பவித்ரா, அஞ்சலி, அர்ஜூன், இன்னுமொருவன்.. யார் என்று தெரியவில்லை அவனுக்கு. நால்வருமாக என்னவோ சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். சம்மர் தொடங்கிவிட்டதால் வெளியே போடப்பட்டிருந்த நிழல் குடைக்கு கீழே கதிரைகளில் அவர்கள் அமர்ந்திருக்க, வீசிய காற்று மனையவளின் கருங்குழல்களை சீண்டி விளையாட, முன் நெற்றியில் விழுந்த முடிகளை எப்போதும்போல் காதோரமாக ஒதுக்கி விட்டபடி சலசலத்துக் கொண்டிருந்தவளை பார்க்கப் பார்க்க பொறாமையாகக் கூட இருந்தது அவனுக்கு.
“ராட்சசி! எல்லாப் பல்லையும் காட்டிச் சிரிக்கிறாள்! என்னை கண்டால் மட்டும் முறைக்கிறாள் பாவி!” என்று இவன் வாய்விட்டு சொல்லும்போதே, பவித்ரா என்னவோ சொல்லவும் அதைக்கேட்டு சிரித்துக்கொண்டு அர்ஜூன் அவளின் தலையில் எட்டிக் குட்டப் போக, அதிலிருந்து நழுவ முயன்றபடி கதிரையிலிருந்து அவள் எழுந்துகொள்ள முயல, அந்தப் புதியவன் அவளின் கையை எட்டிப் பிடித்து இழுக்க, எம்பி அவளின் தலையில் குட்டினான் அர்ஜூன்.
அதைப் பார்த்தவனின் முகம் சுருங்கியது! மனதிலோ சிணுக்கம்! அவள் மற்றவர்களோடு விளையாடியது பிடிக்கவில்லை!
‘தோழனாகவும் காதலனாகவும் கணவனாகவும் உன்னோடு விளையாடவும், சகலதையும் பகிர்ந்து கொள்ளவும் நான் காத்துக்கிடக்க, என்னை விலக்கி வைத்துவிட்டு மற்றவர்களோடு உனக்கு என்னடி விளையாட்டு?’ என்று பெரும் ஆரப்பாட்டமே செய்தது மனது!
தன்னை எப்போதும் தள்ளி நிறுத்துகிறவள், தான் நெருங்கும் போதெல்லாம் விலகிப் போகிறவள்.. அதற்கான காரணத்தை அறிந்திருந்தாலும் இங்கே சிரித்துப் பேசி விளையாடுவதைக் காண, குழந்தையாய் மனம் சிணுங்க அது கோபமாக முகத்தில் துலங்க, காரிலிருந்து இறங்கினான் சத்யன்.
பவித்ராவோ அவன் கார் வந்ததுமே கவனித்துவிட்டாள். காலையிலிருந்து அவளை வாட்டி வதைத்த மன உளைச்சலுக்கெல்லாம் அவன் வரவு இதமாக இருக்க, தங்களை நோக்கி வந்தவனை மலர்ந்த முகத்தோடு நோக்கினாள்!
அவன் முகத்தில் தெறித்த கோபத்தைக் கண்டதும் மீண்டும் மனம் சுணங்கியது! சினம் தான் வந்தது!
அண்ணாவும் அண்ணியும் சந்தோசமாக வாழவேண்டும் என்கிற பேரவா இருந்தாலும், அப்படி நடந்தால் கணவன் நிம்மதியாக இருப்பான் என்பதுதானே அவளை மித்ராவோடு கதைக்கப் பெருமளவு தூண்டியது!
இனி மித்ரா பழையபடி அவளோடு அன்போடு பழகுவாளா என்பதே சந்தேகம்! அந்தளவுக்கு அல்லவா அவளை ஒரு வாங்கு வாங்கிவிட்டாள்! அவ்வளவு தூரத்துக்கு கணவனுக்காக அவள் பாடுபட, அந்தக் கணவன் காட்டிய கோப முகத்தில் அவளுக்கும் கடுப்படித்தது. அவனைப் பாராமல் முகத்தை திருப்பிக்கொண்டாள்!
‘பார்! கட்டிய புருஷன் கண்முன்னால் நடந்து வருகிறான். அவனைக் கவனிக்கவே இல்லை. அங்கே மட்டும் பல்ளிப்பு!’ பொருமிக்கொண்டே அவர்களை நெருங்கினான் சத்யன்.
“ஹாய் ஜான் அண்ணா…!” அவனைக் கண்டுவிட்டு அஞ்சலி கத்த அப்போதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை பவித்ரா.
‘உடம்பு முழுக்க திமிருடி உனக்கு!’ பல்லைக் கடித்தான் சத்யன்.
“வாடா! உனக்காகத்தான் இவ்வளவு நேரமாகக் காத்திருந்தோம்.” என்ற அர்ஜூன் எல்லோருக்குமாக ஐஸ்கிறீமுக்கு ஆர்டர் கொடுத்தான்.
பவித்ராவின் அருகிலிருந்த நாற்காலியில் அவன் அமர்ந்துகொள்ள, “ஏன்டா லேட்? நீ ஐந்துக்கே வந்துவிடுவாய் என்றாளே பவி.” என்று கேட்டான் அர்ஜூன்.
‘என்னிடம் இங்கே வருவதை சொல்லவே இல்லை. இதில் ஐந்து மணிக்கு வந்துவிடுவேன் என்று அர்ஜூன் அண்ணாவிடம் சொல்லியிருக்கிறாள்!’
உள்ளே கடுப்பானாலும், “கொஞ்சம் வேலை அண்ணா..” என்று அவனுக்கு பதிலிறுத்தவன், “அதிசயம் தான்! கட்டிய புருசனின் வேலை நேரம் எல்லாம் உன் நினைவில் இருக்கே..” என்றான் பவித்ராவுக்கு மட்டுமே கேட்கும் படியாக.
அதைக்கேட்ட பவித்ராவுக்கு கோபம் போய் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டாள்.
‘வரும்போது உர்ர்ர் என்று வந்துவிட்டு இப்போ என்னடா பேச்சு வேண்டிக்கிடக்கிறது? நான் கோபத்தில் மெசேஜ் அனுப்பினால் நீயும் மெசேஜ் அனுப்புவியா? பெண்டாட்டிக்கு போனைப் போட்டு சமாதானப்படுத்த தெரியவில்லை.. பேச வந்துவிட்டான் பெரிதாக!’ என்று உள்ளுக்குள் அவனுக்கு அர்ச்சனை செய்தவள், எதுவுமே கேட்காதவள் போல் அஞ்சலியிடமும் அவளது வகுப்புத் தோழனிடமும் பேசத் தொடங்க சத்யனோ உள்ளுக்குள் கொதிக்கத் தொடங்கினான். காதுகளில் புகை வராதது ஒன்றுதான் குறை!
கணவன் உள்ளே சூடாகிக்கொண்டு இருக்கிறான் என்பதை அவன் முகத்திலிருந்தே அறிந்துகொண்டவள் உள்ளுக்குள்ளே விழுந்து விழுந்து சிரித்தாலும் வெளியே இன்னுமே அவனை சீண்டினாள்!
ஐஸ்கிறீம் வந்தபோதும் சரி, அதன்பிறகும் சரி அவனைக் கவனியாது அவள் மற்ற மூவரோடு மட்டுமே சலசலக்க பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருந்தவன், ஒருவழியாக அவர்களிடம் விடைபெற்று பவித்ராவோடு தன் காருக்கு வந்து சேர்ந்தான்.
பவித்ரா காருக்குள் ஏறி பெல்ட் போட்டதுதான் தாமதம், “நீயென்ன இன்னும் குழந்தைப்பிள்ளையா? கண்ட கண்ட இடத்தில் நின்று விளையாடிக்கொண்டு இருக்கிறாய்?” என்று சீறினான்.

