“ஆனால் அவள்…? இதுநாள் வரை உங்களைப் பற்றிக் குறையாக ஒன்று சொன்னதில்லை. எங்களைக் கூட ஒரு வார்த்தை கதைக்க விட்டதில்லை. அப்படியானவளின் அன்பு புரியாமல் அவளை நேற்றிரவு அப்படி அழவைத்து விட்டீர்களே. நீங்கள் எல்லாம் என்ன மனிதர்?” என்று வெறுப்போடு கேட்டான் சத்யன்.
மித்ரா அழுதாளா? அவனையும் மீறி நெஞ்சில் வலித்தது.
“அவள் மீது குற்றம் சாட்டி, அவளைப் பிரித்து வைத்து இருக்கிறீர்களே, நீங்கள் மட்டும் திறமா? நீங்களும் மனதில் ஒருத்தியை வைத்துக்கொண்டு தானே அவளோடு வாழ்ந்தீர்கள்? இப்போது அந்தப் பெண்ணை மணக்கத் துணிந்துவிட்டீர்களே, அது மட்டும் சரியா?” என்று வெறுப்போடு கேட்டுவிட்டு, கதிரையில் இருந்து எழுந்தான் சத்யன்.
கீர்த்தனனின் விழிகளையே நேராகப்பார்த்து, “நீங்கள் கல்யாணத்தைச் செய்யுங்கள், பிள்ளையைப் பெறுங்கள் அல்லது வேறு எதையாவது செய்யுங்கள். ஆனால், சந்தோஷ் உங்களின் மூத்த மகன்! அதை மறக்கவும் கூடாது. அவனைக் கைவிடவும் கூடாது! அப்படி எதுவும் நடக்குமாக இருந்தால் நான் உங்களை என்ன செய்யவும் தயங்க மாட்டேன்! என் அக்காவைப் போல அப்பா இல்லாமல் வளர என் மருமகனை விடமாட்டேன்!” என்றுவிட்டு அதற்கு மேலும் அவனின் முகம் பார்க்கப் பிடிக்காமல் வெளிக் கதவை நோக்கி வேகமாக நடந்தான்.
கதவின் பிடியில் கையை வைத்தவன், ஒருகணம் தாமதித்துத் திரும்பிப் பார்த்தான். அவன் விழிகளிலோ அதுவரை தென்படாத பெரும் வேதனையும் வலியும்.
“சத்தி..!” பதறிக்கொண்டு கீர்த்தனன் எழும்ப, கையை நீட்டி தடுத்தான் சத்யன்.
“ஒரு காலத்தில் உங்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். என்னுடைய முதல் ஹீரோ நீங்கள் தான். என் அத்தானைப்போல் யார் உண்டு என்று பெருமிதப்பட்டு இருக்கிறேன். ஆனால்.. இன்றைக்கோ.. இந்த உலகத்தில் நான் அளவுக்கு அதிகமாக வெறுக்கும் நபர் என்றால் அது நீங்கள் தான். இப்படிப் பாசம் உள்ள மனிதராக நடித்து நீங்கள் எங்களை ஏமாற்றி இருக்கவேண்டாம்!” என்றவன், அதிர்ந்து நின்ற கீர்த்தனனை அதற்குமேலும் பார்க்கப் பிடிக்காமல் வேகமாக அங்கிருந்து நடந்தான்.
கீர்த்தனனுக்கோ மனம் ரணமாய் வலித்தது. அதுவும் சத்யன் கடைசியாகச் சொல்லிவிட்டுப் போனதை நினைக்கையில் நெஞ்சம் கனத்தது.
அவன் தொட்டே பார்க்காத ஆறிப்போன கஃபே வேறு அவனைப் பார்த்துச் சிரித்தது. ஒருகாலத்தில் இவன் அருந்திக் கொண்டிருக்கும் கஃபேயை கூடப் பறித்து அருந்தியவன் தான் இந்தச் சத்யன்.
சத்யனும் வித்யாவும் என்றால் அவனுக்கு உயிர். அதற்குக் காரணம், ஒருகாலத்தில் அவனது உயிராக இருந்தவளுக்கு அவர்கள் இருவரும் உயிர் என்பதே!
அன்று வைத்த பாசம் இன்று வரையிலும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், அதற்குக் காரணமானவளின் மீது மட்டும் பெரும் கோபமும் வெறுப்பும் நிறைந்து கிடக்கிறதே!
இப்போதும் அப்படித்தான். ஆனால், புதிதாக அந்தக் கோபத்தில் மெல்லிய தடுமாற்றம் கலந்திருந்தது.
அன்று சனிக்கிழமை. காலையில் கண்விழிக்கும் போதே உற்சாகமாக உணர்ந்தான் கீர்த்தனன். மகன் வருவான் என்கிற எண்ணமே, அந்த வாரம் முழுவதும் இருந்த மன உளைச்சல்கள் அனைத்தையும் ஒதுங்கவைத்து, ஒருவித உற்சாகத்தையும் ஆறுதலையும் உண்டாக்கியிருந்தது.
முதல்நாள் தாயை சுவிசில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்ததிலும் ஒருவித சுதந்திர உணர்வைத்தான் சுவாசித்தான்.
இலையுதிர்காலம் ஆரம்பித்து இருந்ததால், மெல்லிய குளிர் உடம்பை தாக்க, அவன் உடலே வெப்பமாக்கி விட்டிருந்த போர்வைக்குள் புகுந்துகொண்டு கட்டிலில் கிடந்தவனுக்கு, ஒருகாலத்தில் அவனுடைய போர்வைக்காக அவனோடு செல்லச் சண்டையிடுகிறவளின் நினைவு தன்னாலே வந்தது.
அவளுக்கு எப்போது பார்த்தாலும் அவன் போர்த்தியிருக்கும் போர்வைதான் வேண்டும்! கேட்டால் “உங்கள் உடலின் சூடு அதிலே இருப்பதால் குளிருக்கு கதகதப்பாக இருக்கும்.” என்பாள்.
அதுவும் கடும் குளிர் காலத்தில் அவனுடயை போர்வையை அவன் கொடுக்கவில்லை என்றால் அதற்குள் அவளும் புகுந்துகொண்டு இனிமையாக அவனை இம்சிப்பாள்.
கடைசியில், “போர்வை எதற்கு? நானே போர்வையாக வருகிறேன்..” என்பவன் அவளுக்கு எத்தனையோ நாட்கள் போர்வையாக மாறிப் போயிருக்கிறான்.
அவன் படுத்திருக்கும் இதே கட்டிலையே யுத்தகளமாக மாற்றி எத்தனையோ காதல் யுத்தங்கள் புரிந்து இருக்கிறார்கள். எத்தனையோ களியாட்டங்களை ஆடியிருக்கிறார்கள்.
இப்போதும் குளிர்காலம் ஆரம்பித்து இருந்தது. அவன் தேகமும் சூடாகத்தான் இருந்தது. ஆனால், அந்த இனிமையான இம்சையை அனுபவிக்கவோ வழங்கவோ அவள் இல்லை!
அவள் வேண்டும்! அவள் மட்டுமே வேண்டும்! என்று ஆர்ப்பரித்த மனதில் பிறகு பிறகு நடந்த நிகழ்வுகள் திரைப்படமாக ஓடத் துவங்க, காதலில் தவித்தவன் கோபத்தில் இறுகினான்.
என்றாலும், முதல் இருந்த கோபத்தின் வீரியத்துடன் ஒப்பிடுகையில் இப்போது அது குறைவாகவே இருந்தது. அவளைப் பார்க்காதவரை பிடிவாதமாய் இருந்த மனது பார்த்துவிட்டதில் தடுமாறிக் கொண்டிருந்தது.
அதோடு, அன்று சத்யன் பேசியவைகள்.. அதுவும் அவள் இன்னொருவனைத் திருமணம் செய்துகொண்டால்… அதற்குமேல் நினைக்கவே முடியவில்லை.
அவள் செய்த துரோகத்தை அறிந்த நாளில் இருந்து இன்றுவரை அவனால் அவளோடு வாழ முடியாது என்பது தெள்ளத் தெளிவு. அதனால்தான் பிரிந்தான். அதேநேரத்தில், இன்னொருவனின் அருகில் நிறுத்தியும் பார்க்க முடியவில்லை.
யமுனாவின் பாலும் அவன் மனம் சஞ்சலப் பட்டதுதான். அவள் இன்றுவரை அவனுக்காகவே காத்திருக்கிறவள். அப்படியிருந்தும் சத்யனிடம் அவளை மணக்கமாட்டேன் என்று நேரடியாக மறுக்காத போதிலும், அவளை மனைவியாக எண்ணக்கூட முடியவில்லை. மனம் முழுவதும் வெறுப்பு இருந்த போதிலும் மித்ராவின் பால்தானே இவன் மனம் சாயத் துடிக்கிறது.
அருகதை அற்ற ஒருத்திக்காகத் தன் மனமும் உடலும் ஏங்கும் தன் நிலையை மிகவும் கேவலமாக உணர்ந்தான் கீர்த்தனன்.
இதற்கு மேலும் இதைப்பற்றிச் சிந்தித்தால் இன்றைய நாளையும் நிம்மதியாகக் கழிக்க முடியாது என்று எண்ணியவன், எழுந்து குளித்து, தானே தனக்குத் தேநீரை ஊற்றிக் குடித்தான்.
வயிறு பசியில் கத்துகிறதே என்பதற்காக எதையோ வாய்க்குள்ளும் போட்டுக்கொண்டான். அந்த மூன்று மாடிகள் கொண்ட வீட்டில் அவன் மட்டுமே தன்னம் தனியாக இருப்பது மூச்சடைப்பது போல் இருக்க, எப்போதடா ஒன்பது மணியாகும், மகன் எப்போதடா வருவான்? அவனோடு வெளியே போகலாம் என்று காத்திருந்தான்.
ஆனால், நேரம் ஒன்பதைத் தாண்டி பத்தை நெருங்கியும் சந்தோஷ் வரவில்லை என்றதும், கோபம், குழப்பம், அவனுக்கு என்னவுமோ என்கிற பயம் என்று எல்லாமாகக் கீர்த்தனனை தாக்கியது.
இதுவரை நாளும் இப்படி நடந்ததே இல்லையே! எப்போதும் மித்ராவின் நண்பர்கள் யாரவது அவனைக் கொண்டுவந்து இவனிடம் விடுவார்கள். அதேபோல மாலையில் அழைத்தும் செல்வார்கள். போன சனி மட்டும்தான் வித்தி வந்தாள்.
இன்று என்ன ஆகிற்று?
உடனேயே கைபேசியை எடுத்து, “சந்தோஷ் எங்கே? நேரம் பத்தை தாண்டிவிட்டது..” என்று ஒரு மெசேஜ்ஜை அனுப்பினான்.
ம்ஹூம்! பதில் இல்லை.
திரும்பவும் அனுப்பினான். அப்போதும் பதில் இல்லை. பார்த்துவிட்டாள் என்றுமட்டும் காட்டியது. ஆயினும் பதில் அனுப்பாமல் இருக்கிறாள்!
ஆத்திரம் வந்தபோதும் வேறு வழியின்றி, அவளுக்கு அழைத்தான். மகன் மீதான பாசம் அவனது பிடிவாதத்தைத் தளர்த்தியது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவனது கைபேசியில் இருந்து அவளதுக்கு அழைப்பு சென்ற போதிலும், அதை எடுக்கவில்லை மித்ரா.
அதற்குமேலும் தனித்திருக்கப் பொறுமை அற்றவன், கோபத்தோடு மித்ராவின் வீட்டுக்கே கிளம்பினான். அவனுக்குப் புரியவில்லை, கோபத்தோடு என்றாலும் அவன் நாடிச் செல்வது அவளை என்று!!


