“அப்போதெல்லாம் என் மனம் ஏங்கியது எனக்கே எனக்கென்று எனக்காகத் துடிக்கும் ஒரு உயிருக்காக. என்மேல் உயிரையே வைத்து, பாசத்தை பொழிந்து, கண்ணுக்குள் பொத்திவைத்துப் பார்க்கும் ஒரு உறவுக்காக. அப்பாவிடம் தேடினேன் கிடைக்கவில்லை. அம்மாவிடம் வாய் விட்டுக் கேட்டும் கிடைக்கவில்லை. சத்தி வித்திக்கு அந்தளவு தூரத்துக்கு பக்குவமில்லை. அப்போது வந்தவன் தான் நீக்கோ. அன்போடு, பாசத்தோடு, நட்போடு என்னை பார்த்துக்கொண்டவன். படிப்புச் சொல்லித் தந்து, என்னை பார்த்துப் பார்த்து கவனித்துக் கொண்டவன். என்னுடைய கண்ணீர் கவலைகள் எல்லாம் அவன் அறிவான். அதே மாதிரி என் சின்னச் சின்ன சந்தோசங்களை கூட அவன் அறிவான். ஏன்.. நான் முதன் முதலாக வயதுக்கு வந்ததைக் கூட அவனிடம் தான் சொன்னேன். அந்தளவு தூரத்துக்கு என் மனதுக்கு நெருக்கமானவன் அவன். எங்களுக்குள் இருந்தது அழகான தூய்மையான நட்புத்தான். எத்தனையோ நாட்கள் ஒன்றாக உண்டு, உறங்கி, விளையாடி என்று இருந்திருக்கிறோம். ஆனால்.. அன்றைக்கு.. அந்த அசிங்கம்.. எப்படி..” என்றவளுக்கு அதற்கு மேலே சொல்ல முடியாமல் குரல் திக்கி தொண்டை அடைத்தது. குன்றிப்போய் நின்றாள்!
கீர்த்தனனுக்கும் அந்த நொடிகளைக் கடப்பது பெரும் கடினமாய்த்தான் இருந்தது. அவள் தனக்குள்ளேயே குன்றிப்போய் நிற்பதையும் காணச் சகியாமல், “இதையெல்லாம் சொல் என்று நான் கேட்டேனா? எதற்கு தேவையில்லாமல் உன்னை நீயே வருத்திக் கொள்கிறாய். போதும் சொன்னதெல்லாம்!” என்றான் அதட்டலாக.
“இல்லை கீதன். இன்றைக்கு மட்டும்.. இனிமேல் இல்லை..” என்றாள் கெஞ்சலாக.
“இன்றைக்கு மட்டுமில்லை இனிமேல் என்றைக்குமே நாம் இதைப்பற்றிக் கதைக்கவேண்டாம்!” என்றான் அவன்.
“ப்ளீஸ் கீதன்..”
அவளின் கெஞ்சலுக்கு முன்னால் அவனின் அதட்டல் எடுபடாமல் போனது.
“அன்று, எனக்கு அடைக்கலம் தந்து என்னை தேற்றி எனக்கு நல்வழியை காட்டிய நீக்கோவை எப்படியோ போ என்று என்னால் விட முடியவில்லை. இல்லாவிட்டாலும் அவன் என் நண்பன். எங்களுக்குள் அதுனால் வரையில் ஆண் பெண் என்கிற பேதமும் இருந்ததில்லை. நாங்கள் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். அதனால் தான் வீட்டுக்கு கூப்பிட்டேன். ஒரு குடும்பத்துக்குள் நான் இருந்திருந்தால் பிறகு நடந்ததெல்லாம் நடந்திருக்காது. அல்லது ஒரு வயதுக்கு வந்த பெண் தனியாக இருக்கும் தன் வீட்டுக்கு ஒரு ஆணை கூட்டிக்கொண்டு போகக்கூடாது என்று எனக்கு யாரும் சொல்லித் தந்திருந்தாலும் நான் அதை செய்திருக்க மாட்டேன். எனக்குத்தான் அதெல்லாம் தெரியாதே.” என்று பரிதாபமாக அவள் சொன்னபோது கீர்த்தனனுக்குத்தான் மனம் பாரமானது.
“அவன் இருந்த அந்த ஒரு வாரமும் மிகவும் சந்தோசமாகத்தான் கழிந்தது. ஆனால்.. விஸ்வாவின் மனைவிக்காக போலிசுக்கு அழைத்து சொன்ன அன்று, ‘உன்னை விடமாட்டேன், பழிவாங்குவேன், நிம்மதியாக இருக்க விடமாட்டேன்’ என்று விஸ்வா சொன்னதும் மொத்தமாக உடைந்துபோனேன் நான். ஏன் எல்லோருமே என்மேல் கோபத்தைக் காட்டுகிறார்கள் என்று தவித்துப்போனேன். அதுநாள் வரை மனதிலிருந்த கவலைகள் எல்லாம் விசிறிவிட்டதுபோல் வெடித்துக்கொண்டு வெளியே வந்தபோது என்னால் தாங்கவே முடியவில்லை. எவ்வளவைத்தான் நானும் தாங்குவேன் கீதன்? சாய்ந்து அழ நண்பனின் தோள் இருக்கிறது என்றதும் கதறிவிட்டேன். நான் கதறியதை பார்க்க முடியாமல் ஆறுதல் தான் சொன்னான் நீக்கோ. நான் அவனிடம் வேண்டியதும் அதே ஆறுதலைத்தான். பிறகு.. பிறகு.. நடந்ததெல்லாம் ஏன் எப்படி என்று எனக்கே தெரியாது. தப்புத்தான். பெரும் தப்புத்தான். ஆனால், அதை இருவருமே அறிந்து செய்யவில்லை. திட்டமிட்டுச் செய்யவுமில்லை.” என்று குன்றியவள், தவிப்போடு நிமிர்ந்து, “உங்களால் இதை புரிந்துகொள்ள முடிகிறது தானே கீதன்?” என்று விழிகளில் உயிரை தேக்கிக் கேட்டாள்.
கண்களில் தேங்கிவிட்ட நீரோடு, ‘என்னை நம்பு’ என்கிற இறைஞ்சளோடு, இதோ இதோ என்று உடையக் கத்திருந்தபடி கேட்டவளை பாய்ந்து சென்று அணைத்து ஆறுதல் சொல்லத் துடித்த மனதை பெரும் பாடுபட்டு அடக்கிக்கொண்டு நின்றான். அவனின் ஆறுதல் அவளை தடுத்துவிடக் கூடாது. அவள் சொல்ல நினைப்பதையெல்லாம் சொல்லி முடிக்கட்டும் என்று எண்ணி தலையை மட்டும் சின்னதாக மேலும் கீழுமாக அசைத்தான் கீர்த்தனன்.
“அன்பிலோ, ஆசையிலோ, காதலிலோ அது நடக்கவில்லை. தேவைக்காகவும் நடக்கவில்லை. அப்படி ஏதுமாக இருந்திருந்தால் நாங்கள் பிரிந்திருக்க மாட்டோம். அது ஒரு விபத்து. ஒரு பெண் எந்தத் தருணத்திலும் ஒரு அந்நிய ஆணிடம், அவன் உயிர் நண்பனாய் இருந்தால் கூட தன் கட்டுப்பாட்டை இழக்கக் கூடாது என்பதை எனக்கு உணர்த்திய பெரும் விபத்து! நீக்கோவும் கெட்டவனில்லை. எனக்கு தீங்கு நினைக்கிறவனும் இல்லை. ஆப்படியிருந்தும் அன்று அது எப்படி நடந்தது என்று எனக்கு இன்றுவரை தெரியவேயில்லை கீதன்.” என்றவள் விழிகளை இறுக மூடி அந்தக் கணங்களை கடக்க முயன்றாள்.
அடுத்த கணமே நிமிர்ந்து அவன் கண்களை நேராகப் பார்த்து, “வயதுக் கோளாரில் நான் அப்படி நடந்திருந்தால் அந்த உறவை, அந்த முறையற்ற வாழ்க்கையை என்னால் தொடர்ந்திருக்க முடியும். என்னை யாராலும் தட்டிக் கேட்டிருக்க முடியாது! இந்த நாடும், இந்த சமூகமும் அதை சாதாரணமாக ஏற்றுக்கொண்டிருக்கும். ஆனால் எனக்கு தேவை அதில்லை கீதன். என் தனிமையை போக்கி கடைசிவரை என்னோடு கூட வர ஒரு துணை! அதனால்தான் அவனிடம் திருமணம் செய்துகொள்வோம் என்று கேட்டேன்.” என்றவளின் விழிகளில் தெரிந்த நேர்மையில் கட்டுண்டு நின்றான் கீர்த்தனன்.

