“ப்ச்! எரிச்சலைக் கிளப்பாதே பவித்ரா. நான் சாப்பிட்டேன். வேறு ஒன்றுமில்லை தானே? வைக்கிறேன்.” என்று அவன் பேச்சை முடிக்க முயல,
“ஏன், நீ சாப்பிட்டாயா என்று என்னைக் கேட்க மாட்டீர்களா?” என்று கேட்டாள் அவள்.
“வீட்டில் இருக்கிறவள் சாப்பிட்டுத்தான் இருப்பாள் என்று தெரியும். பிறகும் எதற்கு அதைக் கேட்க?”
‘சாப்பிட்டாயா என்று ஒரு வார்த்தை கேட்கத் துப்பில்லை. இதில் பெரிதாக விளக்கம் சொல்ல வந்துவிட்டான் விசரன்!’ என்று உள்ளே புகைந்தாலும், அதை மறைத்து, “நான் சாப்பிட்டேன் தான். சரி.. நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்று சொல்லுங்கள்?” என்று விசாரித்தாள்.
இப்போது அவனது பொறுமை முற்றிலுமாக பறந்தது. “என்ன விளையாடுகிறாயா? சும்மா போனை போட்டு எனக்கு எரிச்சலைக் கிளப்பாமல் வை!” என்று அதட்டினான்.
“சும்மா போனை போட்டேனா? என் புருஷன் சாப்பிட்டாரா என்கிற கவலையில் நான் கதைப்பது உங்களுக்கு சும்மாவா? இதில் எரிச்சல் வேறா?” என்று சண்டைக்குப்போனாள் அவள்.
‘கடவுளே…!’ உள்ளுக்குள் நொந்தே போனான் சத்யன். சும்மா இருந்தவனுக்கு போனை போட்டு இந்தப் பாடு படுத்துகிறாளே! “இப்போ நீ எதற்கு கூப்பிட்டாய்? அதை மட்டும் சொல்லு!” பொறுமையை இழுத்துப் பிடித்துக் கேட்டான்.
“ஏன்.. என் புருசனோடு காரணம் இருந்தால் மட்டும் தான் கதைக்க வேண்டுமா?” உரிமையோடு சொன்னாள் அவள்.
“அதற்கு வேலை நேரத்தில் அழைத்து தொந்தரவு தருவாயா? இங்கே நான் வேலைக்கு வந்திருக்கிறேனா இல்லை நீ சாப்பிட்டாயா நான் சாப்பிட்டேனா என்று உன்னோடு அரட்டை அடிக்க வந்திருக்கிறேனா?” என்று கேட்டான் அவன்.
“நான் ஒன்றும் உங்கள் வேலை நேரத்தில் அழைக்கவில்லையே. இப்போ சாப்பாட்டு நேரம் தானே..”
அது எப்படி இவளுக்குத் தெரியும் என்று அவன் மண்டையை உடைக்கையிலேயே, “இன்று உங்கள் ஆபிசில் என்ன நடந்தது?” என்று கதை கேட்டாள் அவள்.
“என்ன நடந்தது என்றால்? என்ன கேட்கிறாய்? புரியவில்லை.”
சத்யனுக்கு சத்தியமாக ஒன்றுமே விளங்க மறுத்தது. இவளுக்கு கிறுக்கேதும் பிடித்துவிட்டதோ என்றுகூட யோசித்தான்.
“என்ன நடந்தது என்றால்.. ஏதாவது சுவாரசியமாக நடந்திருக்கும் தானே. அதை சொல்லுங்கள்..”
மனைவி கேட்ட தொனியில், ‘இவள் என்னடா பக்கத்துவீட்டு பெண்மணியிடம் ஊருக்குள்ள என்னக்கா புதினம்? என்று ஊர் வம்பு அளப்பதுபோல் விசாரிக்கிறாளே’ என்றிருந்தது அவனுக்கு.
அந்தக் கடுப்பில், “அது எதற்கு உனக்கு?” என்று கடுகடுத்தான் அவன்.
“பின்னே, ஆபிசில் நடந்ததை என்னிடம் சொல்லாமல் யாரிடம் சொல்லப் போகிறீர்கள்?” என்று அவன் வாயை பிடுங்கினாள் இவள்.
அவனுக்கோ மறுபடியும் இல்லாத பொறுமை பறந்தே போனது!
“என்னிடம் வாங்கி க் ட்டாமல் வை போனை!” என்றவன், செல்லை அணைக்கப் போக,
“ஒருநிமிஷம். ஏன் எடுத்தாய் என்று கேட்க மாட்டீர்களா?” என்று விழுந்தடித்துக்கொண்டு கேட்டாள் பவித்ரா.
“அதை தானே அப்போதே கேட்டேன்..” நொந்துபோய் சொன்னான் சத்யன்.
“அதை இன்னோர் தடவை கேட்டால் தான் என்ன ஜான்?”
அந்தச் சலுகையான கொஞ்சல் சத்யனை என்னவோ செய்தது. அவன் என்னதான் கோபப்பட்டாலும், ஆத்திரப்பட்டாலும், எரிந்து விழுந்தாலும் காலைச் சுற்றும் நாய்க்குட்டியாக அவனைத் திணறடித்தாள் பவித்ரா.
“கேளுங்கள் ஜான்!” திரும்பவும் அவள் கொஞ்ச, அது அவனது ஆழ்மனதை அசைத்துத்தான் பார்த்தது. ஒரு கையால் நெற்றியை தடவி, தலையை கோதிக் கொடுத்தான்.
தன் தடுமாற்றத்தை காட்டிக்கொடுக்காமல், “என் பெயர் சத்யன்.” என்றான் சும்மா எதையாவது சொல்லவேண்டுமே என்பதற்காக.
“என் புருஷன் எனக்கு ஜான் தான். நான் காதலித்ததும் ஜானை தான். அவரின் முழுப்பெயர் வேண்டுமானால் சத்யனாக இருக்கலாம். ஆனால், என் நெஞ்சில் வைத்து நான் தினமும் ஜபம் போல் ஜபிப்பது ஜான் என்கிற பெயரை தான்.” என்றாள் பவித்ரா நெஞ்சை உருக்கும் குரலில்.
“சரி சொல், ஏன் எடுத்தாய்?” என்றவனின் குரல் அவனையும் மீறி மென்மையோடு ஒலித்தது.
“சும்மாதான் ஜான்.”
இதழ்களில் சின்னப் புன்னகை மலர்ந்தது சத்யனுக்கு. அமர்ந்திருந்த நாற்காலியில் நன்றாகச் சாய்ந்துகொண்டு, “என்ன சும்மா?” என்று இப்போது அவன் கதை கேட்டான்.
“அது சும்மாதான் எடுத்தேன். என்னவோ உங்களோடு கதைக்கவேண்டும் போல்.. உங்கள் குரலை கேட்கவேண்டும் போல் இருந்தது ஜான். அதுதான். சரி.. உங்களுக்கு நேரமாகிறது. பாய் ஜான்.” என்றுவிட்டு அவள் வைத்துவிட, சற்றுநேரம் தன் செல்லையே பார்த்துக்கொண்டிருந்தான் அவளின் ஜான்!
அவள் சொன்ன, ‘என்னவோ உங்களோடு கதைக்கவேண்டும் போல், உங்கள் குரலை கேட்கவேண்டும்போல் இருந்தது ஜான்..’ என்றது அவன் செவிகளில் ரீங்காரித்துக்கொண்டே இருந்தது.

