தனிமைத் துயர் தீராதோ 52 – 3

“கீதன்..” என்று அவள் ஆரம்பிக்கையிலேயே, அவளின் தோள்கள் இரண்டையும் பற்றி, கண்களில் தீவிரத்தோடு அவளையே பார்த்து, “அந்த நாட்களை என்னால் திருப்பிக் கொண்டுவர முடியாதுதான். நடந்தவைகளையும் மாற்ற முடியாதுதான். நான் செய்த முட்டாள் தனமெல்லாம் செய்தது செய்ததுதான்! ஆனால் மித்து; இனி உன்னை என் கண்ணுக்குள் வைத்துக் காப்பேன். உன்னை எந்தத் துன்பமும் அணுக விடமாட்டேன். என் மனைவி.. என் உயிர் நீ. உனக்காக நானிருப்பேன்; உன் துணைவனாக, நண்பனாக, அம்மாவா அப்பாவா இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை உறவாகவும் நானிருப்பேன்! இன்றைக்கு மட்டுமில்லை என்றைக்கும்! இவ்வளவு நாட்களும் நீ அனுபவித்த வேதனைகளுக்கு ஈடாக உன்னை சந்தோசமாக வைத்துக்கொள்வேன் மித்து! என்னை நம்பு! நம்புவாய் தானே?” என்று ஒரு வேகத்தோடு சொல்லிக்கொண்டு வந்தவன், கடைசியில் பரிதவிப்போடு கேட்டான்.

 

அவள் தன்னை நம்ப வேண்டும், தன் பேச்சை கேட்க வேண்டும் என்கிற தவிப்பு அவன் விழிகளிலும் முகத்திலும்!

 

உருகியே போனாள் மனைவி!

 

இந்த அன்பு.. இந்த நேசம் தானே அவனை மறக்கவே முடியாமல் அதுநாள் வரை அவளது உயிரை தக்க வைத்தது! அவன் அவளை வெறுத்தபோது கூட அவனை மேலும் மேலும் நேசிக்க வைத்தது! அதே அன்பு மீண்டும் அவளை உயிர்ப்பிக்க, “என் கீதன்!” என்றபடி, கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய தன்னவனை தன்னால் முடிந்தவரை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள் மித்ரா.

 

“உங்களை நம்பாமல் இந்த உலகத்தில் வேறு யாரைத்தான் நம்புவேன் நான்?”

 

அவள் சொன்னது அவன் மனதையும் நிறைக்க அவளை தன்னோடு இறுக்கிக்கொண்டான் கீர்த்தனன். அந்த சொர்க்க சுகத்தை சற்றுநேரம் அனுபவித்தனர் இருவரும்!

 

மெல்ல முகத்தை மட்டும் அவன் மார்பிலிருந்து பிரித்து, அவனை அண்ணாந்து பார்த்து, “இது போதும் கீதன்! எனக்கு இது போதும்! தினம் தினம் எனக்கென்று யாருமில்லையே என்று தவித்தவளுக்கு புதுப் பிறவி கொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியுமா தெரியாது, இந்த முறையாவது காலம் முழுக்க என்னோடு நீங்கள் இருப்பீர்களா? இல்லை.. திரும்பவும் இடையில் விட்டுவிட்டுப் போய்விடுவீர்களா என்று கலக்கமாகவே இருக்கும்! இன்னொரு பிரிவைத் தாங்கும் சக்தி எனக்கு இல்லவேயில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து வாழ்க்கையில் போராடிப் போராடியே களைத்துப் போனேன். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படித் தனியாகவே இருப்பேன் என்று பயமாயிருக்கும். எல்லாப் பாரத்தையும் எனக்குள்ளேயே சுமந்து சுமந்து களைத்தே போனேன். ஆனால் இனி.. எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள். என் உயிராய்.. என் உறவாய்.. என் உலகமாய்..” என்றவள், உணர்வுகளின் மிகுதியில் எம்பிக் கணவனின் கன்னத்தில் தன் செவ்விதழ்களை ஆசையோடு பதித்தாள்.

 

விழிகளில் ஆச்சரியம் மின்ன, ஆசையோடு பார்த்த கணவனின் பார்வையில் கன்னங்கள் சிவந்தாலும் பதில் பார்வை கொடுக்கத் தயங்கவில்லை அவனவள்!

 

அவளை ஆசையோடு அவன் அணைத்துக்கொள்ள, “என் மீது எந்தக் கோபமும் இல்லையா உங்களுக்கு?” என்று, அவன் பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தே கேட்டாள்.

 

“உன் மேல் கோபமா? நீ என்ன செய்தாய்? செய்தது எல்லாம் நான்தானே!” என்றான் அவன்.

 

அவளுக்காக எல்லாவற்றையும் தன் தலையிலேயே தூக்கிப் போட்டுக் கொள்கிறான்!

 

எதைப் பற்றியும் தூண்டித் துருவாமல், அவளை கஷ்டப்படுத்தாமல் பேசும் கணவனின் அன்பில் நெகிழ்ந்து, “நான் வேதனைப்பட்டு விடக்கூடாது என்று உங்கள் மீது எல்லாப் பழியையும் தூக்கிப் போட்டுக்கொள்கிறீர்களா கீதன்?” என்று கேட்டாள் மித்ரா.

 

“இதென்ன பேச்சு? பழி கிழி என்று.” என்று அவன் அதட்டவும்,

 

அதற்குமேலும் முடியாமல், “இந்த அன்புக்கு நான் தகுதியா தெரியாது கீதன். ஆனால், இனியும் என்னால் முடியாது. நடந்த எல்லாவற்றையும் உங்களிடம் கொட்டவேண்டும். அப்படிக் கொட்டிவிட்டால் தான் என் பாரம் இறங்கும்.” என்றவளை அவசரமாக இடைமறித்தான் அவன்.

 

“நீ எதுவும் சொல்லத் தேவையில்லை! எனக்கு எதுவும் தெரியவும் தேவையில்லை! பழையதை எல்லாம் மறந்துவிட்டு நாம் புதிதாக வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்!” என்றான் கட்டளை போல்!

அவளால் அப்படி விட முடியாதே! இதுநாள் வரை அவனிடம் அவள் மனம் திறந்ததே இல்லையே!

“இல்லை கீதன். இன்றைக்கு மட்டும் என்னை சொல்ல விடுங்கள்! இனியும் உங்களுக்குத் தெரியாதது என்று என் வாழ்க்கையில் எதுவுமே இருக்கக் கூடாது. எல்லாவற்றையும் என் வாயால் சொன்னால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும்!” என்று அடம் பிடித்தாள் அவள்.

கடைசியும் முதலுமாய் அனைத்தையும் அவனிடம் சொல்லவேண்டும். சொல்லிவிட்டு ஒருமூச்சு அழவேண்டும்! அப்படிச் செய்தால் தான் அவளால் இனி மூச்சே விட முடியும் போல் ஓர் உணர்வு.. அவனிடம் மட்டுமே தனக்கான விடுதலை இருப்பது போல்!

அந்த விடுதலையை பெற்றுவிட, அதுநாள் வரை மனம் திறக்காத மித்ரா அன்று திறந்தாள்! கணவனது அன்பும் அரவணைப்பும் திறக்க வைத்தது!

 

கீர்த்தனனோ, இவள் ஏன் பழையதை பேசி தன் மனதை துன்புறுத்திக் கொள்ளப் பார்க்கிறாள் என்று நினைத்தான். ஆனாலும், அதுநாள் வரை மனதை பூட்டிப் பூட்டியே வைத்திருந்தவள் அதை திறக்கையில் வேண்டாம் என்றும் சொல்லவும் முடியவில்லை. தன்னிடம் சொல்வதால் அவளின் மனச்சுமை இறங்குமாக இருந்தால், அவளுக்கு ஆறுதல் கிட்டுமாக இருந்தால் சொல்லட்டும் என்று தன் மனதில் பாரத்தோடு கேட்க ஆரம்பித்தான் அவன்!

 

“இதை முதலே உங்களிடம் சொல்லியிருக்கலாம் தான். அம்மாவுக்காக, சத்திக்காக, வித்திக்காக என்று பார்த்து பெரும் பிழை செய்துவிட்டேன்..” என்றவள் ஒரு பெருமூச்சுடன் நிறுத்தினாள்.

 

error: Alert: Content selection is disabled!!