அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் அவளை சமாதானப் படுத்த எண்ணி அறைக்குள் சென்றவனின் நடை, கைகளால் முகத்தை மூடியபடி அழுகையில் உடல் குலுங்கியவளைக் கண்டதும் ஒருகணம் நின்றது.
அடுத்த கணமே இரண்டெட்டில் அவளை அணுகி, “பவிம்மா.. சாரிடா..” என்றபடி அவளைப் பற்றித் தன்புறமாக திருப்ப, வெடுக்கென்று அவன் கையை ஆத்திரத்தோடு தட்டிவிட்டாள் அவள்.
“என்னைத் தொடாதீர்கள். நான்தான் உங்கள் பெண்டாட்டியே இல்லையே. பிறகு எதற்கு தொடுகிறீர்கள்? நீங்கள் ஒன்றும் உங்கள் அக்காவுக்காக என்னோடு வாழத் தேவையில்லை. இனியும் அந்தக் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம். போங்கள்.. எங்காவது போய்த் தொலையுங்கள்.” என்றவள், அவன் அவளை நெருங்க நெருங்க அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.
தன் வார்த்தைகள் அவளை எவ்வளவு தூரத்துக்குக் காயப்படுத்தி இருக்கிறது என்று விளங்க, வலுக்கட்டாயமாக அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் சத்யன்.
“சாரிடா.. உன் அம்மாமேல் இருந்த கோபத்தில் அப்படிச் சொல்லிவிட்டேன். தெரியாமல் வாயில் வந்துவிட்டது..” என்று கெஞ்சினான் அவன்.
ஆமாம்! பழக்கமற்ற பழக்கமாக கெஞ்சினான்!
அவளோ அவனிடமிருந்து திமிறத் தொடங்கினாள். அழுகையும் பெரிதாக வெடித்தது. “கோபம் வந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்வீர்களோ? மனதில் இருப்பதுதான் வாயில் வரும். உங்களுக்கு எப்போதுமே என்னைப் பிடிக்காது. நான்தான் விசரி மாதிரி உங்கள் பின்னாலேயே சுற்றினேன். எல்லாம் வீண்!” என்றபடி, அவனிடம் இருந்து அவள் விடுபடப் போராட,
“இல்லைமா. அப்படியில்லை. எனக்கு உன்னை நிரம்பவும் பிடிக்கும். என் செல்லம் தானே. அதுதான் சாரி சொல்லிவிட்டேனே. இனிமேல் இப்படிக் கதைக்கவே மாட்டேன். நம்பும்மா.” என்றான் அவன்.
அவளோ அவனது கெஞ்சல்களை கேட்கும் நிலையில் இல்லவே இல்லை!
“நீங்களும் வேண்டாம். உங்கள் சாரியும் வேண்டாம். விடுங்கள் என்னை!” என்று அவனிடமிருந்து விடுபடுவதிலேயே குறியாக இருந்தாள்.
அன்று, காதலே இல்லாமல் திட்டம் போட்டு அவளைத் தன்னிடம் வரவைத்தவன் இன்று நெஞ்சுமுட்ட நேசத்தை சுமந்துகொண்டா அவளை விடுவான்?
இன்னும் வாகாக, வலுக்கட்டாயமாக அவளைத் தனக்குள் கொண்டுவந்து, “எங்கே? என் முகத்தை பார்த்துச் சொல். நான் வேண்டாமா?” என்று அவள் முகத்தை நிமிர்த்திக் கேட்டான்.
நனைந்த இமைகளும், சிவந்த விழிகளும், கண்ணீர் தடத்தை சுமந்த கன்னங்களுமாக அவனை அதிர்வோடு நோக்கினாள் பவித்ரா. அதுநாள் வரை அவள் தேடிய காதலை, ஏங்கித் தவித்த நேசத்தை, சாகும்வரை அனுபவிக்கத் துடித்த அன்பையெல்லாம் விழிகளில் தேக்கி பார்த்தவனின் பார்வையில் ஒருகணம் கட்டுண்டுதான் போனாள்.
அடுத்த கணமே, ‘உன்னை என் மனைவியாகவே நினைக்கவில்லை’ என்ற அவனுடைய வார்த்தைகள் செவிப்பறையில் வந்து மோத, அதுகொடுத்த ஆக்ரோஷத்தோடு, “நீ எனக்கு வேண்டாம். போடா!” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.
அவளின் செயலை எதிர்பாராததில் இரண்டடி பின்னால் நகர்ந்தாலும் மனையவளின் செல்லக் கோபத்தை ரசித்துச் சிரித்தவன், அவளின் கரங்களைப் பற்றி இழுத்தான். அதை எதிர்பாராதவள் அவனோடு வந்து மோத, “நம் முதல் சந்திப்பு ஞாபம் இருக்கா?” என்று அவள் காதருகில் குனிந்து கிசுகிசுத்தான்.
பவித்ராவுக்கோ இரத்த நாளங்கள் எல்லாம் சிலிர்த்தது!
கன்னங்கள் செம்மையுற, அன்று அவனுடன் மோதியதையும், அதனால் தான் அனுபவித்த அவஸ்தைகளையும் எண்ணி இன்றும் வெட்கம் கொண்டாள். அந்த அழகு அவனை ஈர்க்க, தன்னை மறந்து சிவந்த அவளின் கன்னத்துக்குள் தன் இதழ்களை புதைத்தான் சத்யன்.
சொக்கிப்போனாள் பவித்ரா. அதுவரை அவளைப் போட்டு ஆட்டிப்படைத்த ஏமாற்றம், தோற்றுவிட்ட உணர்வு, துயர் அத்தனையும் வடிய அப்படியே அவன் தோளிலேயே பூங்கொடியென சரிந்தவளை தேக்குமரத் தேகம் கொண்டவன் வாகாக வாரியணைத்துக் கொண்டான்.
இருவருக்குள்ளும் சொர்க்கசுகம்! கடந்த கணத்துளிகளை காமமின்றி காதலோடு கடந்துகொண்டிருந்தனர்!
பெண்மையின் வனப்பையும் அதன் மென்மையையும் அவன் தேகம் உணர்ந்துகொண்டிருக்க, ஆண்மையின் திடகாத்திரத்தையும் திண்மையையும் அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
கடந்தது எவ்வளவு நேரமோ? கலைந்துகிடந்த அவளின் முடிக்கற்றைகளை அவன் உதடுகள் ஊதித் தள்ளிவிட, கண்மூடிக் கிடந்தவள் புருவங்கள் சுழித்துச் சிணுங்கினாள்.
சுழித்த புருவங்களை நீவி விட்டவனின் விரல்கள் மூடிக்கிடந்த அஞ்சனங்களை தடவி, மல்லிகை மொட்டு நாசியை வருடி செவ்விதழ்களை தொட, அதுவரை குறுகுறுத்துக் கொண்டிருந்தவள் பட்டென அவன் விரலை தன் கையால் தட்டிவிட்டாள்.
“கையால் தொடவேண்டாமா?” என்று குறும்போடு கேட்டான் சத்யன்.
“ம்ஹூம்!” என்று அவள் மருக்கும்போதே, தன் உதடுகளால் தொட்டிருந்தான் அவன்.
ஆனந்தமாய் அதிர்ந்தவளின் விழிகள் விரிய, அதற்காகவே காத்திருந்தவன் அழுத்தமாய் அவளது இதழ்களை முற்றுகையிட்டபடி அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்!
‘ராஸ்கல்! முத்தமிட்டுக்கொண்டே கண்ணடிக்கிறான்!’ என்று மனதில் செல்லமாய் வைதவளின் விழிகள் அவன் உதடுகள் செய்த அடாவடியில் மயங்கிக் கிறங்கின!
நிமிடத் துளிகள் பலதைக் கடந்து சென்றபின் அவளை விடுவித்தபோது, நெஞ்சின்மேலே கைகள் இரண்டையும் பிடித்தபடி வேக வேகமாக மூச்சுக்களை இழுத்துவிட்டாள் பவித்ரா.
அவனைப்பார்த்து அவள் முறைக்க அவனோ, “தொட்டவிதம் பிடித்திருக்கா?” என்றான் குறுஞ்சிரிப்போடு.
“இன்னும் கொஞ்சம் என்றால் மூச்சுக் காற்றில்லாமல் நான் செத்தே போயிருப்பேன். இதில் தொட்டவிதம் பிடித்திருக்காவா? ராஸ்கல்!” என்றவள் அவனை மொத்தத் தொடங்கவும், சத்தமாக வாய்விட்டுச் சிரித்தபடி,
சந்தோசமாக மனைவியின் அடியை வாங்கிக்கொண்டான் சத்யன்.

