கடந்த இரண்டு மூன்று நாட்களாக கீர்த்தனனின் உள்ளம் மனைவி பற்றிய யோசனைகளிலேயே சுழன்றது. பிரிந்திருந்த நாட்களில் கூட அவனைக் கண்டதும் விழிகளில் நேசத்தைக் காட்டி நிற்பவளின் இப்போதைய ஒதுக்கத்துக்கான காரணத்தை தேடி அலைந்துகொண்டிருந்தான்.
அன்று யமுனாவைப் பற்றி அவளுக்கு தெளிவு படுத்தியபிறகு அவனது முகம் பார்த்துக் கதைக்கிறாள். அவ்வளவுதான்! அதைத் தாண்டிய எந்த முன்னேற்றத்தையும் காணோம்!
பவிக்காக அவளைக் கட்டியதாக நினைக்கிறாள் என்பது ஒரு காரணம் என்றாலும், இன்னும் பல காரணங்கள் இருப்பதை ‘நீங்கள் தான் என்னை தள்ளி வைத்தீர்கள்’ என்ற அவளின் அன்றைய பேச்சு அவனுக்கு உணர்த்தியது.
சரி, எல்லாவற்றையும் பேசித் தீர்க்கலாம் என்றாளோ எந்தப் பேச்சு வார்த்தைக்கும் இடம் கொடுக்காமல் விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தாள் அவள்.
சிந்தனைகள் அதன்பாட்டுக்கு ஓட, வெளியே செல்வதற்கு தயாராக எண்ணி அலமாரியை திறந்தான். அங்கே ஒரு தட்டில் அவனுடைய ஜீன்ஸ்கள் அயர்ன் பண்ணி அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. ஷர்ட்கள் ஒரு பக்கமாக ஹங்கரில் தொங்க மறுபக்கம் டி-ஷர்ட்கள் தொங்கின. அவனுடைய பனியன்களில் இருந்து சாரங்கள் முதல் கொண்டு அனைத்துமே அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. ஒரு பெண் கோலோச்சும் வீடு அது என்பதை அந்த அலமாரியே சொல்லிவிடும்.
இப்படி அவனுக்கான சமையலில் இருந்து, அவனுக்குப் பிடித்த கஃபே தொடங்கி, அவன் தேவைகள் அத்தனையையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறவள் அவனை மட்டும் நெருங்க மறுக்கிறாள்.
கருப்பில் ஜீன்சை அணிந்து மனைவிக்குப் பிடித்த பச்சையில் மஞ்சள் கட்டங்கள் போட்ட டி- ஷர்ட்டை அணிந்துகொண்டு அவன் திரும்பியபோது, “அப்பா…” என்றபடி தலைதெறிக்க ஓடி வந்துகொண்டிருந்தான் அவன் மகன்.
மகனின் மின்னல் வேகத்தில் முகத்தில் சிரிப்பு மலர, “மெல்ல மெல்ல! விழுந்துவிடப் போகிறாய்.” என்று இவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, “சந்து நில் கண்ணா. இந்த ஒருவாய் மட்டும்.” என்றபடி அவன்பின்னால் கையில் உணவுடன் வந்துகொண்டிருந்தாள் மித்ரா.
“ம்ஹூம்! எனக்கு வேண்டாம்..” என்றவன் தகப்பனைக் குறிவைத்து ஓடவும், “அவனை பிடியுங்கள் கீதன். உங்கள் ஜீன்ஸில் சாப்பாட்டை பிரட்டப் போகிறான்..” என்று அவசரமாக அவள் சொல்லி முடிக்க முதலே, தகப்பனின் காலைக் கட்டிக்கொண்டு, அந்தக் காலிலேயே தன் முகத்தையும் புதைத்துக்கொண்டான் அவர்களின் சீமந்த புத்திரன்.
தாய் உணவை வாய்க்குள் திணித்துவிடாதபடிக்கு முகத்தை மறைக்கிறானாம்!
சிரிப்பும் கோபமும் ஒருங்கே எழ, “என்ன கீதன் நீங்கள்..” என்று சலித்தபடி நிமிர்ந்தவள், கணவனின் பார்வையில் கன்னங்கள் சூடாகப் பேச்சை நிறுத்தினாள்.
ஒரு கையில் மகனுக்கான உணவுத் தட்டும் மறு கையில் ஸ்பூனுமாக நின்றவள், அன்று சனிக்கிழமை என்பதால் ஒரு முழங்கால் வரையிலான பாவாடை சட்டையில் இலகுவாக நின்றிருந்தாள்.
சுருண்ட குழல்கள் இப்போது இடையை தொட்டிருந்ததில் அதை ஒரு குதிரைவால் கொண்டையாக மாற்றியிருந்தாள். அதுவோ கலைந்து முகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தொங்கியது.
கழுவித் துடைத்த முகம், இன்னும் பொட்டு வைக்கப்படாத நெற்றி, மகனோடு மல்லுக் கட்டியதில் அணிந்திருந்த சட்டைக்குள் இருந்து வெளியே வந்து விழுந்து கிடந்த தாலிக்கொடி, சலங்கைகள் இல்லாத தந்தக் கால்கள் என்று அசமந்தமாக நின்றே அவனை அசரடித்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி.
கணவனின் பார்வையில் உள்ளே நெஞ்சம் படபடக்கத் தொடங்கினாலும், அதை மறைத்துக்கொண்டு, “சாப்பிடவே மாட்டானாம். இந்த வீடு முழுவதும் ஓடி ஓடியே எனக்கு விளையாட்டுக் காட்டுகிறான். இப்போது உங்கள் ஜீன்சையும் அழுக்காக்கி விட்டான்.” என்று, வாயில் வந்ததை எல்லாம் கோர்வையாக சொல்லமுயன்றாள் அவள்.
“ஜீன்சை விடு. வேறு மாற்றினால் ஆயிற்று.” என்றவன், “என்னடா கண்ணா, அம்மா என்னென்னவோ சொல்கிறாளே. என் செல்லம் அப்படியெல்லாம் செய்ய மாட்டானே.” என்று கொஞ்சியபடி குனிந்து அவனைத் தூக்கிக்கொண்டான்.
தாயின் கையிலிருந்த உணவைக் காட்டி, “அது உவ்வே.. வேண்டாம்.” என்று தன் சின்ன இதழ்களை குவித்து அவன் சொல்லிக்காட்டிய அழகில் மயங்கிப்போய் வாய்விட்டுச் சிரித்தான் கீர்த்தனன்.
இந்த ‘உவ்வே’ தமக்கைக்கு எதிராக சத்யன் பழக்கிக் கொடுத்தது.
சிரிப்பு வந்தாலும் இருவரையும் முறைத்தாள் மித்ரா. “முதலில் அவனை இறக்கி விடுங்கள். எப்போது பார்த்தாலும் சாப்பிடக் கள்ளம். இது காரட்டும் உருளைக்கிழங்கும், புரோக்கோலியும் அவித்து மசித்தது. உடம்புக்கு நல்லது என்றால் கேட்கிறானே இல்லை.” என்று கணவனிடம் முறையிட்டவள், “அம்மாவிடம் வா சந்து.” என்று மகனை அழைத்தாள்.
அவனோ, “ம்ஹூம்..! மாட்டேன்!” என்று தலையை பலமாக அசைத்து மறுத்தான்.

