தனிமைத் துயர் தீராதோ 40 – 4

அதுவரை நேரமும் அவள்மேல் இருந்த கோபம் போன இடம் தெரியாமல் ஓடிப்போக, மனைவியின் மீது நேசமும் பாசமும் பொங்கியது. “சும்மா சும்மா அழக்கூடாது!” என்றபடி அவள் முதுகை இதமாக வருடிக்கொடுத்தான்.

 

அந்த நேரத்தில் அது அவளுக்கும் தேவையாகவே இருக்க, அனைத்தையும் மறந்து அவனது அணைப்புக்குள் வாகாக அடங்கிப்போனாள் மித்ரா.

 

சற்றே அவள் தெளிந்ததும், “அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்று தெரிந்த இந்த நிமிஷம் என் மனம் எவ்வளவு சந்தோசப் படுகிறது என்பதை நீ அறியமாட்டாய் மித்து. அந்த சந்தோசத்தை அனுபவிக்கக் விடாமல் செய்தவள் நீ! என் கோபம் உன் மீதுதான். அதுகூட இப்போது ஓடிவிட்டது.” என்றான் அவளின் கணவன் அன்போடு.

 

நம்பமுடியாமல் கண்ணீரில் மிதந்த விழிகளை விரித்து கணவனைப் பார்த்தாள் மித்ரா.

 

“இவ்வளவு நாட்களும் அவள் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு நான்தானே காரணம் என்று உள்ளூர வருந்திக்கொண்டே இருந்தேன். இன்று அந்த வருத்தமும் போய்விட்டது.” என்றான் பெரும் தளையிலிருந்து விடுபட்ட உணர்வோடு.

 

“அப்போ.. அப்போ அவளை நீங்கள் காதலிக்கவே இல்லையா?” அவன் பேச்சில் இருந்த உண்மையில் ஒருபக்க மனது சந்தோசத்தில் துள்ளினாலும், அதை நம்பமுடியாமல் திரும்பவும் கேட்டாள் மித்ரா.

 

பின்னே, அவன் வேறு ஒருத்தியை தனக்கு முதலே காதலித்தான் என்றெண்ணி அவள் பட்ட வேதனைகள் கொஞ்சமா நஞ்சமா? அதோடு, மனதை கீறிக்கொண்டுபோய் ஆழமாய் பதிந்து போயிருந்த ஒன்றிலிருந்து அத்தனை இலகுவில் வெளியேயும் வரமுடியவில்லை.

 

“உனக்கு இதை நான் எத்தனை தடவைதான் சொல்வது மித்து?” என்றவன், இன்றே யமுனா விஷயத்தை அவளுக்கு விளக்கிவிட எண்ணினான்.

 

சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தவன் கிடைத்ததை விடுவானா என்ன?

 

ஆரம்ப நாட்களில் தான் இலங்கைக்கு தன் வீட்டுக்கு அழைப்பது தொடங்கி, அங்கே யமுனாவும் வந்து நிற்பதில் இருந்து அவள் மேல் உண்டான சிறு சலனம் வரைக்கும் எதையும் மறைக்காமல் சொன்னான் கீர்த்தனன்.

 

அதோடு, விசா மறுக்கப்பட்டதும் ஊருக்கு வந்து அவளை மணக்கப்போவதாக தாயிடம் சொன்னதையும் அதற்கு அன்னை மறுத்ததையும் சொல்லிவிட்டு, “அப்போது எனக்கு அவள்மேல் சிறு ஆர்வம் இருந்தது உண்மைதான் மித்து. ஆனால், அது ஆர்வம் மட்டுமேதான். காதலாக இருந்திருக்க விசாவுக்காகவோ அல்லது அம்மாவின் பேச்சுக்காகவோ நான் இங்கே நின்றே இருக்க மாட்டேன். எல்லாவற்றையும் மீறிக்கொண்டு போய் அவளையே கட்டி, அங்கேயே உழைத்து என் குடும்பத்தை கரை சேர்த்திருக்க என்னால் முடியும். அப்படி ஒரு உந்துதலை, யாரை எதிர்த்தேனும் அவளை மணமுடிக்கும் பிடிவாதத்தை அந்தச் சலனம் எனக்குத் தரவில்லை. இதிலிருந்தே அவள் மீதான என் ஈர்ப்பு எந்தளவு தூரத்துக்கு இருந்திருக்கிறது என்று நீயே யோசி!” என்றான் தெளிவான குரலில்.

 

“அதேபோல உன்னைக் கட்டியபோது என் மனதில் நீயும் இருக்கவில்லை, அவளும் இருக்கவில்லை. ஆனால், ஒருவித குற்ற உணர்ச்சி இருந்தது. ஒரு பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து ஏமாற்றி விட்டோமோ என்று. அர்ஜூனிடம் அதைப்பற்றி பேசியபோது அவன்தான் என்னை சமாதானப் படுத்தினான்.” என்றவன், நண்பனோடு பேசியதை பற்றியும் மனைவியிடம் சொன்னான்.

 

“நம் கல்யாணம் எதற்காக நடந்திருந்தாலும் நம் வாழ்க்கை ஆரம்பித்தது காதலோடுதான். அந்தக் காதல் இன்று வரைக்கும் என் நெஞ்சில் இருக்கிறது. இடையில் அந்தக் காதலை வலுக்கட்டாயமாக நான் அழித்துக்கொண்டது உண்மைதான்…” என்றவனுக்கு, அந்தக் காலகட்டமும், அப்போது நடந்தவைகளும் நெஞ்சிலாட அதற்குமேல் பேச்சு வர மறுத்தது.

 

மித்ராவுக்கும் அந்த நாட்கள் நினைவில் வர தொண்டை அடைத்தது.

 

கசப்பான நினைவுகளை விழுங்கிக்கொண்டு, தொண்டையை செருமி சீர் படுத்திக்கொண்டு, “உன்னைப் பிரிந்திருந்த அந்த நாட்களில் கூட, இனி உன்னைப்பற்றி நினைக்கவே கூடாது என்றுதான் நினைத்தேனே தவிர அவளைப் பற்றி நினைத்ததே இல்லை!

 

“அப்படி நினைத்திருந்தால் நான் தேடிப்போக வேண்டிய அவசியமே இல்லாமல் யமுனா என் காலடிக்கே வந்து நின்றபிறகும் ஏன் அவளை கட்டாமல் இருக்கவேண்டும்? என்னை யாரால் தடுத்திருக்க முடியும்? அம்மாவே முன்னின்று அந்தக் கல்யாணத்தை நடத்தி வைத்திருப்பார்.” என்றான் தெளிவாக.

 

அது என்னவோ உண்மைதான் என்று எண்ணிக்கொண்டாள் மித்ரா. அந்த அம்மாள் அவளிடம் பேசிய வார்த்தைகள் கொஞ்சமா நஞ்சமா?

 

“யமுனாவை பற்றி இன்றுவரை என் மனதில் இருந்தது எல்லாம், என்னால் அவள் திருமணமாகாமல் நிற்கிறாளே என்கிற குற்றவுணர்ச்சி மட்டும் தான். அதுவும் இன்றோடு நீங்கியது. என் மனதை கவ்வியிருந்த ஒரு விலங்கு அகன்றுவிட்டது மித்து.” என்றான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பவன் போன்று.

 

மித்ராவுக்கும் அதுவரை அடைத்திருந்த எதுவோ விலகுவது போல்தான் இருந்தது.

 

ஆனால், அதில் மட்டும் தான் அவள் மகிழ முடியும். அவள் வாழ்க்கையில் நடந்தவை அனைத்தும் நடந்தவை தானே. அவற்றை மாற்ற முடியுமா? அல்லது கணவனைப்போல அவளால் தான் ஏதாவது நியாயமான காரணங்களை கூறத்தான் முடியுமா? உள்ளம் துவண்டு போனது!

 

“அன்று என் அம்மாவிடம் சொன்னதைத்தான் இன்று உன்னிடமும் சொல்கிறேன். என் வாழ்க்கையில் ஒரு பெண்தான். அது நீ மட்டும் தான். அதேபோல் என் இதயத்தை தொட்டவளும் நீதான். காதலோடு நான் தொட்டவளும் நீதான்!” என்று அழுத்தம் திருத்தமாக தன் மனதை உரைத்தான் கீதன்.

 

“இனி என் வாழ்க்கையில் நீ இல்லை என்று நினைத்த நாட்களில் கூட இன்னொருத்தியை நினைக்காத நானா திரும்ப நீ கிடைத்த பிறகும் இன்னொருத்தியை நினைப்பேன்?” என்று கேட்டபோது, மித்ராவின் உள்ளம் அனைத்துத் துயர்களையும் மீறித் துள்ளியது.

 

error: Alert: Content selection is disabled!!