சேகரனும் கீதனும் பேச்சில் ஆழ்ந்துவிட, மேலே தங்கை வீட்டுக்கு மகளோடு சென்றாள் கவிதா.
அப்போதுதான் குளித்துவிட்டு வந்த பவித்ரா, “வாக்கா. நான் கீழே வர நினைக்க நீ மேலே வந்துவிட்டாய்.” என்று ஈரக் கூந்தலை துவட்டியபடி வரவேற்றாள்.
அவளின் அடர்ந்த கூந்தலை பார்த்துவிட்டு, “அடிக்கடி தலைக்குக் குளிக்காதே பவி; முடி கொட்டிவிடும். என் முடியை பார். எலிவால் மாதிரி ஆகிவிட்டது.” என்றாள் கவிதா தன் முடியை காட்டி.
“அப்படித்தான் அண்ணியும் சொன்னார்.” என்றவள், தன் முடியை டவலால் சுற்றிக்கொண்டு, “திவிக்குட்டி, சித்தியிடம் வாங்க செல்லம்.” என்று கொஞ்சியபடி பெறாமகளை வாங்கக் கையை நீட்டினாள்.
அவளும் தாவி வந்தாள். “வளர்ந்துவிட்டாள் இல்லையாக்கா..” என்று கேட்டுக்கொண்டே வாங்கினாள் பவித்ரா.
“ம்ம்..” என்றவள், “அம்மாவோடு கதைத்தாயா?” என்று கேட்டாள்.
“போனவாரம் பேசினேன். அம்மாவுக்குத்தான் என் மீது இன்னும் கோபம் போகவில்லை போல.” என்றாள் கவலையோடு.
“எப்படிப் போகும்? நீ செய்த வேலைக்கு எனக்கும் தான் உன் மீது கோபம்.”
“அப்படி என்னக்கா பிழை செய்தேன் நான்? பிடித்தவரை மணப்பது ஒரு தப்பா?” என்றவளின் குரல் மெலிதாகக் கரகரத்தது.
“அதற்காக யார் என்ன என்று இல்லையா. போயும் போயும் அவளின்..” என்று கவிதா வெறுப்போடு சொல்லும்போதே, “போதும் அக்கா! அண்ணியைப் பற்றி தேவையில்லாமல் கதைக்காதே! ஒருவரின் நல்ல மனதை அறியாமல் கண்டபடி பேசாதே.” என்று கண்டிப்பான குரலில் தடுத்தாள் பவித்ரா.
தங்கையை கூட அவளை எதிர்த்துப் பேசும்படிக்கு ஆக்கிவிட்டாளே அந்த மித்ரா.
உள்ளம் கொதிக்க, “என்னடி நல்ல மனது? அண்ணா திரும்ப அவளை கட்டிக்கொண்டதுமே அம்மாவுக்கு அனுப்பும் காசு அரைவாசியாக குறைத்துவிட்டாளாம் அவள். அம்மா, அங்கே செலவுக்குக் காசில்லை என்று கத்திக் கொண்டிருக்கிறார். இவள்தான் நல்லவளா?” என்று கேட்டாள்.
“காசு அனுப்புவது அண்ணா. அது குறைந்தால் அண்ணாவைத்தான் கேட்கவேண்டும். அதை விட்டுவிட்டு அண்ணியை ஏன் நீ குறை சொல்கிறாய். அதோடு, இப்போ நானும் அங்கில்லை. இனி அவர்களின் சாப்பாட்டுச் செலவுக்கு மட்டும் தானே என்றெண்ணி அண்ணா குறைத்து அனுப்பி இருக்கலாம். இதையெல்லாம் ஒரு விஷயம் என்று நீயும் அம்மாவும் தூக்கிப் பிடிப்பதை நிறுத்து அக்கா.” என்றாள் பவித்ரா, திவிக்குட்டிக்கு ஒரு வாழைப்பழத்தை உரித்து உண்ணக் கொடுத்தபடியே.
“நீயும் நல்லாவே மாறிட்டடி. மாற்றிவிட்டார்கள்!” என்றாள் கவிதா குமுறலாக.
“இங்கே யாருமே மாறவில்லை. அப்படியேதான் இருக்கிறோம். ஆனால், நீயும் அம்மாவும் தான் மாறவேண்டியவர்கள். எப்போ பார் அண்ணாவையும் அண்ணியையும் கரித்துக் கொட்டிக்கொண்டு! அண்ணா பாவம் அக்கா. அவர் உனக்கோ எனக்கோ ஏதாவது குறை வைத்திருக்கிறாரா? அம்மா அப்பாவுக்கு? இல்லை தானே. பிறகும் ஏன் அவருக்கு பிடித்த வாழ்க்கையை வாழ விடுகிறீர்கள் இல்லை?” என்று கவலையோடு கேட்டவளின் மனதில், தங்களுக்குப் பிடித்ததை எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்யும் அண்ணாவுக்கு நாம் என்ன செய்தோம் என்கிற கேள்வி எழுந்தது.
அவரின் மனதை முடிந்தவரை காயப்படுத்தியிருக்கிறோம் என்பதை தவிர வேறு எதுவும் பதிலாய் கிடைக்காமல் போனதில் குன்றிப்போனாள் பவித்ரா.
தாயாய் தந்தையாய் தங்களை காத்தவனுக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்று யோசித்தவளுக்கு ஓர் எண்ணம் உதிக்கவும் தமக்கையையும் இழுத்துக்கொண்டு தமையனிடம் சென்றாள்.
அக்காவும் தங்கையும் ஒன்றாக சேர்ந்து வரவும், ஆண்கள் இருவரும் அவர்களை ஒருங்கே திரும்பிப் பார்த்தனர்.
“அண்ணா, உங்களிடம் ஒரு விஷயம் கதைக்கவேண்டும்.” என்றாள் பவித்ரா கீர்த்தனனிடம்.
‘இவள் எதைக் கதைக்கப் போகிறாள்?’ என்பதாக கவிதா பார்க்க, “என்னம்மா? சொல்லு!” என்றான் அவன் புன்னகையோடு.
“அத்தான், நீங்கள் நான் சொல்வதைக் கேட்டு கோபிக்கக் கூடாது..” என்று சேகரனிடமும் பீடிகை போட்டாள் பவித்ரா.
“நீ ஆரம்பிப்பதை பார்த்தாலே எனக்குப் பயமாகத்தான் இருக்கிறது. என்றாலும் பரவாயில்லை, சொல்!” என்று அவனும் இலகுவாகவே ஊக்கினான்.
“அதுவந்து.. அண்ணா.. அத்தான்..” என்று தடுமாறியவள், சட்டென முடிவு எடுத்தவளாக, “அண்ணா, இனிமேல் அம்மாவையும் அப்பாவையும் நானும் அக்காவும் பார்த்துக் கொள்வது என்று முடிவு எடுத்திருக்கிறோம்.” என்றாள் வேகமாக.
‘இதென்னடி அநியாயம்? நான் எப்போ சொன்னேன்?’ என்பதாக தங்கையை பார்த்து விழித்தாள் கவிதா.
“இது நல்ல விஷயம் தானே. இதற்கா அப்படி பீடிகை போட்டாய்?” என்றான் சேகரன்.
“புதிதாக ஏன் இந்த முடிவு?” என்று விசாரித்தான் தமையன்.
“அதுவாண்ணா.. இவ்வளவு காலமும் எங்களுக்காக நீங்கள் வாழ்ந்தது போதும். இனியாவது நீங்கள் உங்கள் குடும்பம், மனைவி, மகன் என்று மட்டும் வாழுங்கள். அக்காவும் நானும் என்ன ஊரிலா இருக்கிறோம்? வெளிநாட்டில் தானே. அம்மாவையும் அப்பாவையும் நாங்கள் இருவரும் பார்த்துக் கொள்கிறோம்.” என்றாள் பவித்ரா தெளிவாக.
அதைக்கேட்டுவிட்டு அவளைப் பாராட்டினான் சேகரன். “பார்த்தாயா கவி? உன்னைவிட சின்னவளாக இருந்தாலும் அவள் எப்படி யோசிக்கிறாள் என்று. இந்த எண்ணம் நமக்கே வரவில்லையே. இதை நான் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன்.” என்றான் அவன்.
கவிதாவோ ‘இவளும் எனக்குத்தானே குழிபறிக்க நிற்கிறாள்’ என்று பல்லைக் கடித்தாள்.
“அவள்தான் சின்னப்பிள்ளை என்னவோ சொல்கிறாள் என்றால், நீயுமா சேகரன்?” என்று சேகரனிடம் கேட்டுச் சிரித்த கீர்த்தனன் பவித்ராவிடம் திரும்பி, “அதெல்லாம் வேண்டாம். நீங்கள் இருவரும் உங்கள் குடும்பத்தோடு சந்தோசமாக வாழுங்கள். அதுவே எனக்குப் போதும். அம்மாவையும் அப்பாவையும் கடைசிவரை பார்த்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு.” என்றான்.

