சற்று நேரத்திலேயே பார்வையைத் திருப்பிக்கொண்டு, “எனக்கு வேண்டாம். நீங்கள் குடியுங்கள்.” என்றான் அப்போதும் இறங்கி வராமல்.
“உன் பிடிவாதத்துக்கு அளவே இல்லைடா..” என்று சிரித்துக்கொண்டே சொன்னாலும், இரண்டு கஃபேக்கு ஆர்டர் கொடுத்தான் கீர்த்தனன்.
“சரி, சொல்லு. வேலை எல்லாம் எப்படிப் போகிறது?” என்று இலகுவாகக் கீர்த்தனன் விசாரிக்க, அவனை முறைத்துவிட்டு, “நான் என்னைப்பற்றிக் கதைக்க இங்கே வரவில்லை. அக்காவை பற்றியும், அவள் பெற்ற உங்களின் மகனைப் பற்றியும் கதைக்கவேண்டும்.” என்றான் விறைப்பாக.
புருவங்கள் சுருங்க, “சந்தோஷுக்கு என்ன?” என்று கேட்டான் கீர்த்தனன்.
தமக்கையைப் பற்றி அவன் விசாரிக்கவில்லை என்பதைக் கவனித்துக்கொண்டான் சத்யன்.
“அவனுக்கு என்ன? தந்தை சரியில்லாவிட்டாலும், கண்ணுக்குள் பொத்திவைத்துப் பார்க்கும் அம்மா இருக்கிறாள். அதனால் நன்றாக இருக்கிறான்.”
“என்னடா இது. அநியாயமாக என்னை ஏன் குற்றம் சாட்டுகிறாய்? நான் என்ன செய்தேன்?” என்று அப்போவும் இலகு குரலிலேயே கேட்டான் கீர்த்தனன்.
“இன்னும் என்ன செய்ய இருக்கிறது? முதலில் அக்காவை கை விட்டீர்கள். இப்போது பெற்ற மகனையே தூக்கிப்போட துணிந்து விட்டீர்களே!”
“டேய் சத்தி! என்னடா இது? கோபத்தில் என்னோடு சண்டை பிடிக்கவேண்டுமே என்று எதையாவது சொல்லாதே! சந்துவை நான் தூக்கிப் போடுவதா? என்னால் முடியுமாடா.”
கீர்த்தனனை முறைத்துக்கொண்டே, “நன்றாகத்தான் நடிக்கிறீர்கள்.” என்று எள்ளினான் சத்யன்.
“உன்னிடம் நடித்து நான் என்ன காணப்போகிறேன்.” என்றவனை, உங்களை நம்ப மாட்டேன் என்பதாகச் சத்யன் பார்த்தான்.
“ப்ச்! என்னடா நீ? என்னை ஏன் குற்றவாளியாகவே பார்க்கிறாய்? கொஞ்சம் என் பக்கமும் யோசிடா..”
அப்போதும் விறைப்பாகவே இருந்தவனிடம், “உனக்கு எப்படி என் மனதை நான் புரியவைக்க? அவன் என் பிள்ளை. என் உயிர்! சந்தோஷ் தான் என் சந்தோஷமே. என் வாழ்க்கையில் உள்ள பிடிப்பே சந்து தான்டா.. உன் அக்காவுக்காக என்னோடு சண்டை பிடிக்க நீ இருக்கிறாய். ஆனால் எனக்கு? என் மகன் மட்டும் தான்டா!” என்றான் வேதனை நிறைந்த குரலில்.
அப்போது கஃபேயும் வர, ஒன்றை சத்யனிடம் கொடுத்துவிட்டு இன்னொன்றை எடுத்து தான் பருகினான் கீர்த்தனன்.
தன்னதை அருந்தாமல், “இவ்வளவு சொல்கிறவர் தான் அவனைப்பற்றி யோசிக்காது இன்னொரு திருமணத்துக்குத் தயாரானீர்கள் போல. அதுவும் ஆறு வருடக் காதலாமே.” என்றான் சத்யன் ஏளனமாக.
கீர்த்தனனின் புருவங்கள் சுருங்கின. “இதையெல்லாம் உனக்கு யார் சொன்னது?” என்று கேட்டான்.
“அப்போ இதெல்லாம் உண்மைதான் இல்லையா. இந்த லட்சணத்தில் தான் சந்தோஷ் தான் என் சந்தோசம் என்று வசனம் வேறு. என்ன மனிதர் நீங்கள்?” என்றான் வெறுப்பும் கசப்புமாக.
அவன் தன் பேச்சை மறுக்கவில்லை என்கிற ஆத்திரம் சத்யனுக்கு.
அப்போதும் பிடிகொடுக்காத கீர்த்தனன், சற்றே யோசித்துவிட்டு, “அம்மாவா இதையெல்லாம் உன்னிடம் சொன்னார்கள்?” என்று கேட்டான்.
‘என் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. இதில் விசாரணை வேறு’ என்கிற ஆத்திரத்தில், பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான் சத்யன்.
அவன் சொல்லாதபோதும் நடந்ததை ஓரளவுக்கு ஊகித்துக்கொண்ட கீர்த்தனனுக்கு அன்று மித்ராவின் துயர் நிறைந்த முகமும், அவள் பேச்சுக்கான காரணமும் இப்போது விளங்கியது.
தாய் மேல் கோபம் எழுந்த போதிலும், “வேறு என்ன சொன்னார் அம்மா?” என்று மேலும் விசாரித்தான்.
அவர் சொன்னவைகள் நினைவிலாட ஆத்திரமும் ஆவேசமும் ஒருங்கே தோன்ற, “என்ன சொன்னாரா? சந்து உங்களுக்குப் பிறக்கவில்….” என்று ஆரம்பித்தவன் ஆத்திரத்தை அடக்க முடியாமல் மேசையில் ஓங்கிக் குத்தினான்.
“எனக்கு வந்த ஆத்திரத்துக்கு…” என்று பல்லை கடித்தபடி நிமிர்ந்தவன், அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்து விழிகளை இறுக மூடி வலியை அடக்க முயன்று கொண்டிருந்த கீர்த்தனனை பார்த்துவிட்டு, “நீங்களே அவனை ‘என் மகன் இல்லை’ என்று சொன்னவர் தானே. பிறகென்ன?!” என்றான் வெறுப்போடு.
துடித்துப்போய் நிமிர்ந்தான் கீர்த்தனன்.
அப்போதும் ஆத்திரம் அடங்காதவனோ, “சந்துவின் உண்மையான அப்பாவை தேடச் சொன்னார். தேடவா? சொல்லுங்கள், தேடவா?” என்று கீர்த்தனனை கூறுபோடும் வேகத்தோடு கேட்க, நொறுங்கிய போனான் அவன்.
ஆத்திரம் கொடுத்த ஆவேசத்தில் பாக்கிலட்சுமி பேசிய அனைத்தையும் சத்யன் சொல்ல, அதையெல்லாம் கேட்டவனின் முகம் இறுகியது. அவனாலேயே தாங்க முடியவில்லையே. மென்மையான உள்ளம் கொண்ட மித்ராவின் நிலை? விழிகளை இறுக மூடித் திறந்தான். “சாரிடா.. அம்மாவுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.” என்றான்.
“என்னிடம் எதற்குக் கேட்கிறீர்கள்? நீங்கள் கேட்க வேண்டியது என் அக்காவிடம். அப்படிக் கேட்டால் மட்டும் நடந்தவைகள் எல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா? அவளின் துயர்தான் நீங்கிவிடுமா?” என்ற சத்யன், கடைசியாக இதையும் தெரிந்துகொள்வோம் என்று எண்ணி கதிரையில் மீண்டும் அமர்ந்துகொண்டு, “சொல்லுங்கள், நீங்கள் திருமணம் செய்துகொள்ளப் போவது உண்மைதானா?” என்று நேரடியாகவே கேட்டான்.
அவனுக்கு அந்தக் கேள்விக்கான நேரடிப் பதில் தேவையாக இருந்தது. கீர்த்தனனோ உடனடியாக ஒன்றும் சொல்ல மறுத்தான்.
மேசையில் இருந்த பேனாவை பற்றி உருட்டிக்கொண்டே, “வேறு என்ன செய்யச் சொல்கிறாய் சத்தி. எனக்கு முப்பத்திமூன்று வயதாகிறது. இப்படியே காலம் முழுக்கத் தனி மரமாகவே நிற்கச் சொல்கிறாயா?” என்று கேட்டான்.
நம்பமுடியாமல் வெறித்தான் சத்யன்! மனம் விட்டே போயிற்று!
“ஆமாம் இல்லையா! உங்களுக்கு வாழவேண்டிய வயதுதான். அதேபோல இருபத்தியெட்டு வயதில் இருக்கும் என் அக்காவும் வாழவேண்டியவள் தானே. அவளும் இன்னொரு திருமணம் செய்துகொள்ளட்டும். பிறகு உங்கள் மகனை என்ன செய்யலாம்? அநாதை இல்லம் எதிலாவது கொண்டுபோய்ச் சேர்க்கலாமா?”
பேச்சற்றுச் சத்யனை வெறித்தான் கீர்த்தனன்.
“வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாதே சத்தி. நம் பிரச்சனையில் சந்துவை ஏன் இழுக்கிறாய். அவன் பாவம்.. சின்னக் குழந்தை.” என்றான்.
சத்யனுக்குமே அதைச் சொல்கையில் நெஞ்சை அறுத்ததுதான். ஆனால், வலியை பார்த்தால் நோயை குணப்படுத்த முடியாதே!
“பின்னே வேற வழி? நீங்கள் எப்படிக் காலம் முழுக்கத் தனியாக இருக்க முடியாதோ அப்படி என் அக்காவையும் தனியாக இருக்க நான் விடமாட்டேன். நிச்சயம் கல்யாணம் செய்துவைப்பேன்.” என்றான் உறுதியான குரலில்.
“ஓ..! அப்போ.. உன் அக்காவுக்குத் திருமண ஆசை வந்துவிட்டது. அதற்கு என் மகன் தடையாக இருக்கிறான் போல. பரவாயில்லை. அவனை என்னிடமே தந்துவிடச் சொல்லு. அவனைக் கண்ணுக்குள் வைத்து நான் வளர்க்கிறேன்!” என்றான் கீர்த்தனன்.
“அதுதான் நான் எப்போது கேட்டாலும் உடனே மகனை கொடுத்துவிடுகிறாள். இதில் ஏதோ பாசமாக இருக்கிறவள் மாதிரி நடிப்பு!” என்றான், அன்று கடையில் அவள் மகனை அணைத்துக்கொண்டதை மனக்கண்ணில் கண்டபடி.
அப்படிச் சொன்னவனை வெறுப்போடு பார்த்தான் சத்யன்.
“அதுசரி! என்றைக்கு நீங்கள் அவளைப் பற்றிச் சரியாக விளங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். இன்றைக்கு விளங்கிக்கொள்ள!” என்றான் ஏளனமாக.


