெரியவில்லை..” என்றான் கீர்த்தனன்.
அவளும் அதே சிந்தனையுடன் தலையை ஆட்ட, “இங்கே என் பிழைப்பே பெரும் சிரிப்பா இருக்கு. இதில் எப்படி ஊருக்கு உபதேசம் செய்வது?” என்றான் வேண்டுமென்றே.
அவன் மனைவியோ அகிருந்து நழுவப் பார்க்க, அவளின் கையைப் பற்றினான் கீர்த்தனன்.
மெல்லிய அதிர்வோடு மித்ரா அவனைப் பார்க்க, மகன் எங்கே என்று பார்த்தான் கீர்த்தனன். அவன் அங்கே அறைக்குள் கார் ஓடுவதில் மும்முரமாக இருப்பதைக் கவனித்துவிட்டு மனைவியிடம் திரும்பி, “இனி எப்படி என்னிடம் இருந்து தப்பிப்பாய் மித்து?” என்று கேட்டான்.
உடனே பதில் சொல்லாதபோதும் அவன் விழிகளை நேராகப் பார்த்தாள் மித்ரா. “என்றைக்குமே உங்களிடம் இருந்து தப்பிக்க நான் நினைத்ததில்லை கீதன். நீங்கள் தான் என்னைத் தள்ளி வைத்தீர்கள்.” என்றாள் அமைதியான குரலில்.
சுளீர் என்றது அவனுக்கு.
அவன் அதிர்ந்து நிற்கும்போதே, தன் கையை அவனிடமிருந்து மீட்டுக்கொண்டு அறைக்குள் புகுந்துகொண்டாள்.
இங்கே சத்யனும் பவித்ராவும் சென்றுகொண்டிருந்த காருக்குள் பெருத்த அமைதி. தனிமையிலாவது அவளோடு இரண்டு வார்த்தை கதைப்பான் என்று அவள் நினைக்க, அவனோ, என்னவோ காரோட்டியின் கடமை காரை ஓட்டுவது மட்டுமே என்பதுபோல் பாதையிலேயே கவனத்தை வைத்து ஓட்டிக்கொண்டிருந்தான்.
உள்ளம் பாராங்ககல்லாகக் கனக்க அப்படியே அமர்ந்திருந்தாள் பவித்ரா. சற்று நேரத்தில் அவளின் வகுப்பருகில் காரைக் கொண்டுபோய் நிறுத்திவிட்டு, நேர் பார்வையோடு அவன் இருக்க, கதவை திறந்து ஒரு காலை வெளியே வைத்தவள், ஒருகணம் நிதானித்து அவன் புறமாகத் திரும்பினாள்.
“இப்போதுகூட எப்படி இருக்கிறாய் என்று என்னிடம் கேட்கத் தோன்றவில்லை இல்லையா உங்களுக்கு?” என்று கேட்டாள்.
உள்ளம் அதிர அவளை திரும்பிப் பார்த்தான் சத்யன். அவனுக்கு கேட்கத் தோன்றவில்லைதான். அக்கா அத்தானோடு இருக்கிறவளிடம் எப்படி இருக்கிறாய் என்று விசாரிக்கவேண்டிய அவசியம் என்ன?
“இந்தளவு தூரத்துக்கு நீங்கள் என்னை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை ஜான். உங்களை நெஞ்சார விரும்பியதைத் தவிர.” என்று சொல்லிவிட்டு இறங்கி வகுப்பை நோக்கி நடந்தாள்.
அப்படியே அமர்ந்துவிட்டான் சத்யன். அதுதானே.. அவள் மீது அவனுக்கு என்ன கோபம்? அப்படி எதுவுமில்லையே!
ஆனாலும், நெருங்கிப் போகமுடியாமல் எதுவோ தடுத்தது. அத்தானின் தங்கையல்லவா அவள்!
பவித்ராவோ கணவனின் செய்கைகளால் மனம் துவண்ட போதிலும் எடுத்த முடிவிலிருந்து மாறத் தயாராக இல்லை!
அவன் மனதில் இடம் பிடித்தே ஆகவேண்டும்! அதற்கான முதல் கட்டத்தை அடுத்தநாளே ஆரம்பித்தாள்.
“அண்ணி, எங்களுக்கு நானே சமைக்கவா?” தயக்கத்தோடுதான் என்றாலும் கேட்டாள்.
“ஒரே வீட்டில் எதற்கு இரண்டு சமையல் பவி. நானே சமைக்கிறேன். நீ சும்மா சிரமப்பட நினைக்காதே.” என்றாள் மித்ரா.
“இதில் சிரமப்பட என்ன இருக்கண்ணி. எனக்கும் உங்களைப்போல சமைக்கப் பிடிக்கும். அதோடு நான் நன்றாகவே சமைப்பேன். உங்கள் தம்பியின் வயிற்றை வாட விடமாட்டேன்.” என்றாள் கேலியாக.
மித்ராவின் மனதை நோகடிக்காமலும், அதே நேரத்தில் வேறு வேறு குடும்பம் என்கிற பிரிவினையை உருவாக்காமலும் நாசுக்காக சொன்னாள் பவித்ரா. மனதில் முரண்டினாலும் அதற்கு மேல் மித்ராவும் வற்புறுத்த விரும்பவில்லை. இரு சமையல் என்றால் என்ன, பகிர்ந்து உண்பதுதானே என்று எண்ணிச் சம்மதித்தாள்.
உடனேயே, கணவனுக்கும் தனக்குமாக, அவனுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று கேட்டு சமைத்து வைத்தாள் பவித்ரா.
அன்று மாலை, வேலை முடிந்து நேரே தமக்கை வீட்டுக்கு வந்த சத்யனோ, வரும்போதே, “அக்கா, என்ன சாப்பாடு? பசிக்கிறது..” என்றபடிதான் வந்தான்.
“டேய்.. அங்கே பவி..” என்றவளை இடைமறித்து, “ப்ச் அக்கா! முதலில் சாப்பாட்டை போடு. பிறகு எதையாவது கதை. பசியில் காதே அடைக்கிறது. மதியமும் சாப்பிடவில்லை..” என்றவன், குளியலறைக்குள் புகுந்து முகம் கைகளை கழுவிக்கொண்டு வந்தான்.
அவன் பசியில் காதே அடைக்கிறது என்றது பவித்ராவை முற்றிலுமாக மறக்க வைக்க, உணவை போட்டுக்கொண்டுவந்து கொடுத்தாள் மித்ரா.
கடகடவென்று அதை உண்டு முடித்துவிட்டே நிமிர்ந்தான் சத்யன்.
“ஏன் மதியம் நீ சாப்பிடவில்லை?”
“அது ஒரு அரை லூசு வந்து விளக்கம் கேட்கிறேன் என்கிற பெயரில் என்னைப் போட்டு படுத்தி எடுத்துவிட்டது. இன்றைய நாள் முழுவதையும் பிடித்துக்கொண்டது..” என்றான் எரிச்சலோடு.
அங்கே கீர்த்தனனும் வந்து சேர, “உங்களுக்கும் சாப்பாடு போடட்டுமா?” என்று கேட்டாள் மித்ரா.
“இப்போ பசியில்லை. ஒரு கஃபே மட்டும் தா.” என்றவன், குளித்து உடை மாற்றிக்கொண்டு வர, சற்றுநேரம் அவனோடும் பேசிக்கொண்டு இருந்துவிட்டு மேலே சென்றான் சத்யன்.
அவன் சென்றதும், பவித்ராவின் தனிச் சமையலை பற்றிக் கணவனிடம் சொன்னாள் மித்ரா.
“இருப்பதே நால்வர். இரவில் மட்டும்தான் எல்லோரும் வீட்டில் சாப்பிடுவதும். இதில் எதற்கு வேற வேற சமையல்?” யோசனையோடு கேட்டான் அவன்.

