தனிமைத் துயர் தீராதோ 52 – 1

அதுநாள் வரை மனதில் சுமந்துகொண்டிருந்த பாரத்தையெல்லாம் இறக்குகிறவள் போல், கணவனின் கையணைப்புக்குள் நின்று கதறிக் கொண்டிருந்தாள் மித்ரா.

 

தான் சொன்ன எந்தச் சமாதானமும் எடுபடாமலே போக, ஒன்றுமே சொல்லாமல் அவளின் முதுகை வருடிக் கொடுத்தபடி நின்றான் கீர்த்தனன்; கடைசியும் முதலுமாக அழுது தீர்க்கட்டும் என்று எண்ணியவனாக!

 

அவளோ இன்றைக்கு அழுது முடிக்கிறவள் போலல்லாமல் தொடர்ந்து அழவும், நடப்பதை அறியாமல் சற்றுநேரம் முழித்த சந்துவும் உதடு பிதுக்கத் தொடங்கினான். அதற்கு மேலும் பொறுக்காது, “மித்தும்மா, இந்த அழுகையை நிறுத்து! சந்துவும் அழப்போகிறான் பார்!” என்று கீர்த்தனன் அதட்டவும் தான் சற்று கட்டுக்குள் வந்தாள்.

 

கண்களையும், கன்னங்களையும் கைகளால் துடைத்துக்கொண்டே அவள் அவனிடமிருந்து விலக, அழுதழுது சிவந்த முகமும் கலங்கிய விழிகளுமாக அவளை பார்க்கவே முடியவில்லை. அவனுக்கே அப்படியென்றால் அவர்கள் பெற்றவனுக்கு?

 

அவன் அழவே தொடங்கிவிட, அவனை சமாதானம் செய்தபடி, “முகத்தை கழுவிவிட்டு வந்து தம்பிக்கு தேவையானதை பார்!” என்று அவளை அனுப்பிவைத்தான்!

 

முகம் கழுவிக்கொண்டு வந்த மித்ரா மகனை அவனிடமிருந்து வாங்கி, தேற்றி, அவனுக்கு உடம்பு கழுவி, உணவு கொடுத்து, உடை மாற்றி உறங்க வைத்துவிட்டு வந்தபோது, கீர்த்தனன் மீன் தொட்டிக்கு புது தண்ணீர் விட்டு, மீன்களை திரும்ப தொட்டிக்குள் விட்டு, அவற்றுக்கு கொஞ்சம் உணவும் இட்டு அந்த இடத்தை ஒதுக்கி என்று இடையில் நின்றிருந்த அந்த வேலையை முடித்திருந்தான்.

 

அமைதியாகவே இருவரும் இரவு உணவை முடித்ததும், தானும் உடல் கழுவி இலகுவான உடையை மாற்றிக்கொண்டு தன்னறையில் அடைந்துகொண்டவளுக்கு ஒருவித படபடப்பு!

 

சத்யனிடம் கணவன் சொன்ன வார்த்தைகளை கேட்ட நொடியில், அது கொடுத்த உந்துதலில் ஓடிப்போய் கணவனின் மார்பில் சாய்ந்து கதறியவள் இப்போது சற்றுக் கட்டுக்குள் வந்திருந்தாள். ஆனாலும் ஒருவித குழப்பம், மனப்போராட்டம், பதட்டம் என்று என்னென்னவோ உணர்வுகள் ஏனென்று இல்லாமலே அவளை ஆட்டிப் படைத்தன!

 

 

 

அதே நேரம் கணவனின் வருகையை மனம் எதிர்பார்க்க, அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அறைக்கதவை திறந்துகொண்டு வந்தான் கீர்த்தனன்!

 

அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தயக்கத்தோடு தலையை குனிந்துகொண்டாள் அவள்.

 

கதவு நிலையில் சாய்ந்தபடி கையை கட்டிக்கொண்டான் கீர்த்தனன்! தன் மனதையும் அதிலிருப்பதையும் அவளுக்கு உணர்த்த தனக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கமாட்டாளா என்று தினமும் எதிர்பார்த்துக் காத்திருந்தவன் அவன்! அப்படியானவனை அமைதியாக இருந்தே வாட்டியவள் இன்று ஓடிவந்து மார்பில் சாய்ந்து அழுததே பெரிய மாற்றம் தான்! அந்த மாற்றத்தை, முன்னேற்றத்தை அத்துடனே விட மனமில்லை அவனுக்கு!

 

அதேநேரம், அதுநாள் வரை மனதை பூட்டிப் பூட்டியே வைத்துப் பழகியவள் இன்றாவது திறப்பாளா என்கிற ஐயமும் எழாமலில்லை!

 

ஆயினும் கிடைத்த சந்தர்ப்பத்தைக் கை நழுவவிடத் தயாராயில்லை அவன்! இனியும் பிக்கள் பிடுங்கல்களோடு அடுத்தவரின் மனதில் என்ன இருக்கிறது, என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாத வாழ்வை வாழ முடியாது என்றே தோன்றியது!

 

ஆனால், தன் மனதை, அதிலிருப்பதை அவளை நோகடிக்காமல் சொல்லவேண்டும் என்று நினைக்கையிலேயே ஒரு பெருமூச்சொன்று அவனிடமிருந்து வெளியேறியது! சொல்லித்தான் ஆகவேண்டும் என்கிற முடிவோடு மெல்ல நிமிர்ந்தவன், கதவை அடைத்துவிட்டு அவளை நெருங்கினான்!

 

அருகிலமர்ந்து மென்மையாக அவளின் கரம்பற்ற, அதுவோ சில்லிட்டுப்போய் இருந்தது!

 

அதிலேயே அவளின் மனநிலையை உணர்ந்தவனாக, அவளின் தோளை சுற்றிக் கையைபோட்டு இதமாக அணைத்தபடி, “என் மேலிருந்த கோபம் போய்விட்டதா?” என்று சின்னச் சிரிப்போடு கேட்டான்.

 

அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் கலங்கின! “சாரி கீதன்..” என்றாள் தழுதழுத்து.

 

“ப்ச்! நீயுமா?!” என்றான் பொய்யான சலிப்போடு.

 

குழப்பத்தோடு அவள் பார்க்க, “பின்ன என்ன? தம்பிக்காரன் விட்ட சாரி பாட்டை அக்காக்காரி ஆரம்பிக்கிறாயே.” என்றான் மனதை வருடும் புன்னகையோடு.

 

தன் பேச்சு எதுவும் அவளை காயப்படுத்தி விடுமோ என்று பயந்து, இலகுவாகவே பேச்சை ஆரம்பிக்க நினைத்தான் கீர்த்தனன்.

 

அவளோ அதற்கு மாறாக வேதனையோடு, “எத்தனையோ தடவை என்னோடு கதைக்க நீங்கள் முயற்சித்தும் நான் விடவில்லையே. அப்படியில்லாமல் நீங்கள் சொல்ல வந்ததை ஒரு நிமிடம் பொறுமையாக நின்று கேட்டிருந்தால் இத்தனை நாட்களும் நீங்கள் கஷ்டப்பட்டிருக்க தேவையில்லையே..” என்று மெல்லிய குரலில் வருந்தினாள்.

 

“எனக்கு என்ன கஷ்டம்?” என்று உடனேயே திருப்பிக் கேட்டான் அவன்.

 

“நீயும் சந்துவும் என்னோடு இருக்கிறீர்கள் என்பதே எனக்கு பெரிய சந்தோசம். நம் வீட்டில் நாம் மூவரும் குடும்பமாக ஒன்றாக இருக்கிறோம் என்பதே எவ்வளவு பெரிய நிம்மதி! அந்த சந்தோசத்துக்கு முன்னால் நிம்மதிக்கு முன்னால் எதுவுமே கஷ்டமில்லை. நீங்கள் இருவரும் அங்கேயும் நான் இங்கேயும் என்று பிரிந்து இருந்ததுதான் வேதனை. அப்போதெல்லாம், நாம் மூவரும் ஒன்றாக இந்த வீட்டில் வாழவே முடியாதா என்று எத்தனையோ நாட்கள் ஏங்கி இருக்கிறேன். சந்து என்னோடேயே காலம் முழுமைக்கும் இருக்கமாட்டானா என்று தவிப்பாயிருக்கும். நம் வாழ்க்கையில் இந்தப் பிரிவு நிகழாமலேயே இருந்திருக்கக் கூடாதா என்று நொடியும் விடாது உள்ளுக்குள் வருந்தியிருக்கிறேன். வேலை முடிந்து வந்து, யாருமேயில்லாத இந்த வீட்டுக் கதவை திறக்கும்போது முகத்தில் அறையும் பார் ஒரு வெறுமை.. அப்பப்பா.. என்ன கொடுமை அது! அதுதான் கஷ்டம். இது சந்தோசம் மித்து. எனக்காக என் மனைவியும் பிள்ளையும் வீட்டில் காத்திருக்கிறார்கள் என்கிற நினைவே எவ்வளவு பெரிய சந்தோசம் தெரியுமா?” என்றான் மனதார.

 

 

error: Alert: Content selection is disabled!!