தனிமைத் துயர் தீராதோ 47 – 3

இது எல்லாவற்றையும் விட சண்முகலிங்கத்தின் நிலைதான் மிக மோசமாகப் போயிற்று! திணை விதைத்தவன் தினையை அறுப்பான்! வினை விதைத்தவன் வினையை தான் அறுப்பான்! அந்தவகையில் சண்முகலிங்கம், அன்று குடிபோதையின் துணையோடு ஆடிய ஆட்டங்களுக்கு அந்தக் குடியே அவரின் உயிருக்கு குழி பறிக்கக் காத்திருந்தது.

 

வயிற்றில் கட்டி என்றார்கள்; அது கான்சராக இருக்குமோ என்று சந்தேகமும் பட்டார்கள். அது கான்சர் தானா என்கிற உறுதி கிடைக்க முதலே, அந்த சந்தேகமே அவரின் உயிரை மெல்ல மெல்ல குடிக்கத் தொடங்கிற்று!

 

ஆடிய ஆட்டமெல்லாம் அடங்க, வைத்தியப் பரிசோதனைகளின் முடிவுக்காகக் காத்திருந்தவருக்கு கடக்கும் ஒவ்வொரு நாட்களும்.. ஏன் கணத்துளிகளும் கூட நரகமாய் போயிற்று! மரணபயத்தை தினம் தினம் அனுபவித்தார்.

 

சத்யன் தினமும் வந்து ஹாஸ்பிட்டலில் தந்தையையும், வீட்டில் தாயையும் பார்த்துவிட்டுப் போனான். பவித்ரா வீட்டிலிருந்து தமையனுக்கும் கணவனுக்குமான சமையலையும் கவனித்துக்கொண்டு சந்தோஷையும் பார்த்துக்கொண்டாள். மித்ராவோ வைத்தியசாலைக்கும் வீட்டுக்கும் என்று அலைந்தாலும், அந்த இரண்டு நாட்களிலேயே மகனைப் பாராமல் தவித்துப் போனாள்.

 

தன் நிலையை சொன்னால் கணவன் விளங்கிக்கொள்வான் என்று நம்பினாலும், அவனது கோபத்தில் சத்யனிடம் மகனைக் கொண்டுவந்து காட்டு என்று சொல்லக்கூட தயக்கமாயிருந்தது.

 

அன்று, மதியநேரம் ஓரளவுக்குத் தெளிந்திருந்தாலும் சோர்ந்துபோயிருந்த தாயை கட்டாயப்படுத்தி உறங்க வைத்திருந்தாள். வித்யாவும் கல்லூரி சென்றிருந்தாள்.

 

சமையலை முடித்து, வீட்டையும் ஒதுக்கி முடித்தவளுக்கு செய்வதற்கு என்று வேலை எதுவும் இல்லாமல் போனதில், ஒரு காலத்தில் சகோதரர்கள் மூவருக்கும் என்றிருந்த அறையில், ஜன்னலோரமாக நாற்காலியை இழுத்துப் போட்டுவிட்டு அமர்ந்தவள், இன்னொரு நாற்காலி மீது கால்களை தூக்கிப் போட்டுக்கொண்டாள்.

 

வெளியே தெரிந்த வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தவளின் உள்ளத்தில் மகனைப் பார்க்கும் தவிப்பே மிதமிஞ்சி இருந்தாலும், அதையும் தாண்டிக்கொண்டு அந்த மகனுக்குத் தன்னை தாயாக்கியவனின் நினைவுகளே அவளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.

 

அன்று, ‘எதையுமே என்னிடம் சொல்லமாட்டாயா’ என்று கேட்டுத் தவித்தவன் பட்ட பாட்டையும், துடித்த துடிப்பையும், அவன் கண்களில் தெரிந்த பரிதவிப்பையும் எண்ணிப் பார்க்கையில், இன்றும் ஆனந்தத்தில் விழியோரங்கள் மெல்ல நனைந்தன.

 

இந்த அன்பு கிடைக்க போன ஜென்மத்தில் அல்ல ஜென்ம ஜென்மமாய் அவள் கொடுத்துத்தான் வைத்திருந்திருக்க வேண்டும். ஆனால்.. அந்த அன்பானவன் அங்கே அவள் மீது கோபத்தோடு இருக்கிறானே.

 

‘என் நிலையை சொன்னால் கட்டாயம் விளங்கிக்கொல்வான்!’ உறுதியாக நம்பினாள்.

 

என்னதான் சண்முகலிங்கம் அவளுக்கு பெற்ற தந்தை இல்லை என்றாலும், அவளுக்கு அவர் எந்த நல்லதுமே செய்ததில்லை என்றாலும் அவரால்தானே அருமையான ஒரு தம்பியும் தங்கையும் அவளுக்குக் கிடைத்தார்கள்.

 

இந்த சத்யன் அவளுக்காக எவ்வளவு செய்திருக்கிறான்? கிட்டத்தட்ட அவனுடைய வாழ்க்கையையே பணயம் வைத்து அவளைக் கணவனோடு சேர்க்கப் போராடினானே.. இன்று வரையிலும் அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறானே!

 

இந்த வித்யா, சிறு பெண்ணாக இருந்தும் தன் மீது ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து அன்பைப் பொழியும் கீர்த்தனனிடம் அவளுக்காக எத்தனை தடவைகள் நியாயம் கேட்டிருப்பாள்? சத்யனும் வித்யாவும் இல்லாவிட்டால் இன்று மித்ரா என்கிற ஒருத்தி இருந்திருப்பாளா?

 

அதோடு அவளது நல்ல மனது, அவரை என்றைக்குமே தன் தந்தையாகவே எண்ணியது.

 

இப்படி தன் சிந்தனைகளை எங்கெங்கோ விட்டபடி இருந்தவளின் கால்களை, “அம்மா..” என்றபடி ஓடிவந்து கட்டிக்கொண்டான், அவளது அன்புப் புதல்வன்.

 

எதிர்பாராமல் மகனை அங்கே கண்டவள், ஆனந்த அதிர்ச்சியில் ஒருநொடி திக்குமுக்காடிப் போனாள்.

 

அடுத்த நொடியே, “சந்துக்குட்டி…!” என்று அவனி வாரியணைத்து தூக்கிக்கொண்டாள்.

 

“எப்படிக் கண்ணா வந்தாய்? மாமா கூட்டிக்கொண்டு வந்தானா?” என்று மகனிடம் கேட்டுக்கொண்டே வாசலைப் பார்த்தவள், அறைக்கதவு நிலையில் கைகளைக் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றிருந்த கணவனைக் கண்டதும் நம்பமுடியா அதிசயத்தைக் கண்டவள் போல், விழிகளை விரித்தாள்.

 

அவளையே போகவேண்டாம் என்றவன்! வரமுடியவில்லை என்றதும் பதிலின்றி அழைப்பை துண்டித்தவன்! அந்த வீட்டு வாசல்படியையே மிதிக்க விரும்பாதவன்.. மகனையும் தூக்கிக்கொண்டு வந்திருக்கிறான்.

 

ஏன்?

 

அவளைத் தொடர்ந்து சிந்திக்க விடமால், “அப்பாவோட வந்தேன்..” என்றபடி அவளின் கழுத்தைக் கட்டிக்கொண்டான் சின்னவன்.

 

அப்போதும் தாய் தன்னைக் கொஞ்சாமல் எங்கோ பார்ப்பதைக் கண்டு, அதைக் கணமும் அனுமதிக்க மறுத்து அவளின் முகத்தை தன்னை நோக்கித் திருப்பினான் அவளின் மாயக்கண்ணன். மகனின் பாசப்போராட்டத்தை உணர்ந்தவளுக்கு அவனும் தன்னைக் காணாமல் ஏங்கியிருக்கிறான் என்று தெரிய பாசத்தில் விம்மியது பெற்றமனது!

 

அவன் கேசத்தைக் கலைத்துவிட்டபடி, “அம்மாவை பார்க்க அப்பாவோடு வந்தானா என் செல்லம்.” என்று கேட்டவள்,

 

“ம்ம்.. ஆமா..” என்று தலையசைத்து சிரித்தவனை நெஞ்சார அணைத்து அவன் முகமெங்கும் தன் பாச முத்திரைகளை பதித்தாள்.

 

இரண்டுநாள் பிரிவை, முத்தமழை பொழிந்து தீர்த்துக் கொண்டிருந்தாள்.

 

தனக்காக வந்திருக்கிறான் கணவன் என்று தெரிந்ததும், நேசம் பொங்கும் விழிகளால் அவள் அவனைப் பார்த்தபோது, அவனோ மழைக்கு ஏங்கும் சாதகப் பட்சியாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்!

 

தவித்துப்போனாள் மித்ரா. நொடியும் தாமதிக்காது ஓடிப்போய், அவனை மார்போடு சேர்த்தணைத்து, “என் கண்ணனுக்கு என்ன ஏக்கம்?” என்று கேட்டு இதழ் முத்தங்களை அவன் முகமெங்கும் பதிக்க உடலின் ஒவ்வொரு செல்லும் துடியாய் துடித்திற்று!

 

error: Alert: Content selection is disabled!!