பின்னே, இந்த மித்ராவும் சத்யனும் ஒரு ஆட்களா என்கிற ஆத்திரத்திலும், அவர்களை மதித்து நான் நடப்பதா என்கிற அகங்காரத்திலும் சொல்லவில்லை என்றா சொல்ல முடியும்?
“என்ன எதிர்பாராத ஆச்சரியம்? எல்லோரும் வேலைக்குப் போகும் வீட்டில் திடீர் என்று வந்து நின்றால் அவர்களுக்கு சங்கடமாக இருக்கும் என்று யோசிக்க மாட்டாயா?” என்று கடிந்தான் சேகரன்.
கவிதாவின் முகம் கோபத்திலும் அவமானத்திலும் சிவக்க, பிரச்சனை பெருக்கப் போகிறதோ என்றஞ்சிய மித்ரா, ‘இதை எப்படியாவது நிறுத்துங்கள்..’ என்று கணவனிடம் விழிகளால் கெஞ்சினாள்.
அவளின் விழிகள் வேறு தவிப்போடு நொடிக்கொரு தரம் கடிகாரத்தை நோக்கி ஓடியது.
அதைக் கவனித்துவிட்டு, “விடு சேகரன். நம் வீடுதானே. நீ கிளம்பு மித்து. நீ வந்ததும் நானும் கொஞ்சம் வெளியே போகவேண்டும்.” என்றான்.
“வருகிறேன்..” என்று பொதுவாக எல்லோரிடமும் சொன்னவள், அவளை தொற்றிக்கொண்ட பரபரப்போடு அங்கே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த தன் மெல்லிய கோர்ட்டை எடுத்து அணிந்துகொண்டு, ஷூக்களையும் வேகமாக மாட்டிக்கொண்டு வெளியே கிட்டத்தட்ட ஓடினாள்.
மனைவியையே பார்த்துக்கொண்டிருந்த கீதனுக்கு, இவள் போகிற போக்கைப் பார்த்தால் காரில் பறப்பாள் போலிருக்கே என்று தோன்றியது.
அவளின் காரோட்டத்தைப் பற்றித்தான் அவன் அறிவானே. உடனேயே அவளின் பின்னால் தானும் விரைந்தான்.
கராஜை திறந்து வேகமாக காருக்குள் ஏறப்போனவள், “மித்து!” என்ற கணவனின் அழைப்பில், நின்று திரும்பிப் பார்த்தாள்.
“நேரம் இருக்கிறது. அதனால் மெதுவாகவே போ.” என்றான் அவள் விழிகளையே பார்த்து.
அதுவரை இருந்த பரபரப்பு தன் பாட்டுக்கு அடங்க, புன்னகை அரும்பியது அவளுக்கு.
“சரி..” என்று தலையாட்டிவிட்டு அவள் காருக்குள் அமரப்போக, இளம் நீலத்திலான ‘ஜெகின்ஸ்’உம் அதற்கு பொறுத்தமாய் சற்றே லூசான வெள்ளை நிற ஷர்ட் ஒன்றும் அணிந்து, பக்க உச்சி பிரித்து லூசாக விட்டிருந்த கூந்தலோடு தலையசைத்த மனைவியின் அழகை கண்களால் விழுங்கிக்கொண்டே, “இங்கே தலையாட்டிவிட்டு என் கண் மறைந்ததும் வேகமாக ஓடக்கூடாது!” என்றான் அவளை நம்பமாட்டாமல்.
அரும்பிய புன்னகை சிரிப்பாக மலர, “நானே நினைத்தால் கூட என்னால் இப்போதெல்லாம் வேகமாக ஓடமுடிவதில்லை கீதன். கை கால்கள் எல்லாம் நடுங்கும்.” என்றாள் அவள்.
அவள் என்னவோ சாதாரணமாகத்தான் சொன்னாள். கீர்த்தனனோ நின்ற இடத்திலேயே உறைந்தான்.
“ஏ..ன்?” குரல் திக்கியது அவனுக்கு.
“தெரியவில்லை கீதன். வேகத்தை நினைத்தாலே பயம்மா இருக்கும்.” என்றாள் அவள் புன்னகையோடு.
அந்தப் புன்னகையே அவனை வாள்கொண்டு அறுக்க, அவளுக்குத் தெரியாதது அவனுக்குத் தெரிந்தது. அந்தளவு தூரத்துக்கு வாழ்க்கையில் அடிவாங்கி இருக்கிறாள். அடித்திருக்கிறார்கள்! அதில் அவனுக்கும் பெரும் பங்குண்டு.
நெஞ்சில் வலித்தது.
அதை அறியாதவளோ, “வரவா கீதன்.” என்றபடி காருக்குள் ஏற, பதிலற்று தலையை மட்டும் அசைத்தவனுக்கோ இப்போது அவளைத் தனியாக காரில் அனுப்பவே மனமில்லை.
நேரம் போகிறது என்று அவசரமாக அவள் ஓட்டி, ஏதாவது நடந்துவிட்டால்? நெஞ்சம் குலுங்கியது.
கூடப் போக மனம் துடிக்க, வீட்டுக்கு வந்திருக்கும் தங்கை குடும்பம் அதை தடுத்தது.
அவள் சொன்ன, ‘கை கால்கள் எல்லாம் நடுங்கும்’ என்றது நெஞ்சுக்குள் கிடந்து பிசைந்துகொண்டே இருக்க, என்ன செய்யலாம் என்று யோசித்தான். அந்த நேரம் சத்யனும் இறங்கி வந்தான்.
அவனைக் கண்டதும், “உனக்கு இப்போதே வேலைக்கு போகவேண்டுமா?” என்று கேட்டான் கீர்த்தனன்.
கேள்வி புரியாமல், தலையை மேலும் கீழுமாக அசைத்தவன், “ஏன் அத்தான்?” என்று கேட்டான்.
“மித்துவை ஆபீஸ் வரைக்கும் கூடிக்கொண்டு போய்விட்டு கொண்டுவந்து விட்டுவிட்டுப் போகிறாயா?” என்றவனின் கேள்வி, கேள்வியின் தொனியில் இருந்தாலும் அதைச் செய் என்கிற கட்டளை வெளிப்படையாகவே தெரிந்தது.
ஏன்? அக்கா காரில் போனால் என்ன?’ என்று மனதில் தோன்றினாலும், “சரித்தான்.” என்றது சத்யனது வாய்.
“அவனுக்கும் நேரமாகப் போகிறது கீதன். நான் மெதுவாகவே போய்விட்டு வருவேன்.” என்றாள் மித்ரா.
கீதனோ அவளை முறைத்தான். “என் பேச்சை இதிலாவது கேள்!” என்று அதட்டியவன், “அவனோடேயே போ!” என்றான் முடிவாக.
தமக்கையை நெருங்கி, “உன் புருசனுக்கு வரவர பிடிவாதம் கூடிக்கொண்டு போகுது அக்கா. பூ மாதிரி இருக்கிற என் அக்காவுக்கு இப்படி ஒரு புருஷன்! அவரை கொஞ்சம் கவனமாக இருக்கச் சொல். இப்போ நீ வா!” என்றவன், அவளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போக, கணவனின் மறைமுகப் பேச்சில் சங்கடப்பட்டு நின்ற மித்ராவுக்கு சிரிப்புத்தான் வந்தது.
கீர்த்தனனுக்கும் மித்ராவின் பேச்சினால் கனத்துப்போயிருந்த மனதும், அவளை தனியே விடமுடியாமல் இருந்த தவிப்பும் சத்தியினால் தீர்ந்ததில் அவனாலும் அந்தக் கேலிக்கு இலகுவாக சிரிக்க முடிந்தது.
அதுமட்டுமின்றி, “நானாடா பிடிவாதக்காரன்? யார் பிடிவாதம் பிடிக்கிறார் என்று உன் அக்காவை கேள். நான் என்ன பாடு படுகிறேன் என்று எனக்குத்தானே தெரியும்!” என்றவனின் பேச்சு புரியாமல் சத்யன் முழிக்க, மித்ராவின் கன்னங்களோ சூடானது.
நடந்துகொண்டிருந்தவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அதற்காகவே காத்திருந்தவன் குறும்புப் புன்னகை மின்ன சட்டெனக் கண்ணைச் சிமிட்டினான்.
ஆனந்தமாய் அதிர்ந்தவள் வேகமாக சத்யனை தான் திரும்பிப் பார்த்தாள், அவன் பார்த்தானா என்று. இல்லை என்று தெரிந்ததும் திரும்பவும் பின்னால் திரும்பி முறைத்தவளின் வதனத்தில் புன்னகைதான் மலர்ந்திருந்தது.

