தனிமைத் துயர் தீராதோ 46 – 4

அவனின் இழுப்புக்கு இசைந்தபோதும்,“இன்னொரு சந்தேகம் ஜான்..” என்றாள் அவன் கையை சுரண்டி.

 

இப்போது சத்யன் முறைத்தான். “உன் சந்தேகத்தை எல்லாம் பிறகு கேள். முதலில் என் சந்தேகங்களை தீர்க்க விடு!” என்றவனின் கைகள் அவளின் அழகு மேனிக்குள் புதையல் தேடி அலைந்தது.

 

அவன் கைகளை பிடித்துத் தடுத்தபடி, “உங்களுக்கு யார் ஜான் என்று பெயர் வைத்தது?எல்லோரும் சத்தி என்றுதானே கூப்பிடுகிறார்கள்.” என்றவளை இதெல்லாம் ஒரு சந்தேகமா என்பதாக முறைத்தான் சத்யன்.

 

அந்தப் பார்வையை உணர்ந்து, “கேள்வி கொஞ்சம் கேவலமா இருக்குத்தானே..” என்று அசடு வழிந்தாள் அவள்.

 

“கொஞ்சமில்லை.. நிறைய!” என்றான் அவன் கடுப்புடன்.

 

“கொஞ்சமோ நிறையவோ பதிலை சொல்லுங்கள் ஜான்…” என்று சிணுங்கினாள் அவள்.

 

அந்தச் சினுங்கல் கூட அவனை அவஸ்தைக்குள் உள்ளாக்க, “ஜேர்மன்காரர்களுக்கு சத்யன் என்கிற பெயர் வாய்க்குள் நுழையாது. என் பெயரின் கடைசியில் வரும் ‘யன்’ ஐ அவர்களுக்கு வசதியாக ஜான் என்று மாற்றிவிட்டார்கள். கல்லூரி, பாடசாலை மூலம் என்னை தெரிந்தவர்களுக்கு நான் ஜான். இப்போவாவது உன் சந்தேகம் தீர்ந்ததா?” என்று கேட்டவன் மீண்டும் தன் தேடலை ஆரம்பிக்க, “பவித்ரா..” என்று கவிதா அழைக்கும் குரல் கேட்டது.

 

சத்யனின் காதை அது எட்டாத போதும் பவித்ராவின் காதில் எட்டியது. “ஜான், அக்கா கூப்பிடுகிறார்..” என்றாள்.

 

“இப்போ வரமுடியாது என்று சொல்.” அவளின் கழுத்து வளைவுக்குள் இருந்து பதில் வந்தது.

 

அதெப்படி சொல்ல முடியும்? நாளைக்கு காலையில் யமுனா வீட்டு விசேசத்துக்கு கிளம்புகிறவளிடம் இன்றைக்கு நேரமில்லை என்று சொல்ல முடியுமா?

 

“என்னவென்று கேட்டுவிட்டு வருகிறேனே. ஏதாவது முக்கிமாக இருக்கப் போகிறது.” என்றாள் அவள்.

 

“அதைவிட இது முக்கியம்.” என்றவன் அவளுக்குள் இன்னுமின்னும் புதைய, கவிதா திரும்பவும் அழைத்தபடி மேலே வருவது கேட்க பவித்ராவுக்குள் பதட்டம் தொற்றிக்கொண்டது.

 

“ப்ளீஸ்பா. அக்கா மேலே வருகிறாள். இப்போது என்னை விடுங்கள். பிறகு வருகிறேன். என் செல்லம் தானே..” என்று அவள் கெஞ்சிக் கொஞ்ச, அவனோ அவளது நிலை புரிந்தாலும் மோகம் கொடுத்த முறுக்கிலிருந்து மீள முடியாமல் அவளை முறைத்தான்.

 

“என்னடா முறைப்பு இது? என்னவோ இவ்வளவு நாளும் என்னை விட்டு பிரிந்தே இருக்காதவன் மாதிரி. இவ்வளவு நாளும் நான் ஒருத்தி இருக்கிற நினைப்பே இல்லாமல் இருந்துவிட்டு.. அதுவும் அன்றைக்கு இதே கட்டிலில் நான் படுத்திருக்க, எங்கேயோ முகத்தை திருப்பிக்கொண்டு நின்றுவிட்டு இன்றுமட்டும் என்ன கொஞ்சல் வேண்டிக்கிடக்கு?” என்றாள் கடுப்புடன்.

 

அவனோ “அன்றைக்கா.. அது இங்கே.. இங்கே..” என்று, அன்று எங்கெல்லாம் அவளின் உடலின் பாகங்கள் தெரிகிறது என்று அவள் வெட்கினாளோ அங்கெல்லாம் தாராளமாக தன் கையால் தொட்டுக் காட்டி அவளை நெளியச் செய்தவன், “அதையெல்லாம் பார்த்தால் நல்ல பிள்ளையாக இருக்கிற நான் கெட்டபிள்ளை ஆகிவிடுவேனோ என்கிற பயத்தில் பார்க்கவில்லை.” என்றான்.

 

அப்போ.. அன்றைக்கே கணவன் அவளிடம் தடுமாறி இருக்கிறான். உள்ளம் துள்ளினாலும், “நீயாடா நல்லவன்? மகா கள்ளன்!” என்றவள், அவன் அசந்த நேரம் பார்த்து அவனைத் தள்ளிவிட்டு எழுந்து ஓடினாள்.

 

ஒருகணம் ஏமாற்றத்தோடு அவளை பார்த்தாலும், “மாட்டுவாய் தானே. அப்போ இருக்கு உனக்கு!” என்று பொய்யாக கருவியவனின் உள்ளம் எல்லாம் துள்ளலே நிறைந்திருந்தது.

 

பவித்ரா கவிதாவோடு சென்றுவிட, தனியே இறங்கி வந்த சத்யனிடம், “உங்கள் எல்லோராலும் நான் கஷ்டப்பட்டதாக பவி நினைக்கிறாள் போல சத்தி. அதனால் தான் அம்மா அப்பாவுக்கு காசு அனுப்புவதாகச் சொல்கிறாள். எனக்கு அப்படி எதுவும் கிடையாது. உங்கள் எல்லோரினதும் சந்தோசத்தில் தான் என் சந்தோசம் அடங்கியிருக்கிறது. நானே அம்மா அப்பாவை பார்த்துக் கொள்வேன். நீ இதைப்பற்றி எதுவும் யோசிக்காதே.” என்றான் கீர்த்தனன்.

 

தங்களையும் தன் கூடப் பிறந்தவர்களையும் வேறாக நினைக்காத அவனின் அன்பில் உள்ளம் நெகிழ, “அத்தான், உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டான் சத்யன்.

 

கீத்னுக்கு சிரிப்புத்தான் வந்தது. “இதே வாய் தானேடா என்மேல் என்னென்னவோ பழியெல்லாம் போட்டது?” அவனை சகஜமாக்க கீர்த்தனன் வேண்டுமென்றே சொன்னான்.

 

“அது நாறவாய் அத்தான். இது நல்லவாய்.” என்றான் சத்யனும் சளைக்காமல்.

 

“நன்றாக சமாளிக்கிறாய்டா..” என்று கீர்த்தனன் நகைக்க, “உண்மையாகவே உங்கள் அம்மாவுக்கு ஒரு ரூபாய் கொடுக்கவும் எனக்கு விருப்பமில்லை அத்தான். ஆனால்.. என் பவிக்காக..” என்றவனின் முகம் சட்டெனச் சிவந்துபோயிற்று.

 

சின்னச் சிரிப்போடு சமாளித்துக்கொண்டு, “உங்கள் தங்கைக்காக அவளின் சந்தோசத்துக்காக, அவர்கள் அவளின் அம்மா அப்பா என்பதற்காக இனிமேல் அவர்களை நான் பார்த்துக் கொள்வேன். அதனால் பவி சொன்னதுதான் என் பதிலும்.” என்றான் சத்யன்.

 

ஒன்றுமே சொல்லவில்லை கீர்த்தனன். சொல்ல வாய் வரவில்லை என்பதுதான் உண்மை. காசு விஷயத்தை மீறிக்கொண்டு ‘என் பவி’ என்று சொல்லிவிட்டு ‘உங்கள் தங்கை’ என்று அவன் மாற்றியதிலேயே மகிழ்ந்தது அவன் உள்ளம். தங்கை சத்யனின் மனதில் வந்துவிட்டாள். அதுவே போதுமே!

 

அதற்குமுன்னால் பணமெல்லாம் ஒரு விசயமா என்ன?

 

பாசத்தோடு சத்யனை அணைத்துக்கொண்டவன், “எதையாவது செய்ங்கடா..” என்றான்.

 

 

அடுத்தநாள் காலை கீதன் வெளியே சென்றிருந்தான். சேகரன் சற்று நேரத்தில் யமுனா வீட்டுக்கு புறப்படுவதால் காருக்கு பெட்ரோல் நிரப்பச் சென்றிருந்தான்.

 

error: Alert: Content selection is disabled!!