“இப்போ என்னதான்டி உனக்குப் பிரச்சனை? சும்மா அவனைக் குறை சொல்லாமல் போய் பார்க்கிற வேலையை பார்!” என்று அவன் ஒரு அதட்டல் போடவும், அதை எதிர்பாராதவள் அதிர்ந்துபோய் விழித்தாள்.
உருகிப்போனான் கீர்த்தனன். அவளை அள்ளியணைத்து கொஞ்சிக் குலாவ உடலும் உள்ளமும் துடித்தது. இங்கேயே நின்றால் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்று நன்றாகவே விளங்க, சட்டென அவளிடமிருந்து பார்வையை திருப்பி, மகனை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல அவன் கதவைத் திறந்தபோது, வீட்டுத் தொலைபேசி அழைத்தது.
யார் என்று பார்க்கப் போனாள் மித்ரா.
“சொல்லுங்கள் அம்மா..” என்று அவள் சொன்னதிலேயே அழைத்தது ஈஸ்வரி என்று விளங்க, அங்கேயே நின்று மனைவியை பார்த்தான்.
‘அந்த அம்மாள் இலகுவில் இங்கே அழைக்கமாட்டாரே..’ என்று அவன் நினைக்கும்போதே, “என்னம்மா சொல்கிறீர்கள்?” என்று பதறினாள் மித்ரா.
தொடர்ந்து, “அழாதீர்கள் அம்மா. நான் இதோ.. இதோ பத்து நிமிடத்தில் வருகிறேன்..” என்று அவள் அவசரமாகச் சொல்லிவிட்டு தொலைபேசியை வைக்கவும், ஏதோ பிரச்சினை என்றுணர்ந்தான் கீர்த்தனன்.
மகனை அறைக்குள் போய் காரை ஓட்டுமாறு சொல்லிவிட்டு அவளிடம் விரைந்தான். என்னவோ ஏதோ என்று மனம் பதறினாலும், அதை வெளியே காட்டாமல், “எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் மித்து. பதறாமல் என்னவென்று சொல்லு?” என்று இதமாகக் கேட்டான்.
அதுவரை கோபத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு இருந்தவனால் அவள் கலங்கியதும் அது முடியாமல் போயிற்று!
“அப்..அப்பாவுக்கு கான்சர் கட்..டி போல என்று டாக்டர்கள் சொன்னார்களாம்..” என்றபோது விழிகளில் நீர் திரண்டது அவளுக்கு.
அவனும் இதை எதிர்பார்க்கவில்லைதான். ஆனாலும், அந்த மனிதர்மேல் பாவம் என்கிற எண்ணமோ பரிதாபமோ தோன்றவில்லை. அதோடு மனைவி அழுவதும் பிடிக்கவில்லை. ஆதரவாக அவளை அணைத்து முதுகை இதமாக தடவிக்கொடுத்தாலும், “அதற்கு நீயேன் அழுகிறாய்?” என்று நிதானமாகக் கேட்டான்.
“இதென்ன கேள்வி கீதன்? அவர் என் அப்பா. அவருக்கு ஒன்று என்றால் எனக்கு அழுகை வராதா?”
“உன்னை மகளாக என்றைக்காவது அவர் நினைத்திருக்கிறாரா? இல்லை, உனக்காக ஏதாவது செய்துதான் இருக்கிறாரா?” அந்த நேரத்தில் பேசும் பேச்சல்ல என்று உணர்ந்தாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை அவனால்.
அந்தக் கேள்வியில் இருந்த உண்மையில், கணவனின் கோபத்தில் இருக்கும் நியாயத்தில் அவளால் உடனடியாகப் பதில் சொல்ல இயலாமல் போயிற்று!
ஆயினும், “அதற்காக அவருக்கு ஒன்று என்று தெரிந்தபிறகும் போகாமல் இருக்க முடியாது கீதன். அம்மா பாவம்; அழுகிறார். வித்யாவுக்கு இது தெரிந்ததோ அவள் அழுதே கரைந்து விடுவாள். அவள் வீட்டுக்கு வரும்போது நான் அங்கே இருந்தால் தான் அவளைச் சமாளிக்க முடியும்.” என்றாள்.
“அப்போ நேர வித்தியின் கல்லூரிக்குப் போ. அவளைக் கூட்டிக்கொண்டு இங்கே வா.” என்றான் கீர்த்தனன்.
“ஏன்? நான் அம்மா வீட்டுக்குப் போனால் என்ன? அவருக்கும் உதவியாக இருக்குமே.”
“என்ன உதவி வேண்டிக்கிடக்கிறது? அந்தாளுக்கு கட்டி என்றாலும் இன்னும் நடமாட முடியும் தானே. கார் இருக்கிறது, அதோடு உன் அம்மாவுக்கும் மொழி தெரியும். பிறகென்ன?”
தடுத்துத் தடுத்து அவன் பேசுவதிலேயே அவள் அங்கே போவது அவனுக்குப் பிடிக்கவில்லை என்று விளங்கியது. ஆனால், போகாமல் இருக்க முடியாதே.
“ப்ளீஸ் கீதன், நான் போனால் அம்மாவுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். போய்விட்டு வருகிறேனே.” என்று அவள் கெஞ்சிக் கேட்டபோது மறுக்க முடியவில்லை அவனால்.
விருப்பமின்றியே சம்மதித்தான்!
சத்யனும் அதை அறிந்ததும் துடித்துத்தான் போனான். அப்பாமேல் அவனுக்கும் நிறையக் கோபம் தான். தமக்கைக்கு அவர் இழைத்த தீங்குகளை என்றைக்குமே அவனால் மன்னிக்கவே முடியாதுதான். ஆனாலும்,அவருக்கு ஒன்று என்றதும், செய்வதறியாது நின்றவனை பவித்ரா தான் தேற்றும்படியாயிற்று! உடனேயே மனைவியுடன் அவரைப் பார்க்கக் கிளம்பினான்.
வைத்தியசாலையில் சண்முகலிங்கத்தை பார்த்துவிட்டு தாய் வீட்டுக்கு வந்த சத்யனையும் பவித்ராவையும் அன்று மாலையே வீட்டுக்கு திருப்பி அனுப்பிய மித்ராவால் அன்று மட்டுமல்ல அடுத்தநாள் கூட வரமுடியாமல் போயிற்று! அந்தளவுக்கு உடைந்து போயிருந்தார் ஈஸ்வரி.
விருப்பமில்லாமல் தான் கீர்த்தனன் அவளை அனுப்பியே வைத்தான். இதில், அன்றே திரும்பவில்லை என்றதும் கத்துவானோ என்றெண்ணி உள்ளூர அஞ்சியவள், அவனுக்கு அழைத்து அதைச் சொன்னபோது எதுவும் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டிருந்தான் கீர்த்தனன்.
மித்ராவுக்கோ அவனது கோபத்தை அறிந்தும் வீட்டுக்குச் செல்லமுடியாத நிலை!
அந்தளவுக்கு ஒடுங்கிப்போய் இருந்தார் ஈஸ்வரி. மித்ரா எப்போதும் அவர்களோடு இருந்ததில்லை தான். ஆனால், சத்யனும் திருமணத்தின் பின்னர் மித்ரவோடு போனது அவருக்குள் பெரும் பாதிப்பை உருவாக்கியிருந்தது. அதோடு, லீவு கிடைக்கும் நேரமெல்லாம் அக்கா அண்ணா என்று வித்யாவும் ஓடிவிடுவதில் பெருமளவில் மனதளவில் தனிமை பட்டுப் போயிருந்தவர், அந்த வயோதிக காலத்தில் முற்றிலுமாக கணவரையே தங்கியிருந்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை!
அப்படியிருக்க அந்தக் கணவருக்கும் ஒன்று என்றதும் அதுவும் அவருக்கு பாரிய நோய் இருக்கலாம் என்கிற கிலியில் முற்றாக உடைந்தே போயிருந்தார்.
மித்ராவுக்கு வித்யாவை தேற்றுவதே பெரிதாக இருக்க, இதில் அன்னையை விட்டுவிட்டு சிலமணி நேரங்கள் கூட அரக்க முடியவில்லை. முற்றிலுமாக அவளையே தங்கியிருந்தார். அழும் தங்கையையும், கலங்கித் தவிக்கும் தாயையும் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட்டுப் போக முடியாதே!

