தனிமைத் துயர் தீராதோ 47 – 5

இரத்தமென முகம் சட்டெனச் சிவக்க, துடிக்கும் இதழ்களை மெல்ல அசைத்து, “த..ம்பி இ..ருக்கிறான்.” என்று தடுமாறினாள் மித்ரா.

 

“அதனால்தான் தப்பித்தாய். இல்லையோ எனக்கு இருக்கிற கோபத்துக்கு.” என்றவன் சொல்லாமல் விட்டதை வெட்கம் கெட்ட அவன் விழிகள் அப்பட்டமாகச் சொல்லின!

 

‘விலகுகிறான் இல்லையே..’ இன்பமான வலியை தாங்கமுடியாமல் அவள் தவிக்க, அவளைத் தவிக்கவிட்டது போதும் என்று எண்ணினானோ என்னவோ அவனும் விலகியமர்ந்தான்.

 

அப்போதும் அவன் முன்னால் இலகுவாக இருக்க முடியாமல் நெளிந்தவள், அருந்திமுடித்த கப்புகளை எடுத்துக்கொண்டு வேகமாக அந்த அறையை விட்டே ஓடினாள்.

 

கீர்த்தனனின் இதழ்களில் திருப்தியான ஒரு புன்னகை அரும்பியது!

 

கப்புகளை அடுப்படியில் வைத்துவிட்டு வந்தவளை அழைத்தார் ஈஸ்வரி.

 

“என்னம்மா?”

 

“உன் மகனும் புருசனும் நீயில்லாமல் எல்லாவற்றுக்கும் கஷ்டப்படுவார்கள். அதனால் நீயும் அவர்களோடு போ.” என்றார் அவர்.

 

“ஏ..ன் அம்மா?” தானும் கணவனும் பேசிக்கொண்டதை அம்மா கேட்டிருப்பாரோ என்று நினைத்ததும் தடுமாறியது அவளுக்கு.

 

“இங்கே இப்போதைக்கு நாம் செய்ய ஒன்றும் இல்லையேம்மா. சும்மாதானே இருக்கிறோம்.” என்றார் அவர்.

 

“இல்லைமா. அது…” என்றவளை நெருங்கி அவளின் கன்னத்தை தொட்டார் ஈஸ்வரி.

 

திகைத்துப்போய் மித்ரா பார்க்க அவரின் கண்கள் மெலிதாகக் கலங்கியது. தான் ஒரு தாயாக அவளுக்கு எதுவுமே செய்யாதபோதும், தன் கணவன் அவளுக்கு கெடுதலே செய்தபோதும் அவருக்கு ஒன்று என்றதும் முதலாவது ஆளாக ஓடிவந்தவள் அவள் தானே.

 

சத்யனும் வந்து பார்த்துக்கொண்டான் தான். ஆனால், ஆண்பிள்ளைக்கு அன்னையின் மனதை முற்றிலுமாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. மித்ராவோ பெண்ணுக்குப் பெண் துணை என்பதுபோல் அவருக்கு ஆதரவாக இருந்தாள். ஆனால், அந்த ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாமல் அவர்தான் குன்றிக் குறுகிப் போனார்! செய்த குற்றங்கள் அவரைக் குத்திக் கிழித்தது.

 

தன் வீட்டைப் பார்க்காமல், கணவனைக் கவனிக்காமல், சின்னக் குழந்தையை கூட விட்டுவிட்டு வந்து தன்னைத் தாயாக இருந்து கவனிக்கும் அவளுக்கு தான் செய்தவைகள் எல்லாம் நினைவில் வர, அவளின் கையை பற்றிக் கதறிவிட, தன் மனத்துயரைக் கொட்டிவிடத் துடித்தார். முடியவில்லை அவரால்!

 

அதுநாள் வரை இயல்பாக அவளோடு கதைத்தறியாதவருக்கு இன்று எதையுமே இயல்பாக கதைக்க முடியவில்லை. தொண்டைக்குள் மீன்முள்ளு வந்து சிக்கியதுபோல் வார்த்தைகள் சிக்கிக்கொண்டன!

 

“என்னம்மா?” என்று, அவரின் கலக்கமறிந்து கையை பற்றிக் கேட்டாள் மித்ரா.

 

அவளையே சிலகணங்கள் பார்த்த ஈஸ்வரி, ஒன்றுமில்லை என்பதாக தலையை அசைத்து ஒரு பெருமூச்சை இழுத்து வெளியேற்றினார். காலம் கடந்து எதையும் கதைப்பதில் பலனில்லை என்று உணர்ந்தாரோ என்னவோ, விழிகளை ஒருமுறை மூடித்திறந்துவிட்டு, “உன்னை விட்டால் எனக்கும் வேறு யார் இருக்கிறார் சொல்லு? அதனால் ஏதும் தேவை என்றால் உன்னைத்தான் கூப்பிடுவேன். அதனால் ஒன்றும் யோசிக்காமல் போம்மா.” என்றவருக்கு எவ்வளவோ அடக்கியும் முடியாமல் விழிகள் கலங்கியது.

 

தாய் தந்தையை எண்ணித்தான் கலங்குகிறார் என்று எண்ணிய மித்ரா பாசத்தோடு அவரை அணைத்துக்கொண்டாள். “அழாதீர்கள் அம்மா. அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது. இன்றைக்கு விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறிவிட்டது என்று தெரியும் தானே. எப்படியும் அப்பாவை குணமாக்கிவிடலாம். ஒன்றுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறோம். அவரை அப்படியே விட்டுவிடுவோமா என்ன? அதனால் நீங்கள் கவலைப்பட்டு உங்கள் உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல், வித்தியையும் பார்த்துக்கொண்டு இருங்கள். நான் ஒவ்வொரு நாளும் வேலை முடிந்ததும் இங்கே வந்துவிட்டுப் போகிறேன். சரியா?” என்றவளை குளமாகிவிட்ட விழிகளோடு அனுப்பிவைத்தார் ஈஸ்வரி.

 

 

error: Alert: Content selection is disabled!!