கண்ணைச் சிமிட்டக்கூட மறந்து, விழிகளில் நேசம் பொங்க கீர்த்தனனையே பார்த்தபடி நிற்க, அவன் முகம் மலர்ந்தது. இதழ்களில் விரிந்த புன்னகையோடு கைகளை விரித்துக் கண்களால் மனைவியை அழைத்தான்!
அடுத்தகணமே தாயை தேடும் கன்றென ஓடிவந்து கணவனின் கைசிறைக்குள் புகுந்து மார்பில் முகம் புதைத்தவளுக்கு, காடு மேடெல்லாம் அலைந்து வீடு சேர்ந்த நிம்மதி!
அளவற்ற ஆனந்தத்தில் விம்மலும் வெடித்தது!
அவன் மார்பிலேயே அவள் கண்ணீர் வடிக்க, “ஹேய்! என்னடா நீயும் அழுகிறாய்?” என்று அவளின் முதுகை வருடிக் கொடுத்தவனுக்கும் குரல் கரகரத்தது.
அதுவரை நேரமும் நடப்பதை தன் பொன்வண்டு விழிகளை விரித்துப் பார்த்தபடி நின்ற சந்தோஷ் தாயும் தந்தையும் அணைத்தபடி நின்றதைக் கண்டதும் ஓடிப்போய் தந்தையின் கால்களைப் பிடித்து இழுக்க, குனிந்து பார்த்தான் கீர்த்தனன். அண்ணாந்து தக்கபனைப் பார்த்து, கைகளை தூக்கும்படி நீட்டிய மகனின் செயலில் முகம் மலர்ந்து விகசிக்க அவனையும் அள்ளி அணைத்துக்கொண்டான்.
ஒரு கையில் மகனையும் மற்றக் கையால் மனைவியையும் அணைத்துக்கொண்டு நின்றவனின் முகத்தில் அத்தனை நிறைவு! சத்யனோ, இனிக் காணவே மாட்டேனா என்று தவித்த காட்சியை கண்டுவிட்டதில் மெய்மறந்துபோய் நின்றான்.
கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, இதழ்களில் புன்னகை வழிய தமையனின் அந்தக் கோலத்தை விழியகற்றாமல் பார்த்துக்கொண்டு நின்றாள் பவித்ரா.
சற்று நேரத்தில் தன்னை சமாளித்துக்கொண்ட சத்யன், மனைவியை திரும்பிப் பார்க்க அந்த நேரம் அவளும் அவனைத்தான் பார்த்தாள், முகம் கொள்ளா புன்னகையோடு!
அங்கே இனி தாங்கள் இருவரும் அதிகப்படி என்பதை உணர்ந்த சத்யன் அவளையும் இழுத்துக்கொண்டு சத்தமின்றி அங்கிருந்து நழுவினான்! தங்களின் வீட்டுக்குள் வந்ததும் தானும் மனையவளை தன் கை வளையத்துக்குள் கொண்டுவந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டு அப்படியே அவளை அணைத்தபடியே நின்றான்!
சுகமாய் அல்ல பரமசுகமாய் கழிந்தது அந்த நொடிகள் அவனுக்கு!
அதுநாள் வரையிலான அவனுடைய போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதே! தமக்கைக்கு வேண்டிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டான்! அதை அமைத்துக் கொடுத்தவள் அவனவள்!
மீண்டும் அவள் உச்சியில் அழுத்தமாய் அவன் இதழ்பதிக்க, அதன் சுகத்தை சற்று நேரம் கண்மூடி அனுபவித்துவிட்டு அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் பவித்ரா.
“கொஞ்ச நேரத்துக்கு முதல் கடுகடு என்று இருந்துவிட்டு இப்போ என்ன கொஞ்சல் வேண்டிக் கிடக்கிறது?” என்று கேட்டாள் அவனை முறைத்தபடி.
கோபம் என்பது சிறிதுமில்லை.. ஆனாலும், சும்மா ஒரு லுல்லுல்லாய்!
“இப்போவும் முறைப்பா? கடைசிவரை நீ திருந்திவிடாதே! அதென்ன எல்லோரிடமும் சிரிப்பு. என்னிடம் மட்டும் முறைப்பு?” என்று அவளுக்கு மேலாய் சிடுசிடுத்தான் அவன்.
அதற்கு மேலும் முடியாமல் கலகலவென்று நகைத்தாள் பவித்ரா. “உங்களை பார்த்தால் ஜெர்மனியில் பிறந்து வளர்ந்தவர் மாதிரியே இல்லையே. ஒரு சின்ன விசயத்துக்கு இந்தப் பாடா?” என்றாள் கேலியாக.
“ஏய் பெண்டாட்டி என்ன நக்கலா?” என்றவனின் முகத்திலும் நன்றாகவே சிரிப்பு மலர்ந்தது.
அவளை இடையோடு வளைத்தபடி, “என் பெண்டாட்டி எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று நினைக்க எங்கு பிறந்து வளர்ந்தால் தான் என்ன? நீ என் சொத்துடா. என்னோட உயிர்! அப்படியிருக்க வேறு யாரோடும் சிரித்துக் கதைக்க உன்னை விடுவேனா? இனிமேல் உன் விளையாட்டு, சண்டை, சிரிப்பு, அழுகை, சந்தோசம், துக்கம் எதுவா இருந்தாலும் அது என்னோடு மட்டும் தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் எனக்குக் கெட்ட கோபம் தான் வரும்!” என்றான் விழிகளை உருட்டி.
அதைக்கேட்டு ஆனந்தமாய் அவள் நகைக்க, “அதோடு நான் என் அத்தானின் வளர்ப்புமா. இப்படித்தான் இருப்பேன்.” என்றான் அவன்.
வியப்போடு கணவனை பார்த்து, “அண்ணாவின் வளர்ப்பா? அதெப்படி.. அவரோடு ஒரு இரண்டு வருடம் இருந்திருப்பீர்களா?” என்று கேட்டாள்.
“இரண்டு வருடமும் இருக்காது பவி. கொஞ்சக் காலம்தான் என்றாலும் அந்தக் காலத்தில் அவர் சொல்லித் தந்தது நிறைய. நான் அவரை பார்த்துக் கற்றுக் கொண்டதும் நிறைய. எங்களுக்கு யாருமே வழிகாட்டியாக இருந்தது இல்லை. அம்மாவும் அப்பாவும் ஏதாவது சொன்னால் கோபம் தான் வரும். அது எங்களுக்கு நல்லதாக இருந்தாலுமே எதிராக எதையாவது செய்யத்தான் மனம் சொல்லும். கண்ணால் கண்டதையும் காதால் கேட்டதையும் வைத்து நாமாகத்தான் வளர்ந்தோம். எனக்கும் வித்திக்கும் அக்கா சொல்வதுதான். அக்காவுக்கு? யாருமேயில்லை. அப்போதான் அத்தான் வந்தார். அவர் வந்ததும் எனக்கு அவர்தான் ஹீரோ. வித்யாவுக்கும் அப்படித்தான். ஏன்.. அக்காவுக்கும் அவர்தானே ஹீரோ.. ஆக மொத்தத்தில் எங்கள் மூவருக்குமே அத்தான் தான் ஹீரோ.” என்று வெண்பற்கள் பளீரிட அவன் சிரிக்கவும், நெஞ்சை பிசைந்தது பவித்ராவுக்கு.
அன்றும் ஒருநாள் ‘அத்தானை மாதிரி பொறுப்பாக என்னால் நடந்துகொள்ள முடியுமோ தெரியாது. ஆனால் நிச்சயம் சந்தோசமாக உன்னை வைத்திருப்பேன்..’ என்று அவன் சொன்னதும் நினைவில் வந்தது.
என்றுமே தன் தமையன் தான் அவனுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறான்.
“அண்ணாமேல் இவ்வளவு பாசமும் மதிப்பும் வைத்திருக்கிறவர் பிறகெப்படி இவ்வளவு நாளும் அவர்மீது அவ்வளவு கோபமாக இருந்தீர்கள்?”
“அந்தப் பாசமும் மதிப்பும் தான் இந்தக் கோபத்துக்கே காரணம்.” என்றான் அவன்.
அவள் வியப்போடு பார்க்க, “அந்தளவு தூரத்துக்கு அத்தானை எனக்குப் பிடிக்கும் பவி. அவர் எனக்கு ஹீரோ மட்டுமில்லை; ஆசான், வழிகாட்டி, வாழ்க்கையை சொல்லித்தந்தவர் என்று எல்லாமும் அவர்தான். அப்படி நான் நினைத்த அத்தான் பொய்த்துப் போனார் என்பதுதான் என் கோபம். அதோடு அக்கா பட்ட துன்பத்தையும் தினம் தினம் அருகிலிருந்து பார்த்தேனே..” என்றவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவனது கன்னத்தை நேசத்தோடு தடவிக்கொடுத்தாள் பவித்ரா.

