தானும் சற்று அளவுக்கு அதிகமாக பேசிவிட்டோம் என்று உணர்ந்தானோ என்னவோ, “பொய்யை சொல்லாமல் எழும்பி வா..” என்று தணிந்தே போனான் சத்யன்.
அதற்குமேலும் வீம்பு பிடிக்க மனமற்று, அவனைச் சாப்பிட வைக்கவும் ஒரு வழி கிடைக்க, “நீங்களும் சாப்பிடுவதாக இருந்தால் நான் சாப்பிடுகிறேன்.” என்று பேரம் பேசினாள்.
“நான்தான் சாப்பிட்டேனே..”
“ஆனாலும் பசி போயிருக்காது.”
‘இவளுக்கு எப்படித் தெரியும்?’ வியப்போடு அவளைப் பார்த்தான் அவன்.
‘இப்போ மட்டும் நல்லா பாருடா! லூசா! லூசா!’
அவளின் மனவோட்டங்களை அறியாதவன், “சரி, எனக்கும் சேர்த்துப் போடு!” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.
இருவருமாக உணவை முடித்துக்கொண்டனர். அவள் கையால் வாங்கி சாப்பிட்ட பிறகுதான் மனசும் வயிறும் நிறைந்தது போலிருந்தது சத்யனுக்கு!
தன்னறையில் வந்து விழுந்தவனுக்கு மனதில் குழப்பம்.
போட்டோக்களை கொழுவியதில் அவனுக்குக் கோபம்தான். அந்தக் கோபத்தில் தான் அக்கா வீட்டுக்கு உண்ணப் போனான். அவள் சாப்பிட்டேன் என்று பொய் சொன்னதும் அன்றுபோல் பட்டினியாகக் கிடக்கப் போகிறாளோ என்கிற பரிதவிப்பு கோபமாக உருவெடுத்ததில் தான் தமக்கை லைசென்ஸ் பற்றிப் பேசியபோது அக்கறையற்றவனாக பதில் சொன்னான். அதை சொல்லும்போது பவித்ராவின் முகத்தில் தெரிந்த பாவம்?
ஏனடா வாயை விட்டோம் என்றாகிவிட்டது அவனுக்கு.
ஒன்றைத்தொட்டு இன்னொன்று என்று அவனுடைய பொறுமையற்ற குணமும் கோபமும் வார்த்தைகளை விட வைத்துவிட்டன! அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்கிற கேள்விக்கு அவனிடம் பதிலே இல்லை.
அவனை நெருங்க அவள் முயல்வதும் அவன் தள்ளித் தள்ளிப் போவதும் அவன் அறியாதது அல்ல. ஆனால், நெருங்கவும் முடியவில்லை.
முதலாவது காரணம், கீர்த்தனனின் நடத்தை! சத்யனின் நிபந்தனைக்கு உட்பட்டு வேறு வழியின்றி மணந்த ஒருவனின் நடத்தைகள் அல்ல அவை! நெஞ்சுமுழுக்க நேசத்தை நிறைத்துக்கொண்டு அக்காவை பார்க்கும் அத்தானின் பார்வைகளை அவன் அறிவான். அப்படியான அத்தானுக்கு ஏமாற்று வேலையை செய்துவிட்டோமே என்கிற குற்றவுணர்ச்சி. அடுத்ததாக அத்தானின் தங்கை என்கிற முட்டுக்கட்டை!
அதோடு, என்ன இருந்தாலும் தன் தமக்கைகாகத்தானே அவளை மணந்தோம் என்கிற எண்ணங்களே அவளை நெருங்க விடாமல் அவனை வதைத்தது.
இவ்வளவு நாட்களும் பெரிய இவன் மாதிரி விலகி விலகிப் போய்விட்டு இனி எப்படி அவளை நெருங்குவது என்கிற யோசனை வேறு! இதற்கு என்னதான் முடிவு என்கிற யோசனையுடனேயே உறங்கிப்போனான் சத்யன்.
அன்று கணவன் தன் பசியை கவனத்தில் கொண்டான் என்கிற சந்தோசம் தந்த நிறைவில் அடுத்த நாள் விசப்பரீட்சை ஒன்றுக்குத் தயாரானாள் பவித்ரா. அதுவரை தினமும் அவனுக்கு தானாக அழைத்துப் பேசுகிறவள் அன்று அவளாக எடுப்பதில்லை என்கிற முடிவை எடுத்தாள்.
இத்தனை நாட்களும் அவள் நேரம் காலம் மறக்காது அழைத்துப் பேசியதற்கு பலன் இருந்தால் அன்று அவனாக அவளைத் தேடி அழைக்கவேண்டும். அந்த முடிவை என்னவோ வெகு இலகுவாக எடுத்துவிட்டாள் தான். செயல்படுத்துவதற்குள் தான் படாத பாடு பட்டுப்போனாள்.
நேரம் மதியத்தை நெருங்க நெருங்க உடலும் உள்ளமும் பரிதவிக்கத் தொடங்கியது.
விரதம் காப்பவள் போன்று தலைக்குக் குளித்துவிட்டு வந்து, ஓடிப்போய் கடவுள் படத்துக்கு முன்னால் கைகூப்பி நின்றாள். கண்களில் அவளை அறியாமலேயே கண்ணீர் வடிந்தது.
எவ்வளவு நேரம் தன் பிரார்த்தனைகளை தெய்வத்தின் முன்னால் வைத்தாளோ, அவளே அறியாள்! அப்படி ஆண்டவனிடம் மனதில் உள்ளவற்றை எல்லாம் கொட்டியது ஒருவித ஆறுதலை தர, தன்னுடைய செல்லையும்.. வீட்டுக்கு அழைப்பானோ என்று தோன்ற வீட்டுத் தொலைபேசியையும் எடுத்துக்கொண்டு சென்று சோபாவில் அமர்ந்துகொண்டாள்.
அவள் வழமையாக எடுக்கும் அந்தப் பன்னிரண்டு மணியை நேரம் நெருங்கியது. இருப்புக்கொள்ளாமல் அவள் தவிக்க அவன் அழைக்கவில்லை..
பன்னிரண்டு ஒன்று.. பண்ணிண்டு இரண்டு.. கண்களில் கண்ணீர் பொங்கத் துவங்கியது.
நேரத்தை பார்த்தாள் பன்னிரண்டு ஐந்து. ‘எடுங்கள் ஜான்.. இன்று மட்டும் எடுத்துவிடுங்கள் ஜான்.. என்னை ஏமாற்றி விடாதீர்கள்..’ உள்ளம் பரிதவிக்க நேரமோ பன்னிரண்டு எட்டானது.
ஆசை நிராசையாக ஏமாற்றம் அவளைத் தழுவ, முற்றிலுமாக உடைந்துபோனாள் பவித்ரா.
‘இனி எடுக்க மாட்டான்.. அவன் மனதில் நான் இல்லவே இல்லை..’ நெஞ்சை பிளந்துகொண்டு விம்மல் ஒன்று பெரிதாக கிளம்பிய அதே நேரம், அவளது செல் இனிய நாதமாய் இசை பாடியது.

