தனிமைத் துயர் தீராதோ 49 – 4

“கல்யாணம் நடந்தால் மட்டும் எல்லாம் சரியாவிடுமா? அத்தான் முதல் செய்தவைகள் எல்லாம் இலகுவில் மறக்கக்கூடிய விஷயங்கள் இல்லை பவி. என்ன இருந்தாலும் அக்கா கர்ப்பிணியாக இருக்கும்போது நிர்கதியாக அவளை விட்டவர் தானே அவர். பிள்ளை பிறந்தபிறகும் வந்து பார்க்கவில்லை. சந்துவை தன் மகனே இல்லை என்றவர். அந்தக் கோபம் எல்லாம் இருக்கும் தானே? இவர் கட்டிக்கொண்டார் என்றதும் மறந்துவிட்டு அவரோடு ஒட்டிக்கொள்ள வேண்டுமோ?” என்று கேட்டபோது, அந்தக் கோபம் தன் மனதில் இருப்பதை தன்னை அறியாமலேயே மனைவிக்கு உணர்த்தினான் சத்யன்.

 

திகைப்போடு கணவனைப் பார்த்தாள் பவித்ரா. இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டா இவன் இவ்வளவு நாட்களும் அண்ணாவோடு பழகியிருக்கிறான்? உள்ளே கோபத்தை வைத்துக்கொண்டு வெளியே பாசக்காரன் போல் நடித்தானா?

 

ஆத்திரம்தான் வந்தது அவளுக்கு. “அப்படி ஏன் நடந்தார் என்று நீங்கள் அண்ணாவிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு நியாயமான காரணம் கட்டயாம் இருக்கும். ஆனால், உங்களைப்போல உங்களின் அக்காவின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்க நினைத்தவர் இல்லை என் அண்ணா.” என்றாள் பட்டென்று.

 

மனைவியை வெறித்தான் சத்யன். “அதையெல்லாம் இன்னும் நீ மறக்கவில்லை; அப்படித்தானே? மனதில் வைத்து குத்திக் காட்டுகிறாய்!” என்றான் வறண்ட குரலில்.

 

“புரியாமல் பேசாதீர்கள் ஜான். அப்போ நீங்களும் இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் அண்ணாவோடு பழகுகிறீர்கள் என்று நான் சொன்னால் கேட்டுக்கொள்வீர்களா? அல்லது, உங்கள் அக்காவால் எல்லாவற்றையும் மறந்து அண்ணாவோடு வாழ முடியுமா என்று கேட்டீர்களே.. என்னால் மட்டும் எப்படி நீங்கள் செய்த எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு உங்களோடு வாழ முடிந்தது?” என்று அவள் தெளிவாகக் கேட்டபோது, அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

 

“சொல்லுங்கள், உங்கள் அக்கா செய்தது பெரிய பிழையா இல்லையா? அவர் பக்கத்தில் அதற்கான நியாயமான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அது வேறு. ஆனால், கட்டிய கணவனாக ஒரு ஆணுக்கு தன் மனைவியைப் பற்றிய தவறான விஷயம் தெரியவந்தால் அது இனிக்குமா? ஆனால், உங்கள் அக்காமேல் அவ்வளவு கோபம்கொண்டு விவாக ரத்து வரைக்கும் போன என் அண்ணா, அண்ணிமேல் உள்ள கோபத்தை என்றாவது ஒருநாள் உங்கள் மீது காட்டியிருப்பாரா? உங்களை பழி வாங்குகிறேன் என்று ஏதாவது செய்து இருப்பாரா? சொல்லுங்கள்.” என்று அவள் கேட்டபோது உச்சியில் அடித்ததுபோல் உண்மையும் உறைத்தது. தன் அத்தானின் அன்பின் ஆழமும் விளங்கியது.

 

உண்மைதானே! வித்யாவும் அவனும் எத்தனையோ தடவைகள் அலட்சியப்படுத்திய போதிலும், கோபத்தைக் கொட்டிய போதிலும் இதுநாள் வரையில் கோபத்தையோ ஆத்திரத்தையோ அத்தான் காட்டியதே இலையே!

 

உள்ளே குன்றிப்போனான் சத்யன்.

 

பவித்ராவோ தமையனைப் பற்றி கணவனிடம் விளக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடாது, “அன்று சந்துவின் பிறந்தநாள் அன்று என் அண்ணா எவ்வளவு சந்தோசத்தோடு அண்ணி வீட்டுக்கு வந்தார் தெரியுமா? என்னவோ உலகத்திலேயே இல்லாத பெரிய உடன்பிறப்பு மாதிரி நல்லது செய்கிறேன் என்கிற பெயரில் அண்ணியின் சந்தோசத்தை கெடுத்ததே நீங்கள் தான். இதில் என் அண்ணா மீது கோபம் வேறா? இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன், நான் உங்கள் மனைவி தானே? அதுவும் காதலிக்கவே இல்லாமல், என்னை பிடிக்காதபோதும் உங்களின் அக்காவுக்காக மணந்தவர் தானே நீங்கள். நான் இதற்கு முதல் இன்னொரு ஆணுடன் பழகியிருந்தால் என்னை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?” என்று அவள் கேட்டபோது விளக்கெண்ணையை குடித்தவன் போலானது அவன் முகம்.

 

அந்தப் பேச்சே தனக்குப் பிடிக்கவில்லை என்பதாக முகத்தை சுளித்து அவன் அவளை முறைக்க, “உங்கள் முகம் ஏன் இந்தப் போக்கு போகிறது? சும்மா வாயால் சொன்னதற்கே தாங்க மடியவில்லையே.. அப்போ என் அண்ணா? அக்கா அக்கா என்று கண்மூடித்தனமாக இருக்காமல் கொஞ்சம் நடுநிலையில் இருந்து யோசியுங்கள்!” என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தவள், ஆத்திரமாக அவனை முறைத்துவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டாள்.

 

என்ன இருந்தாலும் அண்ணாமேல் மனதில் கோபத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு நாட்களும் அவன் இருந்திருக்கிறான் என்பதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. சகோதரத்தின் மீது பாசம் இருக்க வேண்டியதுதான்! அதற்காக, இப்படியா? மனப் புழுக்கம் அடங்கவே இல்லை அவளுக்கு.

 

 

 

 

error: Alert: Content selection is disabled!!