“ஆனால் இன்றைக்கு.. அத்தானின் கைகளுக்குள் அக்காவைக் கண்ட காட்சி.. என்னால் என்றைக்குமே மறக்க முடியாது பவிம்மா. நான் பட்ட அத்தனை கஷ்டங்களும் இதற்காகத்தான். என்னுடைய போராட்டம் அந்தக் காட்சியை காணத்தான்! எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது தெரியுமா? இந்த நிமிஷம் என் மனதில் இருக்கும் நிறைவை வார்த்தைகளால் வடிக்கவே முடியாது. அந்த சந்தோசத்தை தந்தவள் நீ.” என்றவன் அவளைக் கட்டிக்கொள்ள, அவன் மார்போடு ஒன்றிக்கொண்டாள் அவனவள்!
இதற்காகத்தானே கணவனின் இந்த நிறைவுக்காகத்தனே அவளும் பாடுபட்டாள்!
“எங்கே என்னுடைய நாய் சங்கிலி?” என்று குறும்போடு கேட்டான் சத்யன்.
சுகமான மயக்கத்தில் அவன் மார்பில் கிடந்தவள் தன் விழிகளை மட்டுமே உயர்த்தி, “நாய் சங்கிலியா?” என்று புரியாமல் கேட்டாள்.
அவன் விழிகளில் குறும்பு மின்னியது. “அதுதான், அன்றைக்கு என்னவோ நான் கட்டிய தாலியை, போட்டுவிட்ட மெட்டியை, வைத்துவிட்ட குங்குமத்தை எல்லாம் நீ போட்டுக்கொண்டு திரிய நான் மட்டும் ஒன்றுமே இல்லாமல் திரிகிறேன்; என் கழுத்துக்கு ஒரு நாய் சங்கிலி மாட்டப் போவதாக சொன்னாயே? எங்கே அது? அல்லது பாவம் புருஷன் இன்னும் நாலு பெண்களை சைட் அடிக்கட்டும் என்று நினைத்து விட்டுவிட்டாயா?” என்று அவன் கேட்டபோது, அவன் கேட்ட விதத்தில் சிரிப்பு வெடித்தாலும் அதை அடக்கி அவனை பிடித்து தள்ளிவிட்டு முறைத்தாள் பவித்ரா.
மனமோ மெல்ல சகஜ நிலைக்கு திரும்பியது!
“சைட் அடிப்பீர்களோ? கொன்றே போடுவேன்.! தாலியோடு சேர்த்து உங்களின் குடலையும் உருவி என் கழுத்தில் மாலையாக போட்டுக்கொள்வேன். ஜாக்கிரதை!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் அவனது ராட்சசி!
அவளது இடையில் கைபோட்டு அவளைத் தன்னோடு இழுத்து, அவளின் மூக்கோடு மூக்கை உரசிக்கொண்டே, “பார்க்காமல் இருக்கத்தானே வேலியை போடு என்கிறேன். அப்படியே உன்னையும் பார்க்கவிடு!” என்றான் சத்யன் கள்ளச் சிரிப்போடு!
கன்னங்கள் மெல்லச் சிவந்தாலும், கணவன் அதை அணிந்துகொள்ள ஆசைப்படுகிறான் என்று அறிந்து பூரித்தாள் பவித்ரா. ஏதோ ஒரு ஆத்திரத்தில் செய்யக் கொடுத்தாள் தான். அது வந்த பிறகோ ஏனோ அவனிடம் கொடுத்து போட்டுக்கொள் என்று மல்லுக்கட்டத் தோன்றவில்லை. தானே வைத்துக்கொண்டாள். இன்று அவனாகவே கேட்டதும் ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள்.
அவனது கழுத்தோடு ஒட்டிக்கொண்டு இருக்கும் அளவிலான சங்கிலியில் ‘பவித்ரா’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பென்டன் தொங்கியது.
அதை வாங்கிப் பார்த்தவன், “அழகாயிருக்கிறது. நீயே போட்டுவிடு.” என்று அவளிடம் நீட்டினான்.
“நீங்களே போடவேண்டியதுதானே.” என்றபடி அவள் வாங்க, அவளின் கழுத்தில் கிடந்த தாலிக்கொடியை தூக்கிக் காட்டி, “இது எப்படி நான் கட்டிய தாலியோ அதே மாதிரி நீ கட்டிய தாலியாக என் கழுத்தில் இந்த சங்கிலி கிடக்கட்டும்; நான் சாகும்வரை!” என்றான் சத்யன் உணர்ச்சி வசப்பட்டு.
“என்ன பேச்சு ஜான் இது?” என்று பதறியவளின் விழிகளும் உணர்ச்சி வேகத்தில் கலங்கின.
“உண்மையை தான் சொன்னேன். நீ கட்டிவிடு!” என்றவன் அவளின் உயரத்துக்கு ஏற்ப அவள் புறமாக சற்றே குனிந்து தன் தலையை சரித்தான்.
பவித்ராவும் அதை அவன் கழுத்தில் அணிவித்துவிட்டு அப்படியே அவன் கழுத்தை வளைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தமிடவும் அடுத்தகணமே அவனுடைய இறுகிய அணைப்புக்குள் கிடந்தாள் அவள்.
அவனோ, இனி எந்தத் தடைகளும் இல்லை என்கிற சுதந்திரத்தோடு புயலை விட வேகமாக அவளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தான். அவனது வேகத்தில் அவள் தேகமெங்கும் வலி! இன்பமான வலி!
அவன் புயல் போன்றவன் தான். அந்தப் புயலின் வேகத்தை முழுமையாக அறியாதவள் ஒவ்வொரு முறையும் அவனிடம் அகப்படும் போதெல்லாம் திக்குமுக்காடித்தான் போகிறாள்! ஆயினும் அந்த வேகமும் அவனது அதிவேக ஆக்கிரமிப்புமே அவளுக்கும் வேண்டுமாயிருந்தது!
அதுநாள் வரை மனதோடும் உடலோடும் போராடிக் கொண்டிருந்தவள் அனைத்துதளைகளும் நீங்கிய நிறைவில் தன்னவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து அவன் கைகளில் துவளத் தொடங்கியபோது, அவளிடமிருந்து மெல்ல விலகினான் சத்யன்.
‘இனியும் என்ன?’
நாணம் ஒரு பக்கம் குழப்பம் ஒரு பக்கமாக அவள் பார்க்க, “உனக்கு ஐந்து நிமிடம் தான் டைம். அதற்குள் ஒரு மாதத்துக்கு தேவையானவைகளை எடுத்துக்கொண்டு வா.” என்றான் பரபரப்பாக.
“எங்கே?”
“அதையெல்லாம் போகும்போது சொல்கிறேன்!”
“சரி.. ஆனால், இப்போதே போகவேண்டுமா? இரவுக்கு இங்கேயே தங்கி, நன்றாக உறங்கிவிட்டு நாளைக்கு போகலாமே?” தலையை சரித்து குறும்போடு கேட்டு நகைத்தவளை மீண்டும் தனக்குள் கொண்டுவந்தான் சத்யன்.
“இரவுத் தங்களுக்கு வே..று இடம் பார்த்திருக்கிறேன்.” என்று கள்ளச் சிரிப்போடு கண்ணை சிமிட்டியவன், அவளை தனக்குப் பிடித்தவிதமாக தண்டித்து மனமேயில்லாமல் விலகி தயாராக செல்லவும், வேறு வழியின்றி அவன் சொன்னவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் பவித்ரா.

