தனிமைத் துயர் தீராதோ 42 – 6

“என்ன உளறுகிறாய்?”

 

“உளறல் இல்லை உண்மை. இந்த வீட்டிலோ அண்ணி வீட்டிலோ உங்கள் போடோக்கள் இருந்திருந்தால் நான் உங்களிடம் ஏமாந்திருக்க மாட்டேன்தானே? உங்களாலும் என்னை, என் அன்பை ஏமாற்றி இருக்க முடியாது தானே. அப்படி என்னைப்போல வேறு யாரும் உங்களிடம் ஏமாறவும் கூடாது. நீங்கள் ஏமாற்றவும் கூடாது என்றுதான் இதை செய்திருக்கிறேன்.” என்றாள் நிதானமாக.

 

“லூசுத் தனமாக எதையாவது கதைத்து என் எரிச்சலை கிளப்பாமல் இதையெல்லாம் கழட்டு!” என்றான் மீண்டும்.

 

“முடியாது! நான் மட்டும் கல்யாணம் ஆனவள் என்று ஊருக்கே காட்டுகிற மாதிரி நீங்கள் கட்டிய தாலியில் இருந்து போட்டுவிட்ட மெட்டி தொடங்கி வைத்துவிட்ட குங்குமம் வரை வைத்துக்கொண்டு அலையவேண்டும். நீங்கள் மட்டும் எப்போதும்போல் திரிவதா? விடமாட்டேன்! உங்கள் கழுத்துக்கும் ஒரு நாய்ச்சங்கிலிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.” என்றாள் அவள்.

 

“நாய்ச் சங்கிலியா?” திகைத்துப்போய் கேட்டான் சத்யன்.

 

“ஆமாம்! பவித்ரா என்று என் பெயர் போட்ட சங்கிலி. இனிமேல் அதுதான் உங்களுக்கு தாலிக்கயிறு. அதை பார்த்த பிறகும் எவளாவது உங்கள் பின்னால் வருவாள்?” சவாலாகக் கேட்டாள் அவள்.

 

அதைக் கேட்டவனுக்கு ஆத்திரத்தில் சிரிப்புத்தான் வந்தது! ஒருபக்கமாக உதட்டைக் கோணி நக்கலாச் சிரித்தான்.

 

அவள் தந்ததும் அவன் போட்டு விடுவானா என்ன?

 

அவனுக்குத் தெரியவில்லை அதை தான் ஆசையோடு போடப் போகிறோம் என்பதும், சாகும் வரைக்கும் அது அவன் கழுத்திலேயே கிடக்கப் போகிறது என்பதும்!

 

அதை இன்று அறியாதவனோ, அவள்மேல் இருந்த கோபத்தில் குளித்துவிட்டு வந்து விடு விடு என்று கீழே இறங்கிப் போனான்.

 

சாப்பிடாமல் எங்கே போகிறான்? யோசனையோடு கணவனைப் பின்தொடர்ந்தாள் பவித்ரா.

 

அவனோ தமக்கையிடம் உணவை வாங்கி உண்டான். முகம் சுருங்கிப் போனது பவித்ராவுக்கு.

 

‘ஏன்டா? வீட்டில் சண்டை என்றால் உடனே அக்கா வீடா?’ சத்யனை அவள் முறைக்க, அவனோ சாப்பாட்டை ரசித்து ருசித்து விழுங்கிக் கொண்டிருந்தான்.

 

“பவி, உனக்கும் போடுகிறேன், நீயும் சாப்பிடு.” சாப்பாட்டு மேசையில் சத்யனுக்கு முன்னால் அமர்ந்திருந்த மித்ரா சொன்னாள்.

 

“இல்லை அண்ணி. நான் ஏற்கனவே சாப்பிட்டேன்.” என்றாள் அவள். மனம் மட்டும், ‘நான் அவனை ஒன்றுமே சொல்லக் கூடாதா? ’ என்று புழுங்கியது.

 

சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான் சத்யன். முகத்தை திருப்பிக்கொண்டாள் பவித்ரா. அவனோடு அல்லது அவன் சாப்பிட்ட பிறகுதானே அவள் சாப்பிடுவாள். அதன் பிறகு உணவு தொண்டைக்குழிக்குள் இறங்க மறுத்தது சத்யனுக்கு.

 

“இன்னும் போடவாடா?” என்ற தமக்கையை, “போதும்கா.” என்று தடுத்தான் அவன்.

 

“பசி சோற்றை போடு என்றாய். இப்போது போதும் என்கிறாய். என்ன சத்தி நீ?” என்று சலித்தாள் மித்ரா.

 

அதற்கு ஒன்றும் சொல்லாமல் சாப்பாட்டை அவன் அளைய, “தட்டில் இருப்பதையாவது சாப்பிடு!” என்று அதட்டியவள் நினைவு வந்தவளாக, “பவியை டிரைவிங் ஸ்கூலில் சேர்த்துவிடு சத்தி.” என்றாள்.

 

“அதையேன் நான் செய்ய?” அக்கரையற்றுச் சொன்னான் அவன்.

 

ஏற்கனவே போட்டோ விசயத்தில் அவள் மேல் கோபம். அதோடு, சாப்பிட்டதாக அவள் சொன்ன பொய்யும் சேர்ந்துகொள்ள வேண்டுமென்றே கேட்டான்.

 

“நீ செய்யாமல்? இன்றைக்கும் அவள் நடந்துதான் வெளியே போய்வந்தாள். பஸ்ஸிலும், நடந்தும் என்று எத்தனை நாட்களுக்கு திரிவது?” என்று கேட்டாள் மித்ரா.

 

“நடக்க முடியாது என்றால் அதைப்பற்றி அவள்தான் யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் அத்தானிடம் சொல், அவர் செய்வார்.” என்றான் அவன் விட்டேற்றியாக.

 

பவித்ராவுக்கோ கணவனின் எடுத்தெரிந்த பேச்சு அதுநாள் வரையிலான அவளின் முயற்ச்சிகள் அத்தனையையும் போட்டு உடைப்பது போன்றிருந்தது.

 

இவன் ஏன் எப்போதும் அவளை வார்த்தைகளால் வதைக்கிறான் என்று தோன்ற. மித்ரா இந்தப் பேச்சை எடுக்காமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.

 

“ப்ச் சத்தி! என்ன பேச்சு இது? இனியும் நீ இப்படி பொறுப்பில்லாமல் திரியாதே! உனக்கு என்று மனைவி வந்துவிட்டாள். அவளுக்கும் சேர்த்து நீதான் யோசித்து, நடக்கவேண்டும்.” என்று புத்தி சொன்னாள் மித்ரா.

 

திரும்பி மனைவியை ஏளனமாகப் பார்த்தான் சத்யன். “இவளுக்கும் சேர்த்து நான் யோசிப்பதா? நல்லகதை போ! ஒரு ஊருக்கே இவள் யோசிப்பாள். அவள் எப்படியானவள் என்று தெரியாமல் எதையும் கதைக்காதே!” என்று ஏளனமாக உரைத்தவன், தட்டில் உணவு அப்படியே இருக்க எழுந்துபோய் கைகை கழுவினான்.

 

கலவரத்தோடு அவனைப் பார்த்தாள் மித்ரா.

 

அவசரமாக அவள் பார்வை பவித்ராவிடம் ஓட. அவளோ அவமானத்தில் சிவந்துவிட்ட முகத்தோடு மித்ராவை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நின்றிருந்தாள்.

 

தாங்கமாட்டாமல், “என்னடா சத்தி..” என்று மித்ரா ஆரம்பிக்க, இடைபுகுந்த பவித்ரா, “அண்ணி ப்ளீஸ். இதற்குமேல் இந்த விஷயத்தை பற்றிப் பேசாதீர்கள். இதை நானும் அவருமே கதைத்துக் கொள்கிறோம்.” என்றாள்.

 

மித்ராவுக்கோ ஒருமாதிரி ஆகிப்போனது. தான் தேவையில்லாமல் மூக்கை நுளைத்துவிட்டோமோ என்று. சத்யனுக்கு அக்காவாக இருந்தாலும் அவர்களின் குடும்பத்துக்கு தான் மூன்றாம் நபர்தான் என்பதை உணர்ந்தவள், தான் இனிமேல் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

 

பவித்ராவுக்கோ அதற்குமேலும் அங்கே இருக்க முடியவில்லை. அதோடு வெளியே போயிருக்கும் தமையன் வந்தால் கட்டுப்பாட்டை இழந்து அழுதுவிடுவோமோ என்று பயமாக வேறு இருக்க, “நான் மேலே போகிறேன் அண்ணி.” என்றுவிட்டு சென்றாள்.

 

 

 

 

error: Alert: Content selection is disabled!!