தனிமைத் துயர் தீராதோ 49 – 1

அன்று அஞ்சலியின் பிறந்தநாள். இரவிரவாகத் தூக்கமில்லை மித்ராவுக்கு. அதற்குக் காரணம் அஞ்சலியின் பிறந்தநாளுக்கு அணிவதற்கு என்று முதல்நாள் கணவன் வாங்கிக் கொடுத்திருந்த சேலை!

 

ஒருகாலத்தில் அவன் சேலை வாங்கித் தருவதும், அதை அவள் அணிவதும், அதன் பிறகு நடக்கும் இனிமையான நிகழ்வுகளும் என்று பழைய நினைவுகள் அவளை புரட்டிப்போட்டன!

 

இது ஒருபக்கம் என்றால், அவளை நெருங்க நினைக்கும் கணவனிடம் விலகி நிற்பதும், அவனை சேரத் துடிக்கும் மனதை அடக்கமுடியாமல் தவிப்பதும் என்று பெரும் சித்ரவதையை அனுபவித்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

 

ஒழுங்கான உறக்கம் இல்லாமல் போனதில் காலையில் எழுந்ததில் இருந்தே ஒருவித சோர்வு அவளை ஆட்டிப்படைத்தது. ஆயினும், ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் கணவனின் பார்வை தன்மேல் விழுவதை கவனிக்காமலில்லை. இருந்தபோதிலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் நடமாடினாள்.

 

கீதனும் அதை அறிவான். தான் பார்ப்பதை அறிந்தும் அவள் ஏதும் அறியாதவள் போல் நடமாடுவதை காண்கையில் மெல்லிய கோபம் கூட உதித்தது. இப்படியே இன்னும் எத்தனை நாட்களை கடத்தப் போகிறாள்? வாயை மூடிக்கொண்டு இருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா?

 

தானும் அவளுக்கு போதிய அவகாசம் கொடுத்துவிட்டதாகவே எண்ணியவனுக்கு, ஒருபக்கம் சலிப்பாக இருந்தது என்றால் மறுபக்கம் என்னடா வாழ்க்கை இது என்றிருந்தது.

 

அவனும் சாதாரண ஒரு மனிதன். எல்லோரைப் போலவும் ஆசாபாசாங்கள் நிறைந்தவன். அவனுக்கும் தான், தன் இளம் மனைவி, அழகான குழந்தை என்று சொந்தங்கள் கூட சந்தோஷ வாழ்க்கை வாழத்தான் ஆசை. ஆனால்.. ஒரு நெடிய மூச்சொன்று அவனிடத்தில் கிளம்பியது.

 

அவளை இரண்டாம் முறையாக மணந்தபோது, அவளும் மகனும் அருகில் இருப்பதே போதுமானதாக இருந்தது உண்மைதான். ஆனால் இன்றோ அதற்கும் மேலாக மனைவி மனைவியாக அவனுக்குத் தேவைப்பட்டாள். தாயாக! தாரமாக! அனைத்துமாக!

 

இப்படி மாறுபட்ட சிந்தனைகளுடன் இருவருமே அன்றைய நாளைக் கடத்த, மாலைப்பொழுதும் வந்தது. சத்யனுக்கு ஏதோ வேலை என்றதில், பவித்ரா வந்து, “அண்ணா, நானும் உங்களோடு வருகிறேன். இவர் பிறகு அர்ஜூன் அண்ணா வீட்டுக்கே நேராக வருகிறாராம்.” என்று சொல்லிவிட்டு தயாராகப் போனாள்.

 

கீதன் மனைவியை திரும்பிப் பார்க்க, அவள் சந்துவை அழைத்துக்கொண்டு சென்று, குளிப்பாட்டி அழகான கோர்ட் சூட்டில் கொண்டுவந்து கீதனிடம் நீட்டினாள்.

 

அந்த உடையில் சற்றே வளர்ந்துவிட்டது போன்ற மகனின் தோற்றத்தில் ஒருகணம் பிரமித்துத்தான் போனான் கீர்த்தனன்.

 

அதுவரை மனைவி மீதிருந்த அதிருப்திகள் அத்தனையும் பின்னுக்குத் தள்ளப்பட, “பெரியவன் போலிருக்கிறான் இல்லையா மித்து..” என்றபடி மகனை மடியில் வாங்கிக்கொண்டான்.

 

“எனக்கும் கோர்ட்டை போட்டுவிட்டு பார்த்தபோது சட்டென்று அப்படித்தான் இருந்தது..” என்று புன்னகைத்தவள், கோர்ட் பட்டனை மகன் திருகி விளையாடியபடி கழட்டவும், “சந்துக்குட்டி, அதைக் கழட்டக் கூடாது செல்லம்.” என்றபடி பட்டன்களை திரும்பவும் போட்டுவிட்டாள்.

 

அவனோ திரும்பவும் அதை கழட்டுவதிலேயே குறியாக இருந்தான்.

 

“விடு! நீ போட அவன் கழட்ட என்று இன்று முழுக்க இதுதான் நடக்கும். இதை போகும்போது பார்க்கலாம். நீ போய் தயாராகு. நேரமாகிறது!” என்று அவளை அனுப்பிவைத்தான் கீர்த்தனன்.

 

மகனோடு விளையாடிக்கொண்டிருந்தாலும் கீர்த்தனனின் விழிகள் ஒருவித எதிர்பார்ப்புடன் திறக்கப்போகும் மித்ராவின் அறைக் கதவையே சுற்றிச் சுற்றி வந்தது.

 

அவனை நிறைய நேரம் காக்கவைக்காமல் கதவும் திறந்தது. மித்ராவும் வெளியே வந்தாள்! மகனோடு சேர்ந்து ‘லேகோ’ அடுக்கிக்கொண்டிருந்த கீதன், ஆர்வத்தோடு திரும்பிப் பார்த்தான்.

 

தங்கப்பூக்கள் பூத்திருந்த சிவப்புநிற கரை கொண்ட அழகிய பச்சை நிறச் சேலை, அவளின் உடலை அழகாகத் தழுவியிருந்தது. பொன்வண்ண மேனி கொண்டவள் பாந்தமான அழகுடன் ஜொலித்தபோதும், அவள் அணிந்திருப்பது அவன் வாங்கிக்கொடுத்த சேலையாக இல்லாமல் போனதில் அந்த அழகு கீதனின் மனதை கொள்ளை கொள்ள மறுத்தது!

 

அதுவரை இருந்த ஆர்வமும் ஆசையும் மடிய அவன் உணர்ந்தது என்ன? அவனாலேயே கணிக்க முடியவில்லை! ஏமாற்றமா? சினமா? ஆத்திரமா? அல்ல எல்லாம் கலந்த கலவையா? ஆனால் ஒன்று! மனம் மட்டும் தன் ஆசை நிறைவேறாமல் போனதில் வாடி வதங்கிப் போனது.

 

அவன் வங்கிக் கொடுத்ததை அவள் அணிவாள், அது அவளது மனமாற்றத்தை சொல்லும், இனி எல்லாம் சரியாகிவிடும், சரியாக்கவேண்டும் என்கிற அவனது எதிர்பார்ப்பை, ஆர்வத்தை, ஆசையை எல்லாம் சுக்கு நூறாக உடைத்துப் போட்டிருந்தாள் அவனது மனைவி!

 

முகம் இறுக அவளை அவன் பார்க்கவும், அதை எதிர்கொள்ள இயலாமல் மித்ராவின் பார்வை தரையை தொட்டது.

 

“நான் வங்கித் தந்ததை ஏன் கட்டவில்லை?” மகன் அருகில் இருந்ததில் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கேட்டாலும், அந்தக் குரலில் தொனித்த கடுமையில் திடுக்கிட்டுப்போய் சந்தோஷ் தகப்பனை திரும்பிப் பார்த்தான்.

 

“ஒன்றுமில்லைடா.. நீ விளையாடு.” என்று மகனிடம் சொல்லி, அவனை திசை திருப்பிவிட்டு எழுந்து வந்தவன், மித்ராவையும் இழுத்துக்கொண்டு அவளது அறைக்குள் நுழைந்தான்.

 

“எதற்கு இதைக் கட்டியிருக்கிறாய்?” அவள் அணிந்திருந்த சேலை முந்தானையை இழுத்துக் காட்டிக் கேட்டான் கீர்த்தனன்.

 

விட்டால் சேலையை கையோடு உருவி விடுவானோ என்கிற அளவில் இருந்தது அவனது பிடி. சட்டென்று ‘பின்’ செய்திருந்த தோளோடு சேலையை சேர்த்துப் பிடித்துக்கொண்டாள் மித்ரா.

 

அவளே பெரும் பாடுபட்டு அரை குறையாக பின் செய்திருந்தாள். அதைப் பிடித்து அவன் இழுத்தால் என்னாகும்?

 

error: Alert: Content selection is disabled!!