“இறங்கு சந்து. அப்பாவின் டி- ஷர்ட்டிலும் சாப்பாட்டைப் பிரட்டாமல் வா கண்ணா..” என்று கெஞ்சினாள் மித்ரா.
மகன் எதற்கும் மசியாமல் இருக்கவே, “அவனை நானே வைத்திருக்கிறேன். நீ கொடு. இல்லாவிட்டால் இன்னும் உன்னை வீடு முழுக்க ஓடவைப்பான்.” என்றவன், “சத்தான சாப்பாடு சாப்பிட்டால் தானே சந்துக்குட்டி அப்பா மாதிரி வளர முடியும். அப்போதுதானே மாமா வாங்கித்தரும் பெரிய காரை ஓட்ட முடியும்..” என்று மகனுக்கு பேச்சுக் கொடுத்தபடி பால்கனிக்கு நடந்தான்.
மித்ரா ஊட்டுவதற்கு இலகுவாக மகனை வைத்துக்கொண்டு திரும்பியவன், அப்போதுதான் அவள் அங்கே அறை வாசலிலேயே நிற்கக் கண்டான்.
“அங்கேயே ஏன் நிற்கிறாய்?” என்று காரணம் புரியாது கேட்டான்.
அவளோ, “அவனை இறக்கிவிடுங்கள்.” என்றாள் உள்ளே போன குரலில்.
“ஏன்?” கேட்டவனின் குரலில் சுதி ஏறியது.
அப்போதும் அவள் அமைதியாக நிற்க, “வா வந்து ஊட்டிவிடு.” என்றான் அழுத்தமாக.
கணவனை வெறித்தாள் மித்ரா. அன்றொருநாள் யமுனா மகனுக்கு உணவைக் கொடுத்ததும் தான் யாரோ ஒருத்தியாய் தள்ளி நின்றதும் நினைவலைகளில் மிதந்து வந்து தாக்கிற்று!
இவள் ஏன் இப்படி பார்க்கிறாள் என்று அவன் யோசிக்கும்போதே, “உங்களுக்குத்தான் நான் கிட்டவந்தால் பிடிக்காதே. அவனை இறக்கிவிடுங்கள்.” என்றாள் அவள்.
அதிர்ந்துபோய் மனைவியை பார்த்தான் கீர்த்தனன்.
அடுத்த கணமே ஆத்திரம் வந்தது. மகனைக் கொண்டுபோய் சோபாவில் அமர்த்திய, ஒரு வாழைப்பழத்தை உரித்து சாப்பிடக் கொடுத்தான்.
தொலைக்காட்சியை உயிர்ப்பித்து கார்ட்டூனை போட்டுவிட்டு, “சந்துக்குட்டி டிவியை பார்த்துக்கொண்டு இருப்பானாம். அப்பா இதோ கொஞ்சத்தில் வருவேனாம்.” என்று சொல்லிவிட்டு, மனைவியை நெருங்கி அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்குள் புகுந்தான்.
புகுந்த வேகத்திலேயே கதவை அடித்து சாத்திவிட்டு, “என்னதான்டி பிரச்சனை உனக்கு? எப்போ பார் எதையாவது சொல்லிக்கொண்டு.” என்றான் ஆத்திரத்துடன்.
அவள் தேகம் அச்சத்தில் நடுங்கியது. கைகால்கள் எல்லாம் நடுங்க பயத்தோடு அவனைப் பார்த்தாள். அதுநாள் வரையிலான அவனின் கட்டுப்பாடுகளை உடைத்துப் போட்டது அவளின் அந்தக் கோலம்.
ஒரு வேக மூச்சுடன் அவளை இழுத்தணைத்து இதழ்களில் அழுத்தமாக தன் இதழ்களை பதித்தான். அதுநாள் வரை அனுபவித்த துயர்களுக்கும், துன்பங்களுக்கும் தீர்வாக அவளின் தேன்சுவை இதழ்களை சிறை செய்தவன் அவளுக்கு பிடித்த விதமாக சித்தரவைதை செய்துவிட்டே விட்டான்.
எதிர்பாராமல் நடந்துவிட்ட நிகழ்வில், நிற்க முடியாமல் தடுமறியவளை பற்றி நிறுத்தி, “இப்போதாவது புரிந்துகொள். உன் அருகில் நான் ஏன் வருவதில்லை என்று” என்றுவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான் அவன்.
அவன் சொன்னதன் பொருளை புரிந்துகொள்ள முடியாமல் திக்பிரமை பிடித்துப்போய் நின்றிருந்தாள் மித்ரா.
பால்கனியில் சென்று நின்றவனுக்கோ மனமெல்லாம் புயலடித்தது. மூச்சை நன்றாக இழுத்துவிட்டான். இரு கரங்களாலும் தன் தலையை கோதிக்கொண்டான். எல்லாவற்றுக்கும் தானே ஒரு காரணத்தை கற்பித்துக்கொண்டு தன்னையும் வதைத்துக்கொண்டு அவனையும் வதைக்கும் அவளை என்ன செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு.
அதோடு, இனியும் அவளை இப்படியே விட்டுவைக்கக் கூடாது, ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தவனுக்கு, என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.
ஆனால், அடுத்தநாளே அவனுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கினாள் அவன் மனைவி.
அன்று காலையில் நேரத்துக்கே எங்கோ போகவேண்டும் என்று சத்யன் சொல்லியிருந்ததில், அதிகாலையிலேயே எழுந்துகொண்ட பவித்ரா அவனுக்கான காலை உணவை தயாரித்தாள்.
சத்யன் எழுந்து குளியலறைக்குள் செல்லும் அரவம் கேட்க, அவனுக்காக பால் காய்ச்ச எண்ணி பிரிட்ஜை திறந்தவளை, அங்கே வெறும் பால் பெட்டியே வரவேற்றது.
அப்போதுதான் முதல்நாள் இரவு அண்ணியிடம் ஒரு பால்பெட்டி வாங்கி வரவேண்டும் என்று எண்ணியதை மறந்துபோனது நினைவில் வர, அங்கே அண்ணாவும் அண்ணியும் இப்போது நல்ல உறக்கத்தில் இருப்பார்களே.. என்ன செய்வது என்று யோசித்தாள் பவித்ரா.
அந்த வீட்டின் திறப்பு ஒன்று தங்களிடமும் இருப்பது நினைவில் வர அதை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினாள். மெல்லக் கதவைத் திறந்துகொண்டு சமையலறைக்குச் சென்றவள், ஒரு பால் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வர, மித்ராவும் எழுந்து வந்தாள்.
அவளைக் கண்டதும், “சாரி அண்ணி. இவர் இன்றைக்கு நேரத்துக்கே போகவேண்டும் என்றார். பால் காய்ச்ச பாலை பார்த்தால் அங்கே காணவில்லை. அதுதான் வந்தேன். சத்தம்போட்டு உங்கள் நித்திரையை குழப்பிவிட்டேனா?” என்றாள் மன்னிப்புக் கோரும் குரலில்.

