அழகான காலை நேரப் பொழுதில், வழமையான பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தார் ஈஸ்வரி. சத்யனுக்காக வாசலை வேறு அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவனும் வர, “என்னடா தம்பி இப்ப வருகிறாய்? உனக்கு வேலைக்கு நேரம் போகிறது பார். போய்க் கெதியா வெளிக்கிட்டுக்கொண்டு வா. நான் அதுக்கிடையில தேநீர் ஊற்றுகிறேன்.” என்றார்.
“அக்கா வீட்டுலேயே குடித்துவிட்டேன்.” அவரின் முகம் பாராது சொல்லிவிட்டு, அவனுடைய அறைக்கு நடந்தான் சத்யன்.
அவன் பின்னாலேயே சென்றபடி, “என்னவாமடா அக்கா? எப்படி இருக்கிறாள்? இரவு அவளுக்கு என்ன நடந்ததாம்?” என்று விசாரித்தார் ஈஸ்வரி.
ஏற்கனவே, அக்காவின் இந்த நிலைக்கு அவர்தான் காரணம் என்பதால் உண்டான கோபத்தை அடக்கிக்கொண்டு வந்த சத்யன், இப்போது மூன்றாம் நபரைப் போன்று விசாரித்தவரை திரும்பி பார்த்து முறைத்தான் .
“எவ்வளவு விரைவாக விசாரிக்கிறீர்கள்.” என்று நக்கலாகச் சொல்லிவிட்டு, அறைக்குள் புகுந்து கதவை கோபத்தோடு சாத்திக்கொண்டான்.
விக்கித்து நின்றுவிட்டார் ஈஸ்வரி. அவனுடைய இந்தக் கோபம் புதிதல்லதான். என்றாலும், மனம் கலங்க, முகம் சுருங்க தன் வேலைகளைப் பார்க்கப்போனார்.
சிறிது நேரத்திலேயே தயாராகி வெளியே வந்தவன், அங்கே காலைநேர உணவை உண்டுகொண்டிருந்த தந்தையை லட்சியம் செய்யாமல், ஒரு கதிரையை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான்.
அன்னை அவனுக்கு உணவை பரிமாற, “ஈஸ்வரி..! உன் மகனிடம் சொல்லிவை, இனி அவளின் வீட்டுக்கு இவன் போகக் கூடாது என்று. ” என்றார் சண்முகலிங்கம்.
முதல் நாளிரவு, மித்ரா வீட்டுக்கு சத்யன் போய்விட்டான் என்பதை அறிந்ததும் ஈஸ்வரியிடம் சத்தம் போட்டே அவரை ஒருவழியாக்கியிருந்தார். அதே கோபத்தோடு மகனிடமும் அவர் பாய, என்ன நடக்கப் போகிறதோ என்று நடுங்கத் தொடங்கினார் ஈஸ்வரி.
ஆனால் சத்யனோ, எந்தப் பதட்டமும் இன்றித் தந்தையை நிமிர்ந்து பார்த்து, “போனால் என்ன செய்வீர்கள்? அக்காவை துரத்தியது போல என்னையும் வீட்டை விட்டுப் போகச் சொல்வீர்களோ?” என்று நிதானமாகக் கேட்டான்.
பதறிப்போனார் ஈஸ்வரி.
“ஐயோ தம்பி. ஏனடா இப்படியெல்லாம் கதைக்கிறாய். எனக்கு நெஞ்சு பதறுகிறது. அப்பா அப்படியெல்லாம் செய்ய மாட்டார். நீ அவர் சொல்றதை கேட்டு நட ராசா..” என்றார் தவிப்போடு.
அவரை வெறுப்போடு பார்த்தான் சத்யன்.
“இந்தப் பதட்டம் அக்காவை உங்கள் புருஷன் வீட்டை விட்டு அனுப்பிய போதெல்லாம் உங்களுக்கு வரவில்லையே, ஏன் அம்மா? நான் மட்டும் தான் உங்கள் மகனா? அவள் இல்லையா? அவளுக்கு ஒரு அம்மாவாக இதுவரை என்ன செய்தீர்கள்?”
விழிகள் கலங்க அப்படியே நின்றுவிட்டார் ஈஸ்வரி. அவன் கேள்வியில் இருக்கும் நியாயம் புரிந்தாலும், அது மனதை உறுத்தினாலும் அவருக்கும் வேறு வழி இல்லையே என்று எண்ணிக்கொண்டார். இல்லாவிட்டால் இந்தக் கணவரையும் பிரிந்து மூன்று பிள்ளைகளுடன் தனிமரமாக அல்லவோ நின்றிருப்பார். அப்படித்தான் மிரட்டி வைத்திருந்தார் சண்முகலிங்கம்.
ஈஸ்வரி பதிலற்று நிற்க, “அவளிடம் என்னடா கேள்வி வேண்டிக்கிடக்கிறது உனக்கு? அதை விட்டுட்டு நான் சொல்வதை நீ கேள். என் மானத்தையும் மரியாதையையும் வாங்கியவளின் வீட்டுக்கு நீ போகக் கூடாது! அவளோடு கதைக்கக் கூடாது! விளங்கியதா?” என்று அதிகாரமாய் அதட்டினார் சண்முகலிங்கம்.
அவரின் அந்த அதிகாரம் சத்யனை கொதித்தெழ வைத்தது. கையிலிருந்த உணவை தட்டிலேயே உதறிவிட்டுக் கதிரையில் இருந்து வேகமாக எழுந்தான். “என் அக்கா வீட்டுக்குப் போக எனக்கு யாரின் அனுமதியும் தேவையில்லை. நான் போவேன். நான் மட்டுமில்லை வித்தியையும் கூட்டிக்கொண்டு போவேன். அதைத் தடுக்க யாராலும் முடியாது. எங்களுக்குப் பதினெட்டு வயது தாண்டிவிட்டது. இதையும் மீறி ஏதாவது பேசினால் வித்தியோடு வீட்டை விட்டே வெளியேறிவிடுவேன்!” என்று, அன்று எக்களிப்போடு சண்முகலிங்கம் மித்ராவிடம் சொன்ன அதே வார்த்தைகளை இன்று அவன் சொன்னபோது, அதிர்ந்து நின்றனர் அவனைப் பெற்றவர்கள்.
அதைச் சட்டையே செய்யாது கையைக் கழுவிக்கொண்டு வெளியேறினான் சத்யன். அதே கோபத்தோடு அவன் சென்றது கீர்த்தனன் வேலை செய்யும் இடத்துக்கு.
“நியூ சிட்டி” யில் காரை கொண்டுபோய் நிறுத்தினான்..
அது ஜெர்மனி முழுவதும் கிளைகள் கொண்ட மின்சாதனப் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கக் கூடிய ஷோ ரூம். அங்கேதான் பொறுப்பான பதவியில் இருந்தான் கீர்த்தனன்.
அந்த வேலையைக் கூட மித்ராதான் அவனுக்கு வாங்கிக்கொடுத்தாள்.
அப்படி அவளிடமிருந்து அனைத்து உதவிகளையும் வாங்கிக்கொண்டு உதறியவரை சந்திக்கத்தான் வேண்டுமா? என்கிற கேள்வி, மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருந்தது. கீர்த்தனனின் முகம் பார்த்து கதைப்பதை நினைக்கவே மனம் வெறுத்து.
ஆனால், அன்று காலையில் அவன் எழுந்தபோது, முதல் நாளிரவின் சோகங்களினதும், கண்ணீரினதும் சுவடுகள் இன்றி அவனைப் பார்த்து புன்னகைத்த தமக்கையின் முகம் மனக்கண்ணில் மின்னவும், அவளுக்காக இதைச் செய்தே ஆகவேண்டும் என்கிற பிடிவாதத்தோடு கீர்த்தனனை தேடிச் சென்றான்.
அங்கே, அவனுக்கான அறையில் மேசையின் பின்னால் அமர்ந்திருந்து கணணியில் ஏதோ வேலையில் மூழ்கியிருந்த கீர்த்தனன் சத்யனைக் கண்டதும் ஆச்சரியத்துடன் பார்த்தான்.
அதுநாள் வரை அவன் எத்தனையோ முறை அழைத்தும் எடுக்காதவன், நேரடியாகக் கதைக்க முயன்ற போதெல்லாம் பிடிகொடுக்காமல் போனவன், அவன் மீது பெரும் கோபத்தோடு இருக்கிறவன் இன்று அவனைத் தேடி வந்திருக்கிறானே!
எது எப்படி இருந்தாலும், அவன் தன்னைத் தேடி வந்திருக்கிறான் என்பதில் உண்டான மகிழ்ச்சியோடு முகம் மலர, “சத்தி…!! வாவா..!” என்று விரைந்து சென்று அவன் கையைப் பற்றி அழைத்தான்.
நாசூக்குப் பாராமல் வெளிப்படையாகவே கையை உதறி விடுவித்துக்கொண்டான் சத்யன். கீர்த்தனனின் முகம்பாராமல், “உங்களோடு கொஞ்சம் கதைக்கவேண்டும்!” என்றான்.
அந்த முகத்திருப்பல் உள்ளே வலித்தாலும், வெளியே புன்னகைத்து, “தாரளமாகக் கதைக்கலாம். அதற்கு முதலில் வா, இருவரும் கஃபே குடிப்போம். நீதான் கஃபே என்றால் விடமாட்டாயே..” என்றான் கீர்த்தனன்.
“இங்கே நான் கஃபே குடிக்கவோ, உங்களோடு விருந்தாடவோ வரவில்லை. கதைக்க மட்டும் தான் வந்தேன்.” வெட்டொன்று துண்டிரண்டாகச் சொன்னான்.
“சரிடா..! கதைக்கத்தான் வந்தாய். ஆனால், கதைக்கும்போது ஏதாவது குடிக்கக் கூடாது என்று சட்டம் ஏதும் இருக்கிறதா என்ன?” என்று கண்ணைச் சிமிட்டி கேட்ட கீர்த்தனன், சத்யனின் தோள்களை உரிமையோடு பற்றித் தன் மேசையின் முன்னால் இருந்த இருக்கையில் இருந்த்தினான். மேசையைச் சுற்றிச் சென்று தன்னுடைய இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
அப்போதும் அமைதியாக இருந்து தன் மறுப்பைத் தெரிவித்தவனிடம், “ப்ளீஸ்டா சத்தி. முன்னெல்லாம் நம் மாலை நேரம் எவ்வளவு கலகலப்பாகக் கழியும். இப்போது அந்த வீட்டில் என்னோடு சேர்ந்து எதையும் குடிக்கவோ சாப்பிடவோ யாரும் இல்லை. அதனால் தான் கேட்கிறேன். எனக்காக..” என்றான் கீர்த்தனன்.
அதுவரை நேரமும் அந்த அறையில் இருந்த மூலை முடுக்குகளையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்தவனின் விழிகள் இப்போது கீர்த்தனனின் முகத்தில் நிலைத்தன.
‘அதைக் கெடுத்தது நீங்கள் தானே..’ என்று கேட்டன.


