“யார் பக்கம் பிழையோ சரியோ அதைப் பற்றியெல்லாம் நான் கதைக்க வரவில்லை. மனமிருந்தால் எதையும் மன்னிக்க முடியும் அண்ணி. உண்மையான அன்பு எதையும் பெரிதாக நினைக்காது. ஆனால் ஒன்று உங்களின் இந்தப் பிடிவாதத்தால் என் அண்ணாவின் வாழ்க்கை மட்டும் பாழாகவில்லை அண்ணி..” என்றவள் அதற்கு மேலும் முடியாமல் அழுகை வெடிக்க அங்கிருந்து ஓடினாள்.
கடைசியாக பவித்ரா வீசிய வெடிகுண்டில் அதிர்ந்துபோய் நின்றாள் மித்ரா. “வேறு யாரின் வாழ்க்கையும்?” விளங்கியும் விளங்காமல் நெஞ்சு குழுங்கியது!
வாசல் கதவை திறந்த பவித்ரா வெளியே போகமுதல் மித்ராவிடம் திரும்பி, “நான் ஏதாவது தப்பாக பேசியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணி.” என்றுவிட்டு தன் வீட்டுக்கு ஓடினாள்.
மித்ராவோ சிலையென ஸ்தம்பித்துப்போய் அப்படியே நின்றிருந்தாள்!
பவித்ராவுக்கோ அழுகை அழுகையாக வந்தது. அண்ணனை நினைத்தாளா? அண்ணியை நினைத்தாளா? தன்னை நினைத்தாளா? கணவனை நினைத்தாளா? ஏன் என்றே தெரியாது அழுது கரைந்து ஓய்ந்தவளுக்கு வெளியே எங்கேயாவது போனால் நல்லதோ என்றிருந்தது.
அந்தளவுக்கு வீட்டுக்குள் இருக்க மூச்சு முட்டியது. அழுததில் தலை வேறு கனத்ததுப்போய் வலித்தது.
அப்போது பார்த்து அஞ்சலி அழைத்தாள். “பவிக்கா, நேற்று எனக்கு வந்த பரிசுகளை எல்லாம் பிரித்துப் பார்க்கலாம். வருகிறீர்களா?” என்று கேட்கவும், அந்த நேரத்துக்கு தன் சிந்தனையை திசை திருப்ப அஞ்சலியின் லொட லொடப்பு தேவையாக இருந்ததில், புறப்பட்டாள்.
நடந்து கொண்டிருந்தவளுக்கு, தான் சற்று அதிகமாகவே மித்ராவிடம் பேசிவிட்டது புரியாமலில்லை. அபாண்டமாக பழி சுமத்தியதும் தெரியும். அங்கே தனியே இருக்கும் மித்ராவின் உள்ளம் என்ன பாடுபடும் என்றெண்ணியவளுக்கு கவலையாய் இருந்தது!
ஆனால், அவர்களின் குடும்பத்துக்குள் இருக்கும் சீரற்ற இந்த நிலை மாற வேண்டுமாயின் மித்ரா தன் கூட்டுக்குள் இருந்து வெளியே வந்தால் மட்டுமே முடியும்! அதற்காகவே இந்த வைத்தியம்.
ஆனாலும், அண்ணியை ஆழமாகவே காயப்படுத்தி விட்டோமே என்று தெரிந்ததில், “சாரி அண்ணி..” என்று வாய்விட்டே சொல்லிக்கொண்டாள்.
‘எல்லாம் இந்த ஜானால் வந்தது! அன்று இவன் கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்க அனைத்தையும் அண்ணா சுமூகமாக முடித்திருப்பார்!’
இப்படி சுற்றிச் சுழன்ற அவளின் சிந்தனைகள் ‘கணவன் இத்தனை நாட்களும் தன் தமையன்மேல் கோபத்தை அடிமனதில் வைத்துக்கொண்டுதான் பழகியிருக்கிறான்’ என்பதில் வந்து நின்றது! அது கொடுத்த சினத்தில் அஞ்சலி வீட்டுக்கு போவதாக அவனுக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பிவைத்தாள்!
மனைவியின் மெசேஜ் பார்த்த சத்யனின் முகத்தில் முறுவல் அரும்பியது! அவன் வேலைக்கு வந்துவிட்டால், அவன் அருகிலில்லை என்கிற துணிவோடு ஒருநாளைக்கு பலமுறை அழைத்துச் சீண்டுகிறவள் இன்று மெசேஜ் அனுப்புகிறாள்.
அதாவது மேடம் கோபமாக இருக்கிறார்களாம்! ‘உன் கோபத்தை போக்க எனக்கா தெரியாது?’ செல்லமாக மனைவியோடு பேசிக்கொண்டான்.
காலையில் அக்காவோடு கதைக்கப்போகிறேன் என்று சொன்னாளே, என்ன கதைத்தாளோ எதைச் சொன்னாளோ என்கிற கவலை கொஞ்சம் கூட அவனிடத்தில் இல்லவே இல்லை! நிச்சயம் அக்காவின் மனதை மாற்றியிருப்பாள் தன்னவள் என்கிற பரிபூரண நம்பிக்கை இருந்தது!
அந்த நம்பிக்கையில் அக்காவும் அத்தானும் பழையபடி சந்தோசமாக இருப்பார்கள் என்று உறுதியாக எண்ணினான். அப்போ இனி நம் காட்டில் மழைதான் என்றெண்ணியவனின் இதழ்களில் முறுவல் தன்னாலே மலர்ந்தது.
அதோடு தன்னவளை நினைக்கையில் அப்படியொரு வியப்பும் பெருமையும் அவனிடத்தில்! எல்லோரும் சந்தோசமாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் அவளின் குணம், அதற்காக உறுதியாக நின்று போராடும் அந்த வைராக்கியம், வயதில் சின்னவளாக இருந்தாலும் அனைத்தையும் சிந்தித்து எல்லோரையும் அரவணைத்துப் போகும் பாங்கு என்று எல்லாமே அவளின்பால் அவனை இன்னுமின்னுமே ஈர்த்தது.
அப்படியானவளை தான் சேரப்போகும் நாள் வெகு தூரமில்லை என்று தெரியவும் மலர்ந்த முகத்தில் இருந்த விழிகளில் பல கனவுகள் மின்ன தலையை தன் கைகள் இரண்டாலும் கோதிக்கொண்டு சிரித்தான் சத்யன்.
இனிய கனவுகளில் மட்டுமே காலத்தை கடத்தாமல், வேக வேகமாக திட்டம் ஒன்றையும் போட்டு அதை செயல் வடிவமும் ஆக்கத் தொடங்கினான். அதோடு, மாலை வந்து தானே அவளை அழைத்துச் செல்வதாக தானும் ஒரு மெசேஜ் மட்டுமே பவித்ராவுக்கு அனுப்பி வைத்தான்.
அதைப் பார்த்துவிட்டு பல்லைக் கடித்தாள் பவித்ரா! ‘நான் மெசேஜ் அனுப்பினால் நீயும் மெசேஜ் தான் அனுப்புவியாடா!’
மாலையும் வந்தது. மனைவியை காண ஆவலோடு அஞ்சலி வீட்டுக்கு காரை விட்டான் சத்யன்.
போகிற வழியில் இருந்த ஐஸ்கிறீம் பார்லரில் எதேர்ச்சையாக பவித்ராவைக் கண்டதும், பிரேக்கை அழுத்தி காரை நிறுத்தியவனுக்கு இங்கே வருவதாக இவள் சொல்லவில்லையே என்று தோன்றியது.
சரி.. நாமும் அங்கேயே போவோம் என்று எண்ணிக்கொண்டு காரைப் பார்க் பண்ணிவிட்டு இறங்கப்போனவனின் விழிகள், எதையோ சொல்லிவிட்டு அஞ்சலியோடு சேர்ந்து சிரித்த மனைவியிடத்தில் இருந்து விலகவே இல்லை. அருகில் போனால் இப்படி சுதந்திரமாக ரசிக்க முடியாது என்றெண்ணியவன் காருக்குள் இருந்தே ஆசையோடு அவளை ரசித்தான்!

