காதுக்குள் நுழைந்த இன்னிசை உயிரை மீட்டுத் தர, யார் என்று அறிய முதலே ‘அவன்தான் அவனேதான்’ என்று உள்ளம் அடித்துச் சொல்ல, உடலில் அலையலையாய் பரவசம் பொங்கிற்று! துவண்டு மடியப்போன உணர்வுகள் துள்ளி எழும்பியது. அதே வேகத்தில் கண்களை நிறைத்த கண்ணீரோடு செல்லை எடுத்துப் பார்க்க, அதிலே ஜான் என்கிற எழுத்துக்கள் முத்துக்களாக ஒளிர்ந்தன.
வேக வேகமாக கண்களை துடைத்துக்கொண்டு, பபட்டனை அழுத்தி செல்லை காதுக்குக் கொடுத்து, “ஹலோ ஜான்..” என்றவளின் குரலில் ஆனந்தக் கண்ணீரும், புன்னகையும், துள்ளலும் சேர்ந்து ஒலித்தது.
செவிவழி பாய்ந்த உயிரை உருக்கும் அந்த அழைப்பில் சத்தியமாகக் கரைந்தே போனான் அவள் கணவன்.
சில நொடிகள் அமைதியாக இருந்து அவளின் குரல் உண்டாக்கிய சிலிர்ப்பையும், அதிர்வலைகளையும் சந்தோசமாக அவன் அனுபவிக்க, “ஜான்.. ஜான்.. இணைப்பில் இருக்கிறீர்கள் தானே..” என்று பரிதவித்துவிட்டாள் பவித்ரா.
‘எதற்கடி இத்தனை தவிப்பு?’ உள்ளம் கேட்டாலும் அதை மறைத்துக்கொண்டு, “ம்ம்.. இருக்கிறேன்..” என்றவன், அவளை தேடி என்றல்லாமல் ஏதோ அலுவலாக அழைத்தேன் என்று சொல்லவேண்டும் என்று எண்ணியதை மறந்து, “இன்று ஏன் நீ கூப்பிடவில்லை?” என்று கேட்டான்.
உள்ளம் துள்ள, நின்ற இடத்திலேயே சந்தோஷ மிகுதியில் துள்ளினாள் பவித்ரா. காதருகில் செல்லை பிடித்தபடியே சுவாமிப் படத்தருகே ஓடினாள்.
‘நன்றி தெய்வமே..!’ சந்தோஷ மிகுதியில் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து, ஆணியில் கொழுவியிருந்த சுவாமிப் படத்தை எடுத்து ஒரு முத்தத்தை அழுத்தமாகப் பதித்தாள்!
கணவனுக்குக் கிடைக்கவேண்டிய முத்தம் அந்தக் கடவுளுக்கு; தென்னாடுடைய சிவனுக்குக் கிடைத்தது!
“பவி.. இப்போது நீ அழைப்பில் இருக்கிறாயா?” என்று கேட்டவனின் கேள்வியில் வழமைக்கு மாறாக சின்னக் கேலி விரவிக் கிடக்க, அதில் கரைந்தே போனாள் அவனிடம் முற்றாகத் தன்னை தொலைக்கக் காத்திருப்பவள்.
‘பவி என்றானே..’
உற்சாகத்தில் மேலும் கீழுமாய் குதித்த மனதை அதன்பட்டுக்கே விட்டுவிட்டு, சாதாரணமாக கதைக்க முயன்று, “இருக்கிறேன் ஜான். என்ன அதிசயமாக இன்று நீங்கள் என்னைத் தேடி அழைத்திருக்கிறீர்கள்?” என்று விசாரித்தாள்.
“தினமும் இந்த நேரத்துக்கு அழைத்து என் உயிரை வாங்குகிறவள் இன்று அழைக்காவிட்டால், என்னவோ ஏதோ என்று யோசிக்க மாட்டேனா?” என்று அவன் கேட்டபோது, ‘அவளின் அழைப்புக்காக அவனும் காத்திருந்திருகிறான்!’ நெஞ்சம் விம்மித் தணிந்தது இவளுக்கு.
சந்தோஷ மிகுதியில் என்ன சொல்வது ஏது சொல்வது என்று தெரியாது அவள் இருக்க, “ஏன் கூப்பிடவில்லை?” என்று அவனே கேட்டான்.
“அது.. அதுவா.. சோபாவில் சும்மா சாய்ந்து இருந்தேனா.. அப்படியே உறங்கிப் போனேன்…” என்று ரசித்துப் பொய் சொன்னாள் மனையவள்!
“ஓ..! அதுதான் குரலும் ஒருமாதிரி இருக்கிறது போல. சாரிமா. உன் உறக்கத்தை கெடுத்துவிட்டேனா?” என்று மெய்யாக வருந்தினான் கணவன்.
அவளது குரலில் இருந்த மாற்றத்தை கவனித்திருக்கிறான் என்றால், அவள் குரலை அவன் உள்வாங்கி இருக்கிறான் என்றுதானே அர்த்தம். அதோடு அவளது உறக்கம் கலைந்ததை எண்ணி வருந்துகிறான் என்றால் அவள்மேல் அன்பில்லாமலா?
நெஞ்சம் இன்னுமே துள்ள, “இல்லைப்பா.. இனி உறங்க முடியாது. நீங்கள் பேசுங்கள்.” என்றாள் அவள் சலுகையோடு.
அந்த சலுகையும் கொஞ்சலும் அவனுக்குள் என்னவோ செய்ய, இப்போது என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதி காத்தான் அவன்.
அவளோ மறுபடியும் ஆரம்பித்தாள்.
“சாப்பிட்டீர்களா?”
இதழ்களில் புன்னகை அரும்ப, “ம்ம்..” என்றவன், என்ன சாப்பிட்டான் என்றும் சொன்னான்.
அப்படியே வழமையான பத்து நிமிடங்களையும் தாண்டி பேசியபிறகு, “இன்றைக்கு என்ன சமைக்கட்டும் ஜான்?” என்று கேட்டாள் அவன் மனைவி.
“இதென்ன என்னிடம் கேட்கிறாய் புதிதாக. நீயே எதையாவது பார்த்துச் செய்.” என்றான் அவன்.
“இல்லை. இன்றைக்கு உங்களுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்று சொல்லுங்கள். அதையே செய்கிறேன்.” என்றாள் அவள் பிடிவாதமாக.
அவளோடு விளையாடிப் பார்க்கும் ஆசை திடீரென்று உருவாக, “ஸ்பகட்டி செய்.” என்றான் சத்யன்.
“என்னது…?!”
என்னதுவை அவள் இழுத்த இழுவையிலேயே அவளுக்கு அது செய்யத் தெரியாது என்று விளங்க, எழுந்த சிரிப்பை உதடுகளுக்குள் அடக்கிக்கொண்டு, “செய்யத் தெரியாதா? பிறகு எதற்கு சும்மா உங்களுக்கு பிடித்ததை செய்யவா என்று கேட்டாய்? எதையாவது செய். வந்து சாப்பிடுகிறேன்.” என்று அலுத்துவிட்டு அணைப்பை துண்டித்தவனுக்கு, உதடுகளில் மலர்ந்த இளம் முறுவலை அடக்கவே முடியவில்லை.

