தனிமைத் துயர் தீராதோ 42 – 5

என்னதான் அவன் இப்போது அவளுக்கு கணவனாக வந்துவிட்டான் என்றாலும், அவனை நம்பி ஏமாந்திருக்கிறோம் என்பதும், அவன் திட்டமிட்டே ஏமாற்றி இருக்கிறான் என்பதும் திரும்பாத திரும்ப நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது.

 

அதற்குக் காரணம், இன்று அவனுடைய போட்டோவை பார்த்ததும், பவித்ராவை அண்ணி என்று கூப்பிட விடாததுமே!

 

“நீங்கள் ஏன் அப்படி சொன்னீர்கள்?” சட்டெனக் கேட்டுவிட்டாள்.

 

திடீரென்று அவள் குரல் கேட்டதில் நிமிர்ந்தவன், அவளின் கேள்வி விளங்காமல், “என்னது?” என்று கேட்டான்.

 

“பவித்ராவை அண்ணி என்று கூப்பிடவேண்டாம் என்று ஏன் சொன்னீர்கள்?”

 

இதெல்லாம் ஒரு விசயமா என்பதாக மேலும் கீழுமாக அவளை ஒரு பார்வை பார்த்தவன், மீண்டும் தன் பார்வையை லாப்டாப்புக்கு திருப்பி, “இப்போ என்ன அதற்கு?” என்று கேட்டான் அவன்.

 

அந்த அலட்சியமே அவளுக்குள் இருந்த கோபத்தை இன்னும் விசிறிவிட்டது. “நீங்கதான் என்னை மனைவியாக நினைக்கவில்லை. அவளும் என்னை அண்ணியாக நினைக்கக் கூடாதா?நான் அவளுக்கு அண்ணிதானே.” என்றவளுக்கு, கழிவிரக்கத்தில் கண்ணீரே வந்துவிடும் போலிருந்தது.

 

அவன்தான் மனைவிக்கான அங்கீகாரத்தை தர மறுக்கிறான். பவியாவது அந்த அங்கீகாரத்தை தரட்டுமே!

 

“இப்போ யார் இல்லை என்றது? உன்னை பவிக்கா என்று கூப்பிட்டால் நீ குறைந்தா போய்விடுவாய்?” என்று கேட்டான் அவன்.

 

அவனும் என்னவோ தங்கை தனக்குப் பிடித்த விதமாகவே கூப்பிடட்டும் என்றுதான் சொன்னான். அதை ஒரு விசயமாக பிடித்துக்கொண்டு இவள் தொங்கவும் மெல்லிய கோபம் வந்தது.

 

“ஓ.. அப்படியா! அப்போ நானும் உங்கள் அக்காவை பெயர் சொல்லியே கூப்பிடுகிறேன். அதில் அவரும் குறைந்துவிட மாட்டார் தானே.” என்றாள் இவள்.

 

“என் அக்கா உன் அண்ணனின் மனைவி!” என்றான் அவன் விழிகளில் கோபம் தெறிக்க.

 

‘அப்படி வாடா வழிக்கு!’

 

“நான் மட்டும் வித்திக்கு யார்?” என்று கேட்டாள் இவள்.

 

திரும்பத் திரும்ப அவள் அதையே பேசவும், “ப்ச்! உன்னோடு மனிதன் கதைப்பானா? எப்போ பார், எதையாவது பிடித்துத் தொங்கிக்கொண்டு!” என்று ஆத்திரப்பட்டவன், பட்டென்று எழுந்து தன் அறைக்குள் புகுந்துகொண்டான்.

 

“நான்.. நானா எதையாவது பிடித்துக்கொண்டு தொங்குகிறேன்?” என்றவளின் கொதிப்பு, சாத்தப்பட்ட அவன் கதவை தாண்டி அவனது காதுகளுக்குள் நுழையவே இல்லை.

 

‘திமிர்! உடம்பு முழுக்கத் திமிர்! இருக்குடா உனக்கு!’ கருவிக்கொண்டாள் பவித்ரா.

 

 

 

அடுத்தநாள் மாலை மித்ரா வேலை முடிந்து வந்ததுமே, “அண்ணி! உங்கள் தொம்பியின் போட்டோக்கள் இருந்தால் எனக்கு அனுப்பிவிடுங்கள்.” என்று படபடத்தாள்.

 

அவள் கேட்ட விதத்தில் சிரிப்பு எழுந்தது மித்ராவுக்கு. “அதென்ன தொம்பி?”

 

“அது அப்படித்தான்!”

 

“அதுசரி.. ஏன் திடீரென்று அதுவும் சத்தியின் போட்டோக்களை கேட்கிறாய்?” என்று விசாரித்தாள் மித்ரா.

 

“அவர் வேலைக்குச் சென்றபிறகு ஆ…சையாக அவரை பார்த்து ரசிக்க..” என்றாள் பல்லைக் கடித்துக்கொண்டு.

 

“என்னவோ வில்லங்கம் செய்யப் போகிறாய் என்று மட்டும் தெரிகிறது. எதையும் பார்த்துச் செய். இல்லையென்றால் வந்து கத்துவான்.” என்றவள் தன்னிடம் இருந்த சத்யனின் போட்டோக்களை அவளின் செல்லுக்கு அனுப்பிவைத்தாள்.

 

வந்த காரியம் முடிந்ததும், “சரி அண்ணி. நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன்.” என்று வெளிக்கிட்டாள்.

 

“எங்கே போகிறாய்? நில், நான் காரில் கூட்டிப் போகிறேன்.” என்று மித்ரா சொல்ல, ‘காரியத்தையே கெடுக்கப் பார்க்கிறீர்களே அண்ணி!’ என்று எண்ணிக்கொண்டவள் மறுத்தாள்.

 

“வாசலில் தானே பஸ் ஸ்டாப். நான் பஸ்சிலேயே போகிறேன்.” என்றுவிட்டுக் கிளம்பிவிட்டாள் பவித்ரா.

 

அவள் லைசென்ஸ் பழகும் விசயமாக சத்யனிடம் பேசவேண்டும் என்று குறித்துக்கொண்டாள் மித்ரா.

 

 

அன்று வேலை முடிந்து வந்த சத்யன், வழமை போன்று தமக்கையிடம் கஃபே அருந்திவிட்டு அவர்களின் வீட்டுக்கு செல்ல எண்ணிப் படியில் காலை வைத்ததும் திகைத்து நின்றுவிட்டான். படியேறும் சுவர் எங்கும் அளவான இடைவெளியில் பிரேம் இடப்பட்ட போட்டோக்கள் தொங்கின.

 

அனைத்திலும் அவனும் மித்ராவும், அவனும் வித்யாவும் அல்லது அவனும் கீர்த்தனனும் என்று எடுத்துக்கொண்ட போட்டோக்கள்.

 

இதென்ன காட்சிப்பொருள் மாதிரி? சுறுசுறு என்று கோபமேற தடதட என்று படியேறி வீட்டுக்குள் சென்றவனை பார்த்து, ஹால் முழுவதும் நிறைந்திருந்த அவர்களின் திருமணப் போட்டோக்கள் பல்லைக் காட்டின!

 

இவனோ இன்னும் பலமாக பல்லைக் கடித்தான்!

 

கையிலிருந்த பாக்கை தூக்கி சோபாவில் எறிந்துவிட்டு, “பவித்ரா..!!” என்றவனின் குரல் ஓங்கி ஒலித்தது.

 

“என்ன ஜான்?” என்று கேட்டுகொண்டே வெளியே வந்தவள், தலைவாரி, பொட்டிட்டு, மலர்ந்த முகத்தோடு இருந்தாள்.

 

“இதெல்லாம் என்ன?” சுவரில் தொங்கிய போட்டோக்களை கையால் காட்டிக் கேட்டவன் கிட்டத்தட்ட உறுமினான்.

 

இமைகளை படபடவென்று கொட்டி, “இது கூடத் தெரியாதா ஜான்? நம் கல்யாணப் போட்டோக்கள்.” என்றாள் பவித்ரா கொஞ்சும் கிளியின் குரலில்.

 

அவளின் நடிப்பில் இவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது. “அதை எதற்கு இப்படி வீடு முழுவதும் தொங்க விட்டிருக்கிறாய்? இதெல்லாம் எனக்குப் பிடிக்காது! உடனடியாகக் கழட்டு!” என்றான் உத்தரவாக.

 

இதற்காகத்தானே அவளும் காத்திருந்தாள்! “ஏன்? இன்னும் எவளையாவது ஏமாற்றவா?” என்று நிதானமாக கேட்டாள்.

 

 

error: Alert: Content selection is disabled!!